sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

எல்லாரும் நல்லவரே!

/

எல்லாரும் நல்லவரே!

எல்லாரும் நல்லவரே!

எல்லாரும் நல்லவரே!


PUBLISHED ON : செப் 07, 2025

Google News

PUBLISHED ON : செப் 07, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்களை மூடிக் கொண்டிருந்தான், மகேஷ்.

ஏதோ ஒரு படத்தில் கேட்டிருந்த வசனம் மனதிற்குள் ஓடியது.

'நான் நல்லவனாக இருக்கவே விரும்புகிறேன். ஆனால், யாருக்கு அது பிடிக்கவில்லை என, தெரியவில்லை. எப்போதும், ஒரு முள் என் நெஞ்சில் குத்திக் கொண்டே இருக்கிறது...'

மகேஷின் மனைவி, யாமினி வந்து பக்கத்தில் உட்கார்ந்தாள். அவள் கையில் இருந்த தட்டில் ரவா பொங்கல், நெய் வாசனையுடன் கமகமத்தது. புதினா போட்டு அரைத்த, தேங்காய் சட்டினியின் தாளித்த வாசனை, அதனுடன் போட்டியிட்டது.

''சரசம்மா ஸ்பெஷல், ரவா பொங்கல். சாப்பிடுங்க மகேஷ்,'' என, மென்மையாக அவன் கையில் வைத்தாள், யாமினி.

கண்களைத் திறந்தானே தவிர, பார்வையில் உயிர்ப்பு இல்லை.

''சாப்பிடுங்க, மகேஷ். அப்புறம் சொல்லுங்க என்ன பிரச்னைன்னு.''

''மொதல்ல சொல்லிடறேன்,'' என்றான், மகேஷ்.

''சரி, யுவர் விஷ்.''

''என், 'டீமில்' ரெண்டு மாசத்துக்கு முன்னாடி சேர்ந்த பையன், சுனில். நல்ல குணம், புத்திசாலித்தனம். அவனுக்கு நான் ஒரு அநீதி செஞ்சுட்டேன். அதாவது, அவனை நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன், யாமினி,'' எனும்போது, அவன் குரல் தழைந்து ஒலித்தது.

''சொல்லுங்க, மகேஷ்.''

''இருபது நாட்களுக்கு முன், எங்க புராஜெக்ட், ஜெட் வேகத்தில் போய்கிட்டிருந்தது. உனக்கு கூட சொல்லியிருக்கேன். ஜெர்மனில இருந்து, ஒரு கார் கம்பெனி கொடுத்த புராஜெக்ட் அது. ரெண்டு நாள் தான் இருந்தது முடிக்க. எல்லாருமே, 'டென்ஷன்' ஆகத்தான் இருந்தோம்.

''அப்ப தான் இந்த, சுனில் வந்தான். 'அப்பாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை; போய் பாத்துட்டு வரணும்; ஒரு நாள் லீவு வேணும்'ன்னு கேட்டான். எனக்கு இருந்த கடுப்புல கத்திட்டேன். பயந்துட்டான். அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?''

மகேஷ் கண்களை மறுபடி மூடித் திறந்தான். அவள் பொறுமையாக கவனித்தாள்.

''அவங்கப்பா அன்னைக்கு இறந்துட்டாரு, யாமினி. இன்னைக்கு தான் வந்தான் வேலைக்கு. எல்லாரும் அவனை சூழ்ந்துகிட்டு பேசினாங்க, கைபிடிச்சு ஆறுதல் சொன்னாங்க. என்னால, அவன் முகத்தை பார்க்க முடியலே.

''உயிரற்ற அப்பாவைத் தான் அவன் பார்த்தான் என்பது, எனக்கு தெரியும். நான் ஏன் அவ்வளவு கொடியவனாக மாறிட்டேன்னு, நினைக்கும்போது எனக்கே அவமானமா இருக்கு.''

''இல்லே மகேஷ். அப்படி எல்லாம் இல்லே. நீங்க வேணும்ன்னு குரூரமா யாரையும் தடுக்கலே. 'டீம் மானேஜரா' உங்க பணி அது. அந்த மரணம் நிகழ்ந்திருக்க வேண்டாம் தான். ஆனால், எல்லா சூழலும் நம்ம கையில் இல்லையே!''

''நான் நினைச்சிருந்தா அவனுக்கு ஒரு நாள் லீவு கொடுத்திருக்க முடியும், யாமினி.''

''நீங்க என்கிறது, பொறுப்பான, 'டீம் இன்சார்ஜ்' என்ற பதவியும் சேர்ந்தது தான், மகேஷ். கம்பெனிக்கு செய்கிற, 'ஜஸ்டிஸ்' அது. நிச்சயமா, சுனிலுக்கு எதிரான மனநிலை இல்லை, அது.''

அவன் சமாதானம் ஆகவில்லை என, அவளுக்கு புரிந்தது. பெருமூச்சுடன் எழுந்து போனாள்.

எ ப்போதும் போகிற நடைப்பயிற்சி தான். காலை வேளை வானமும், லேசான குளிர் காற்றும் அன்றைய நாளின் அழகான துவக்கமாக இருந்தது.

அருகம்புல் ஜூஸ் விற்கும், அஞ்சலையம்மாவின் சுறுசுறுப்பும், கூடவே ஓடும் வேலுச்சாமியின் வேகமும் மனதிற்கு நல்ல உற்சாகத்தை தந்தது.

ஆனால், மனம் தான் வரவேற்கவில்லை. 'நீ மோசமானவன்...' என, முணுமுணுத்துக் கொண்டே இருந்தது. 'இவ்வளவு கல் நெஞ்சக்காரனாக இருந்து கொண்டு, வெளியில் நாடகம் போட்டாயா...' என, உறுமியது நெஞ்சம்.

'அய்யோ, ஏன் அப்படி செய்தான்? தந்தையின் முகம் கொடுத்த கடைசி ஜீவ தரிசனத்தை மகனுக்கு மறுத்த கொடூரன் அவன். சீச்சீ...'

''சார், சார்... நீங்க மகேஷ் தானே. குட் மார்னிங் சார்.''

குரல் கேட்டு திரும்பினான்.

இளம்பெண் ஒருத்தி நின்றிருந்தாள். எளிய தோற்றம். பருத்திப் புடவை, பாந்தமாக ரவிக்கை. கூந்தலை இழுத்து போட்ட கொண்டையும், சிரிக்கும் விழிகளும், கண்ணியமான புன்னகையும் அவளை காலை நேரத்தின் ஏதோ ஒரு பறவை போல தோற்றப்படுத்தின.

''ஆமாம், நான் மகேஷ் தான். நீங்க யாரும்மா?''

''உங்க பழைய ஆபிஸ் நந்தனத்தில் இருந்தது இல்லையா சார்?''

''ஆமாம்.''

''அப்போ கட்டட காவலாளி, முத்துமாரி இருந்தாரே. அவர் மகள் சார், நான். பி.எஸ்.சி., ஹோம் சயின்ஸ் சேருவதா இருந்தேன். நீங்க தான் அப்பாகிட்ட பி.எஸ்.சி., பார்மாசுடிகல்ஸ் படிக்க வைக்க சொன்னீங்க. அப்பாவும் சேர்த்து விட்டார்.

''இப்போ நான், மும்பையில் பெரிய, மருந்து கம்பெனி கம் ரிசர்ச் சென்டர்ல வேலை பண்றேன், சார். அப்பாவும் என்கூட சந்தோஷமா இருக்கார். எப்பவும் உங்களைப் பத்தி சொல்வார். நானும், உங்களை நிறைய பாத்திருக்கேன், சார். உங்க வீட்டுக்குக் கூட வந்திருக்கோம்.

''யாமினி அக்கா, என்கிட்ட அப்பப்ப பேசுவாங்க. இப்போ எங்க சொந்தக்காரங்க வீட்டு கல்யாணத்துக்காக வந்தோம். அதோ மண்டபம். உங்களைப் பாத்ததும் ஓடி வந்தேன், சார்.''

''அப்படியா? எனக்கு லேசா நினைவிருக்கு உன் அப்பாவை. உன் பெயர் என்னம்மா?''

''அபூர்வா, சார். என்னைக்கும் உங்களை மறக்க மாட்டேன், சார்; வரேன், சார். தாங்க்ஸ் ஏ மில்லியன், சார்.''

அழகாக கரம் கூப்பி வணக்கம் சொல்லி, அவள் நடந்த போது, மண்டபத்திலிருந்து நாயன ஒலி கேட்டது.

வீ டு வந்து சேர்ந்தான், மகேஷ். மொபைல் போனுடன் விரைந்து வந்தாள், யாமினி.

''எங்க சித்தப்பா லைன்ல இருக்கார், மகேஷ். சிங்கப்பூர் சித்தப்பா. கரெக்டா வந்துட்டீங்க, 'வாக்கிங்'ல இருந்து. இந்தாங்க பேசுங்க,'' என்றாள்.

''ஹலோ, மகேஷ் ஹியர். எப்படி இருக்கீங்க சித்தப்பா?'' என, காலணிகளை கழற்றினான்.

''நல்லா இருக்கேன் மாப்பிளே. உங்க தயவில் என் உயிர் இன்னும் உற்சாகமா உடலோடு ஒட்டி ஓடிக்கிட்டிருக்கு.''

''என்ன சித்தப்பா பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க?''

''ஆமாம் மாப்பிளே. எனக்கு, 'மாசிவ் அட்டாக்' வந்து, உடனடியா, 'ஹார்ட்' ஆபரேஷன் பண்ணாங்களே. ஓடி வந்து ரத்ததானம் பண்ணினது நீங்க தானே? நல்ல பழக்க வழக்கங்களோட ஆரோக்கியமா இருந்ததனால தானே உடனே ரத்தம் கொடுக்க முடிஞ்சது. தினம் உங்களை நினைச்சுகிட்டு தான் இருக்கேன் மாப்பிளே,'' என்றவரின் குரல் கரகரத்து வழுக்கியது.

''அதெல்லாம் மெடிக்கல் சயின்ஸ் சித்தப்பா. டாக்டர்கள் சாதனை. சரி, இப்போ ஆரோக்கியமா இருக்கீங்க இல்லையா?''

''ஆமாம், சந்தோஷமாவும் இருக்கேன். அடுத்த மாசம் எனக்கு, 70 வயசு முடியுது. ஒரு, 'கெட் டு கெதர்' வெச்சிருக்கோம். கண்டிப்பா வரணும், ரெண்டு பேரும். எனக்காக.''

''நிச்சயமா வருகிறோம், சித்தப்பா.''

''இங்க எல்லாருக்கும் உங்களை தெரியும். ஆர்வமாக இருக்காங்க பாக்கறதுக்கு.''

''சரி சித்தப்பா.''

அ ன்றைய காலை உணவு இடியாப்பமும், தேங்காய் பாலும். வெகு நாட்களுக்குப் பிறகு உட்கார்ந்து சாப்பிட்டான்.

''இன்னைக்கு எங்க ஸ்கூல்ல சயின்ஸ் எக்சிபிஷன், மகேஷ். முடிஞ்சா வாங்க,'' என்றபடி வந்தாள், யாமினி.

இளநீல சாப்ட் சில்க் புடவையும், அழகான ரவிக்கையும், மலர்ந்த முகமுமாக அழகாக இருந்தாள்.

''முயற்சி பண்றேன், யாமினி. யூ லுக் சோ க்யூட்.''

''இந்தப் புடவையோட அழகு அது. நினைவிருக்கா யார் வாங்கி கொடுத்ததுன்னு?'' என, புன்னகைத்தாள்.

''சட்டுனு நினைவுக்கு வரலே. நீயே சொல்லேன்.''

''நாம இருந்த பழைய, 'அப்பார்ட்மென்ட்'ல எதிர் வீட்டு, பெஞ்சமின் சார், ஷீபா அம்மா இருந்தாங்களே.''

''ஆமாம், ஆமாம்.''

''பிசினஸ் நொடிச்சு போய், ப்ளாட்டையும் வித்து, நகை எல்லாம் ஏலம் போய் ரொம்ப கஷ்டப்பட்டாங்க. அவர் வேற வழி இல்லாமல், ரியல் எஸ்டேட் ஆரம்பிச்சார். கடன் வாங்கித்தான். நீங்க தான், 'கியாரன்டி' கையெழுத்து போட்டீங்க.''

''ஓ ஆமாம். நல்ல மனுஷர் அந்த, பெஞ்சமின். கொளத்துாரில், ஆதரவற்றோர் இல்லம் வேற நடத்திகிட்டிருந்தார். நிச்சயமா அவரை கை கொடுத்து துாக்கணும்ன்னு நினைச்சு தான் கையெழுத்து போட்டேன். ரெண்டே வருஷத்தில் பிரமாதமா வந்துட்டார்.''

''ஆமாம், மகேஷ். வீட்டுக்கு வந்து, ரெண்டு பேரும் நமக்கு உடைகள், இனிப்புன்னு கொடுத்துட்டு நன்றி சொன்னாங்க. அப்போ கொடுத்த புடவை தான் இது,'' என்றவள், நெருங்கி வந்து அவனை அணைத்துக் கொண்டு சொன்னாள்...

''ஒரு மேன்மையான மனிதன், எனக்கு கணவராக கிடைத்ததற்கு சாட்சி, இந்த அழகான புடவை. எப்பவும் இதை பாதுகாப்பாக வெச்சிருப்பேன், மகேஷ். சரி, நான் கிளம்பறேன்,'' என்றாள்.

மகேஷ் எழுந்து தோட்டத்திற்குப் போனான்.

இருவாட்சியும், செம்பருத்தியும் அசைந்து வரவேற்றன. மலையிலிருந்து வந்த பனிக்காற்று முகத்தை வருடுவது போல ஒரு உணர்வு. உள்ளே தீபத்தின் மெல்லிய சுடர் எழும்பி, இதுவரை இருந்த இருளை அகற்றியது. 'எல்லாரும் நல்லவர் தான் ராஜா...' என, பாடுகிறது, குயில்.

சுனிலின் கைகளைப் பற்றி, அவன் தந்தை குறித்து பேச முடியும்; ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்ல முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

ம கேஷை ஓரக்கண்ணால் பார்த்தபடி, ஸ்கூட்டியை புன்னகையுடன் கிளப்பினாள், யாமினி.

'இது போதும், மகேஷ். உங்கள் மனநிலை இயல்புக்கு வந்து விட்டது. மனிதன் என்பவன் நல்லதும், கெட்டதும் சேர்ந்த கலவை தான். எவ்வளவுக்கு எவ்வளவு தீய எண்ணங்களை அடக்கி ஆள்கிறானோ, அந்த அளவுக்கு சீரான வாழ்க்கையை அடைகிறான். அவ்வளவு தான்.

'கொஞ்சம் திட்டமிட்டேன், மகேஷ். அபூர்வா மற்றும் சித்தப்பாவை உங்களுடன் பேச வைத்தேன். இந்த சேலை, உங்கள் பெரிய மனதுக்கான அங்கீகாரம் என, நினைவுபடுத்தினேன். அவ்வளவு தான். நீங்கள் மீண்டு விட்டீர்கள்...'

யாமினியின் வண்டி, ஒரு தேரைப் போல சாலையில் ரம்மியமாக ஓடத் துவங்கியது.

வி. உஷா






      Dinamalar
      Follow us