
அக்., 01 சிவாஜி கணேசன் பிறந்த நாள்
சிவாஜியுடன் நெருங்கி பழகியவரும், 25 படங்கள் அவருடன் நடித்தவருமான, நடிகர் விஜயகுமார், சிவாஜியுடனான தன் அனுபவங்களை நினைவு கூர்கிறார்:
நடிகர் திலகம், நடிப்பு சாம்ராட், ஷா இன் ஷா சக்கரவர்த்தி, நடிப்பு கிங், மோனார்க் என, எந்த பெயரில் அழைத்தாலும், அது, சிவாஜியின் நடிப்பு திறமையை முழுவதும் வெளிப்படுத்தாது. அவர் ஒப்பில்லாத ஒரு இமயம்.
கலைத்துறையில், எத்தனையோ நடிகர்கள் வந்திருக்கின்றனர்; இன்னும் வரப்போகின்றனர். ஆனால், நடிப்பில், சிவாஜி கணேசனுக்கு நிகர் அவரே தான். அவரின் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவனாக சொல்கிறேன். நடிப்பு என்று சொன்னால் மிகைப்படுத்துவது தான்; யதார்த்தமாக இருப்பது நடிப்பு அல்ல. இது தான் உண்மை.
சிவாஜி கணேசனை முதன் முதலில், நான் நேரில் பார்த்தது ஒரு, 'த்ரில்'லான அனுபவம். பட்டுக்கோட்டைக்கு அருகே உள்ள, நாட்டு சாலை தான், எங்கள் சொந்த ஊர். அங்கு பல நாடக கம்பெனிகள் இருந்ததால், நாடக சாலை என்ற பெயர் பெற்று, பிறகு அது, நாட்டு சாலையாக மருவியது. அங்கு இருந்த, டூரிங் தியேட்டரில் தினமும் ஒரு சினிமா பார்ப்பேன்.
கடந்த, 1959ல், கும்பகோணத்தில், சிவாஜியின், 'வீரபாண்டிய கட்டபொம்மன்' நாடகம் நடைபெற இருந்தது. சுற்றுவட்டார கிராமங்களுக்கு, 'அம்பாஸிடர்' காரில் சென்று, நாடகத்துக்கு விளம்பரம் செய்து, டிக்கெட் விற்றனர்.
நானும், என் நண்பர்களுமாக மொத்தம், 14 டிக்கெட்கள் வாங்கினோம். நாடகம் நடக்க இருந்த கும்பகோணத்திற்கு செல்ல, 40 கி.மீ., துாரம் சைக்கிளில் சென்றோம். சிவாஜி நாடகத்தை பார்க்க ஏராளமான மக்கள் குழுமி விட்டனர்.
ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் வந்ததை பார்த்து, அவர்களின் ஆர்வத்தை உணர்ந்து, அனைவரும் தன்னை கண்டு மகிழ வேண்டும் என்பதற்காக, கட்டபொம்மனாக முழு, 'மேக்-அப்' மற்றும் உடை அலங்காரத்தோடு காரை விட்டு இறங்கி, 1 கி.மீ., நடந்தே வந்தார், சிவாஜி.
கும்பகோணத்தில் திறந்தவெளி தியேட்டரில் நாடகம் நடைபெற்றது. அன்று தான், சிவாஜியை முதன் முதலாக அருகில் இருந்து நேரில் பார்த்தேன்.
இந்த மாதிரி புகழ்பெற வேண்டும் என, அப்போது என் மனதிற்குள் எண்ணம் எழுந்தது. அதை நிறைவேற்ற தீர்மானித்து, அடுத்த, இரண்டே நாட்களில் சென்னைக்கு கிளம்பினேன்.
எங்கள் குடும்பம் சற்று வசதியான குடும்பம். சென்னையில் வசித்து வந்த, என் அண்ணன் ராமச்சந்திரன் மற்றும் ஜோசியர் வையாபுரி இருவரின் உதவியோடு, சினிமா வாய்ப்பு தேடி, பல இடங்களுக்கு அலைந்தேன்.
கடந்த, 1960ல், சிவாஜி நடித்த, ஸ்ரீவள்ளி என்ற திரைப்படத்தில், பால முருகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முருகனாக, சிவாஜி நடித்தார். படத்தை இயக்கியவர், ராமண்ணா. சிவாஜி நடித்த படத்தில் நான் நடித்தேன் என்றாலும், எங்கள் இருவருக்கும், சேர்ந்த மாதிரியான காட்சிகள் இல்லை. எனவே, படப்பிடிப்பில், சிவாஜியை பார்க்க முடியவில்லை.
நடிப்பு திறமையை வளர்த்து, மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தேன். 'ராம பக்தி' என்ற நாடகத்தில், விநாயகராக நடித்தேன். என் அழைப்பை ஏற்று, நாடகம் பார்க்க வந்த நண்பர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
காரணம், விநாயகராக நடித்த எனக்கு முகம் மற்றும் உடல் முழுவதும் மறைக்கும் விதத்தில் பெரிய, 'மோல்ட்' மாட்டியிருந்ததால், என்னை அடையாளம் தெரியவில்லை.
ஒரு ஆண்டு காலம், பல முயற்சிகள் எடுத்தும், பலன் தராததால் திரும்பி ஊருக்கே போய் விட நினைத்தேன்.
அப்போது தான், இயக்குனர் பி.மாதவனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஏவி.எம்., ஸ்டுடியோவின், ஆறாவது தளத்தில் எனக்கு, 'மேக்-அப் டெஸ்ட்' எடுத்தனர்.
அப்போது, 'மேக்-அப் டெஸ்ட்டுக்கு எனக்கு அவர்கள் கொடுத்த உடை, ராமன் எத்தனை ராமனடி படத்தில், சிவாஜி அணிந்தது...' என, 'மேக்-அப்' போட்ட அண்ணன் கூறியதும் வியந்தேன்.
கேமராமேன் பி.என்.சுந்தரம் தான், கேமராவை இயக்கினார். சிவாஜி, முன்பு பேசி நடித்த நீண்ட வசனம் ஒன்றை கொடுத்து, நடிக்க சொன்னார். அதில் நான் தேறியதும், பி. மாதவன் இயக்கத்தில், பொன்னுக்கு தங்க மனசு என்ற படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தனர்.
'பஞ்சாட்சரம் என்ற என் இயற்பெயரை, விஜயகுமார் என, சூட்டினார், இயக்குனர் மாதவன். ராமன் எத்தனை ராமனடி படத்தில், கிராமத்தானாக இருக்கும், சிவாஜி, சென்னைக்கு வந்து பிரபல நடிகராகி பேரும், புகழும் பெறுவார். அப்படத்தில், சிவாஜி நடித்த பாத்திரத்தின் பெயர், விஜயகுமார்.
வீரபாண்டிய கட்டபொம்மன், திருவிளையாடல், கவுரவம், பாசமலர், கப்பலோட்டிய தமிழன் மற்றும் ராஜ ராஜ சோழன் ஆகிய படங்களில் இடம்பெற்ற கதாபாத்திரங்களை, சிவாஜியால் மட்டும் தான் சிறப்பாக செய்திருக்க முடியும்.
சிவாஜிக்கு பிடித்த உணவு, முள்ளங்கி சாம்பார், மீன் குழம்பு மற்றும் மட்டன் பிரியாணி. மிகவும் பிடித்தது, தஞ்சாவூர் சமையல்.
இயக்குனர் பாரதிராஜா இயக்கிய, கிழக்கு சீமையிலே படத்தை, பிரத்யேக காட்சியாக, சிவாஜிக்கு திரையிட்டு காட்டினர். படத்தைப் பார்த்த சிவாஜி, 'ரொம்ப பிரமாதமாக பண்ணி இருக்கேடா...' என, என்னை பாராட்டி, கட்டி அணைத்து, முத்தம் கொடுத்தார். சிவாஜியிடமிருந்து கிடைக்கும் உச்சகட்ட பாராட்டு அது தான்.
என் வாழ்வில் மறக்க முடியாத தருணம் அது. சிவாஜிக்கு ஈடுகொடுத்து பல நடிகையர் நடித்திருந்தாலும், அவருக்கு ஏற்ற பொருத்தமான ஜோடி என்றால், என்னைப் பொறுத்தவரையில், பத்மினி அம்மா தான்.
உத்தம புத்திரன், தெய்வப்பிறவி, அமர தீபம், பேசும் தெய்வம், தில்லானா மோகனாம்பாள், வியட்நாம் வீடு, குலமா குணமா? ஆகிய படங்களில் சிவாஜி - பத்மினி இருவரின் பிரமாத நடிப்பையும், ஜோடிப் பொருத்தத்தையும் பாராட்டாமல் இருக்க முடியாது.
ஞா யிற்றுக்கிழமை என்றாலே, சிவாஜியின், 'அன்னை இல்லத்தில்' ஸ்பெஷல் விருந்து நடைபெறும். குடும்பத்தினர், உறவினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு தடபுடலான சாப்பாடு பரிமாறப்படும். சுவையான ஐயிட்டங்கள் நிறைய இடம் பெறும். நான் பலமுறை அதை சாப்பிட்டு அனுபவித்து இருக்கிறேன்.
சென்னையில் படப்பிடிப்பு நடக்கும் போது, சிவாஜி வீட்டிலிருந்து குறைந்தது, 10 பேருக்கு சாப்பாடு வரும். இயக்குனர், சக நடிகர்கள், 'டெக்னீஷியன்'களோடு சேர்ந்து சாப்பிடுவார், சிவாஜி.
வாரத்திற்கு ஒருமுறை, அவர் வீட்டுக்கு சென்று அவரை சந்திப்பேன். சாப்பிட்ட பிறகு தான் அங்கிருந்து கிளம்ப முடியும். வேலை பளு காரணமாக, இரண்டு வாரங்கள் அவரை பார்க்க போகாவிட்டால், அவருக்கு கோபம் வந்து விடும். அதற்கு அடுத்த வாரம் அவரை சந்திக்கும் போது, ஐந்து நிமிடத்துக்கு பேச மாட்டார். நான் சந்திக்க வராததற்கு சரியான விளக்கம் தந்த பிறகே பேச ஆரம்பிப்பார்.
ஒரு சமயம், 'டேய் விஜயா, நீ எப்படிடா சினிமாவுக்கு வந்தே?' எனக் கேட்டார். அவர் நாடகம் பார்த்ததிலிருந்து, 'ஹீரோ'வாக ஆனது வரை, நான் விபரமாக சொன்னதை ரசித்து கேட்டார்.
'நானும், கட்டபொம்மன் நாடகத்தை தெருக்கூத்திலே பார்த்துதாண்டா. சினிமாவிற்கு வந்தேன்...' என்றார். நல்ல ஒற்றுமை, மேலும் ஒரு ஒற்றுமை, இருவருக்குமே சுவாமிமலை கோவிலில் தான் திருமணம் நடந்தது.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு பல ஆண்டுகள் தலைவராக இருந்து, அந்த பதவியை கவுரவபடுத்தினார், சிவாஜி. அவர் தலைமையில் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு, எம்.ஜி.ஆரால் திறந்து வைக்கப்பட்டது.
சி வாஜிக்கு, சபரிமலை அய்யப்பன் மீது தனி பக்தி உண்டு. ஒரு சமயம் அவர் வீட்டுக்கு நான் சென்றிருந்த போது, 'டேய் விஜயா, நாளைக்கு நாம இரண்டு பேரும் சபரிமலைக்கு போகிறோம். சீக்கிரம் வந்துவிடு...' என்றார். நான் ஏற்கனவே, நம்பியார் சாமி மற்றும் இயக்குனர் சங்கருடன் மூன்று முறை சபரிமலைக்கு சென்றிருக்கிறேன்.
காலை 6:00 மணிக்கு, அவர் வீட்டிற்கு சென்றேன். சென்னையிலிருந்து திருவனந்தபுரத்துக்கு விமானத்தில் சென்றோம். சிவாஜியின் நண்பரான, பா.ராமச்சந்திரன் அப்போது கேரளாவில் கவர்னராக இருந்தார்.
திருவனந்தபுரத்தில் கவர்னர் மாளிகைக்கு சென்று, அங்கு காலை சிற்றுண்டி சாப்பிட்டோம். போலீஸ் பாதுகாப்புடன், பம்பைக்கு சென்றோம். பம்பையிலிருந்து சபரிமலை சன்னிதானத்திற்கு நடந்து போக முடியும் என்றாலும், சிவாஜி இரண்டு டோலிக்கு, 'ஆர்டர்' செய்து விட்டார். நான்கு பேர் சுமக்கும் பல்லக்கு போன்ற அமைப்பு அது. எந்த சிரமமுமின்றி, சன்னிதானம் போய் சேர்ந்தோம்.
சன்னிதானத்திற்கு வெகு அருகில் எங்களுக்கு, 'காட்டேஜ்' ஏற்பாடு செய்திருந்தனர். சிவாஜி தயவில் எனக்கு திவ்யமான தரிசனம் கிடைத்தது. பிரசாதத்தை வாங்கிக் கொண்டு திரும்பினோம். ராஜ்பவனுக்கு சென்று கவர்னருக்கு நன்றி சொல்லி, விமானத்தில் சென்னை திரும்பினோம்.
இ ளைய தலைமுறை படத்தில், சிவாஜியும், நானும் குத்துசண்டை போடும் காட்சி வரும். 12 அடி உயர மேடை அமைத்திருந்தனர். சண்டை போடும் போது, காலில் கயிறு மாட்டி கீழே விழுந்து, கையில் எலும்பு பிசகு ஏற்பட்டு, 10 நாட்கள் படப்பிடிப்புக்கு போக முடியவில்லை. எனக்கு அடிபட்ட விஷயம், பத்திரிகைகளில் வந்து விட்டது.
பத்து நாட்களுக்கு பின், படப்பிடிப்பில் கலந்து கொள்ள, சத்யா ஸ்டுடியோவிற்கு போனேன். அப்போது, என்னைப் பார்த்து 'கை எப்படி இருக்கு?' எனக் கேட்டார், எம்.ஜி.ஆர்.,
'நம்மால், 'ஸ்டன்ட்' செய்ய முடியாது என்பதில்லை. 'ஸ்டன்ட்' செய்யும் போது, நமக்கு அடிபட்டு விட்டால், லட்சக்கணக்கில் பணம் செலவாகும். முதலாளிக்கு நஷ்டம். சக நடிகர்கள் மற்றும் 'டெக்னீஷியன்'களுக்கும் சிரமம். அவர்களுக்கு எல்லாம் நாம் தானே பொறுப்பு? ஜாக்கிரதையாக இருங்கள்...' எனச் சொல்லி, சண்டைக்காட்சிகளில் பாதுகாப்பாக இருக்க சில, 'டிப்ஸ்'களை கொடுத்தார், எம்.ஜி.ஆர்.,
'மயிலாப்பூரில், டப்பா செட்டி கடை என்ற, நாட்டு மருந்து கடை இருக்கிறது. அங்கு, கரியாகுலம் என, ஒரு மருந்து கிடைக்கும். அதை சட்டியில் போட்டு, மெதுவாக காய்ச்சி, எலும்பு பிசகு ஏற்பட்ட பகுதியில் உபயோகிக்க வேண்டும்...' என, விளக்கினார், எம்.ஜி.ஆர்.,
தான் குறிப்பிட்ட பொருட்களை ஒரு உதவியாளர் மூலம் வாங்கச் செய்து, அன்று மாலையே எனக்கு கிடைக்கும்படி செய்தார், எம்.ஜி.ஆர்., சக நடிகர் மீது அவர் கொண்ட அக்கறை வியக்க வைத்தது.
சிவாஜியின் வலது கையாக விளங்கிய அவரது தம்பி, வி.சி.சண்முகம் மறைவு, சிவாஜியை மிகவும் பாதித்தது. துக்கம் விசாரிக்க, சிவாஜி வீட்டுக்கு வந்த, எம்.ஜி.ஆர்., என்னிடம், 'சிவாஜி ஏதாவது சாப்பிட்டாரா?' எனக் கேட்டார்.
'எதுவும் சாப்பிடவில்லை....' என்றேன்.
'கொஞ்சம் பழரசமாவது அவரை குடிக்க செய்யுங்கள். எவ்வளவு நேரம் தான் இப்படி இருப்பார்...' என்றார், எம்.ஜி.ஆர்., அதன்பின், சிவாஜியை கட்டாயப்படுத்தி, பழரசம் குடிக்க வைத்தோம்.சிவாஜியும், எம்.ஜி.ஆரும், நமக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்று தான் சொல்ல வேண்டும்.
விஜயகுமாரை, 'டேய் விஜயா...' என்றே அழைப்பார், சிவாஜி. சிவாஜியை, 'அண்ணே...' என, அழைப்பார், விஜயகுமார். வேறு யாரும் அவரை, விஜயா என, அழைத்ததில்லை. சி வாஜியை கதாநாயகனாக வைத்து ஒரு படம் தயாரித்திருக்கிறார், விஜயகுமார். படத்தின் பெயர், நெஞ்சங்கள். படத்தை இயக்கியவர், மேஜர் சுந்தர்ராஜன்.
விஜயகுமார், நடிகர் திலகத்துடன், 25 படங்களில் நடித்திருந்தார். இளைய தலைமுறை, பைலட் பிரேம்நாத், தீபம், நீதிபதி, திருப்பம், நேர்மை, தீர்ப்பு, கவரி மான், சிரஞ்சீவி, சந்திப்பு போன்றவை அதில் அடங்கும்.
விஜயகுமார் நடித்து, பெரிய அளவில் பாராட்டுகள் பெற்ற, நாட்டாமை திரைப்படத்தை தெலுங்கு நடிகர் மோகன் பாபு, தெலுங்கில், பெத்த ராயுடு என்ற பெயரில் தயாரித்தார். படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. நாட்டாமை படத்தில், விஜயகுமார் செய்த பாத்திரத்தை, தெலுங்கில் நடித்தவர், ரஜினிகாந்த். 'அந்த வேடத்தில் நான் நடிக்க விரும்புகிறேன்...' என, உரிமையோடு கேட்டு வாங்கி நடித்தார், ரஜினிகாந்த்.
- எஸ். ரஜத்