PUBLISHED ON : நவ 09, 2025

பணக்காரன் ஒருவன், தன் சொத்துக்களை மேற்பார்வையிட்டு, நிர்வகிக்க ஒரு பணியாளரை, நியமித்திருந்தான். அப்பணியாளிடம், 'அந்த சொத்துக்கள் யாருடையது?' என்று யாரேனும் கேட்டால், 'அவையாவும் தன்னுடையது தான்!' என்று இறுமாப்போடு பதில் கூறுவான்.
பணக்காரனின் வீடு, மனை, தோட்டம் யாவும் தன்னுடையதே என்ற எண்ணத்தோடு, வீண் கர்வம் கொண்டிருந்தான், பணியாள்.
அந்த, பணக்காரன் தனக்கு சொந்தமான குளத்தில், ஏராளமான மீன்களை வளர்த்து வந்தான்.
அந்த குளத்தில், 'தன் அனுமதியில்லாமல் யாரும் வலைவீசி மீன்களைப் பிடிக்கக் கூடாது என்றும், அதை மீறி மீன்களைப் பிடிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு...' என்று பணியாளிடம் எச்சரிக்கை விடுத்திருந்தான், பணக்காரன்.
ஒருநாள், அந்த உத்தரவை மீறி, குளத்தில் வலைவீசி, மீன்களைப் பிடித்துக் கொண்டிருந்தான், பணியாள். எதிர்பாராத விதமாக அந்த வழியே வந்த, பணக்காரன், பணியாள் தன் உத்தரவை மீறி மீன்களைப் பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டான். அவனது கண்கள் கோபத்தால் சிவந்தன.
அவனது அயோக்கியத்தனத்தைப் பொறுக்க முடியாத பணக்காரன், அவனைப் பதவியிலிருந்து நீக்கியதோடு, வீட்டை விட்டும் துரத்தினான். அது மட்டுமல்லாமல், பணியாளை மிகவும் அவமானப்படுத்தி, அவன் இதுவரை சேர்த்து வைத்திருந்த பணத்தையும் பிடுங்கி கொண்டான்.
முன்பு, பணக்காரனின் சொத்து முழுவதும் தன்னுடையது என்று பொய் பிரசாரம் செய்து வந்த பணியாளனின் நிலை, இப்போது தலைகீழாய் மாறிவிட்டது. அவனுடைய மமதையே அவனைப் பழிவாங்கி விட்டது.
அவன், தனக்குச் சொந்தமான செம்புத் தவலைகளை ஓர் ஓட்டைப் பெட்டியில் போட்டு வைத்திருந்தான். அந்த அற்பமான ஓட்டைப் பெட்டி கூட அவனுக்கு நிலைக்க வழியில்லாமல் போய்விட்டது.
உலகில் உள்ள பொருட்கள் யாவும் இறைவனுக்குச் சொந்தமானவை. நம் உடலும், உயிரும் கூட அவனுக்குச் சொந்தமானதுதான். அப்படியிருக்கும் போது அதையெல்லாம் மறந்துவிட்டு யாவும், தன்னுடையது... என்று சொந்தம் கொண்டாடி, வீண் கர்வம் கொண்டு வாழ்வதை ஆண்டவன் பொறுத்துக் கொள்ள மாட்டார் என்பதை உணர்ந்தான், பணியாள்.
அகந்தையை அடக்கி, உண்மையை உணர வைப்பவன் ஆண்டவன்.ஆகவே ஆணவம் அழிவைத் தரும் என்ற உண்மையை உணர்ந்து செயல்பட வேண்டும்!
அருண் ராமதாசன்

