PUBLISHED ON : நவ 29, 2026

கமலுக்கு மீண்டும் கடும் எதிர்ப்பு!
கடந்த 2003ல், சண்டியர் என்ற பெயரில் ஒரு படத்தில், கமல் நடிப்பதாக இருந்தது. அப்போது, அந்த பெயரால் இரண்டு சமூகங்களுக்கு இடையே பிரச்னை ஏற்படும் என, அரசியல் கட்சிகள் கூறியதால், சண்டியர் என்ற பெயரை, விருமாண்டி என்று மாற்றினார், கமல்.
இந்நிலையில், 23 ஆண்டுகளுக்குப் பின், தற்போது அதே, சண்டியர் என்ற பெயரில் நடிக்க போவதாக அறிவித்துள்ளார், கமல். இதற்கு சில அரசியல் கட்சிகள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், 'இந்த முறை, சண்டியர் பெயரிலிருந்து பின்வாங்க மாட்டேன். கண்டிப்பாக இதே தலைப்பில்தான் இந்தப் படத்தில் நடித்து, வெளியிடுவேன்...' என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார், கமல்.
— சினிமா பொன்னையா
தமிழ் ரசிகர்களை குறிவைக்கும், ஸ்ரீலீலா!
தெலுங்கு சினிமாவில், தன் அதிரடியான நடன அசைவுகளால், பெருவாரியான இளவட்ட ரசிகர்களைக் கவர்ந்தவர், தெலுங்கு நடிகை, ஸ்ரீலீலா.
தற்போது ரஜினியின், தர்மன் மற்றும் அஜித்தின், டேர் டெவில் ஆகிய இரண்டு தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இவ்விரண்டு படங்களிலுமே தெலுங்கு படபாணியை கையில் எடுத்திருக்கிறார்.
குறிப்பாக அவர் எதிர்பார்க்கும் அளவுக்கு அதிரடியாக குத்தாட்டம் போடக்கூடிய பாடல் காட்சிகள் இப்படங்களில் கிடைத்துள்ளதாம். அதனால், தமிழ் சினிமாவில் அதிகமாகப் பயன்படுத்தப்படாத, 'மூவ்மென்ட்'களை, தன் நடன அசைவுகளில் அதிகமாக வெளிப்படுத்தி, தமிழ்நாட்டு இளவட்ட ரசிகர்களைக் கிறங்கடிக்கப் போவதாக கூறி வருகிறார், ஸ்ரீலீலா.
— எலீசா
சிம்புவின் அடிதடி அவதாரம்
நீண்ட காலமாகவே, 'ரொமான்டிக்' நாயகனாக, சட்டையில் மண் ஒட்டாமல் நடித்து வந்த, சிம்பு, தற்போது, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும், அரசன் படத்தில், வடசென்னை ரவுடி வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்காக உடல் எடையைக் குறைத்து, அருவா, கம்பு, அடிதடி என, ரத்தக்களறியான காட்சிகளில் நடித்திருக்கிறார். 'இனி, என் படங்களில் கொஞ்சலான காதல் காட்சிகளுக்கு இடமில்லை. இதுபோன்று அதிரடியான சண்டைகளை வெளிப்படுத்தும் கதைகளில் மட்டுமே நடிப்பேன்...' என்கிறார், சிம்பு.
— சினிமா பொன்னையா
கருப்புப்பூனை!
படப்பிடிப்பை முடித்து, வீடு திரும்பியதும், 'ரிலாக்ஸ்' செய்வதற்காக, அவ்வப்போது மது அருந்தும் பழக்கமுள்ள தாரா நடிகை, சமீபகாலத்தில், அதிகமாக மது அருந்தி, கணவருடன் தகராறில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, வெளிநாட்டு மதுபானங்களை வீட்டின் அலமாரியில் வாங்கி வைக்கும் நடிகை, வீட்டிற்கு வரும் சினிமா நண்பர்களுக்கு, அவைகளை, கொடுக்கிறார். இதைப் பார்த்து, அவரது ஆத்துக்காரர் கோபத்தில் கொந்தளித்தால், 'நண்பர்களுடனான, 'பார்ட்டி' முடியும் வரை வீட்டிற்குள் தலைகாட்ட வேண்டாம்...' எனக் கூறி, அவரை வெளியேற்றி விடுகிறாராம்.
இதன் காரணமாக, அவ்வப்போது தாரா நடிகையின் வீட்டில் பூகம்பம் வெடித்துக் கொண்டிருக்கிறது.
சினி துளிகள்!
ரஜினி நடிக்கும் தர்மன் படத்தில், டாக்டர் வேடத்தில் நடிக்கிறார், நயன்தாரா.
விஜய் சேதுபதியின், பாக்கெட் நாவல், விஷாலின், புருஷன், ஆர்யாவின், வேட்டுவம் என, பல படங்கள் பொங்கல் தினத்தில், வெளியாக உள்ள நிலையில், அஜித்தின், கிளாடியேட்டர்ஸ் என்ற கார் ' ரேஸ்' தமிழ் ஆவணப்படமும், வெளியாகவுள்ளது.
தன் தாத்தா தனக்கு கொடுத்த ருத்ராட்ச மாலையை பொக்கிஷமாக பாதுகாத்து வருவதாக சொல்லும் நடிகை, சாய் பல்லவி, அந்த மாலை தன் மன அமைதிக்கு ஆதாரமாகவும், தியானத்துக்கு உறுதுணையாகவும் இருப்பதாக கூறுகிறார்.
கடந்த, 2013ல், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் நடித்த, ரெஜினா, மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படங்களில் நடிப்பதற்காக தீவிர முயற்சி எடுத்து வருகிறார்.
அவ்ளோதான்!
