PUBLISHED ON : அக் 05, 2025

அந்த ஊருக்கு புதிதாக ஞானி ஒருவர் வந்திருந்தார். அந்த ஊரின் ஒதுக்குபுறத்தில் குடில் ஒன்று அமைத்து அமைதியாக வாழ்ந்து வந்தார்.
அவர் மற்ற மனிதர்களைப் போலவே எல்லா வேலைகளையும் செய்து வந்தார். ஊர்மக்களுடன் சேர்ந்து விவசாயம் செய்வார்; நெசவு நெய்வார்; கூடை முடைவார்; பானைகள் செய்வார்; சுமை துாக்குவார். இவ்வாறு பல வேலைகளை செய்து வந்தார்.
அதில் கிடைக்கும் வருமானத்தை, தன்னுடைய தினசரி செலவுக்குப் போக, மீதியை அன்றே தான, தர்மத்திற்கு அளித்து விடுவார்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவர், அவரிடம், 'ஞானியாகிய நீங்கள் ஏன் மனிதர்களாகிய நாங்கள் செய்யும் வேலைகளை எல்லாம் செய்கிறீர்கள். பிறகு உங்களுக்கும், எங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடுமே...' என்றார்.
'நானும் உங்களைப் போல் வேலை செய்வதற்கு காரணம், உலக நன்மைக்குத்தான்...' என்றார், ஞானி.
'நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை; விளக்கிக் கூறுங்கள்...' என்றார், முதியவர்.
'நான் வேலை ஏதும் செய்யாமல், மனிதர்கள் அளிக்கும் உணவை உண்டு, சும்மா இருந்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்தால், ஊரில் உள்ள எல்லாருக்கும், 'நாமும் இந்த ஞானியைப் போல் இருந்துவிட்டால், காலம் முழுவதும் எந்த வேலையும் செய்யாமல் மரியாதையோடும், கவுரவத்தோடும் சொகுசாக வாழலாம் என்ற தவறான எண்ணம் வந்து விடும்.
'மேலும், எல்லா மனிதர்களும், எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருந்து விட்டால், இந்த உலகமே ஸ்தம்பித்து போய் விடும். அதனால் தான், நானும் சாதாரண மனிதர்களை போல வேலை செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு, வாழ்ந்து வருகிறேன்.
'இப்போது என்னைப் பார்க்கும் மக்கள், 'இந்த ஞானியே வேலை செய்து வாழும் போது, நாம் சும்மா இருந்தால் அது அவமானம் இல்லையா...' என்றெண்ணி, தத்தம் வேலைகளில் கவனம் செலுத்துவர். உலகிற்கு வழிகாட்ட விரும்பியே, பற்றற்று என் கடமைகளை செய்கிறேன்...' என, விளக்கம் தந்தார், ஞானி.
ஞானியைப் போற்றி பாராட்டினார், முதியவர்.
உயர்ந்தவர்கள் தங்களது கடமைகளை மறந்தால், சிறியவர்களும் தங்கள் கடமைகளை செய்யாமல் விட்டு விடுவர்.
உபதேசம் செய்பவர் ஞானியல்ல; அந்த உபதேசத்தை தானும் கடைபிடித்து மற்றவர்களையும் கடைபிடிக்க செய்பவரே, உண்மையான ஞானி!
அருண் ராமதாசன்
ஆன்மிக அறிவோம்!
சி வபெருமானுக்கு, அகில், சந்தனம், பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, கோரோசனை, ஜவ்வாது மற்றும் புனுகு ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது சிறப்பு.