PUBLISHED ON : டிச 14, 2025

அ து ஓர் அடர்ந்த காடு. அந்தக் காட்டில், மரம் ஒன்றில், முட்டையிட்டிருந்தது, ஒரு பச்சைக்கிளி.
கிளி இரை தேட சென்றிருந்த சமயத்தில், கூட்டிலிருந்து ஒரு முட்டை தவறி கீழே விழுந்து உடைந்தது, அதிலிருந்து, ஒரு கிளிக்குஞ்சு வெளியே வந்தது.
அங்கு வந்த வேடன் ஒருவன் தற்செயலாக, அந்த கிளிக்குஞ்சை பார்த்தான்.
கிளிக்குஞ்சை வேறு பறவைகள் பார்த்தால், அதைக் கொன்று தின்றுவிடும்! எனவே, இதை தானே எடுத்துச் சென்று வளர்க்கலாம், என்று நினைத்து, தன் குடிசைக்கு எடுத்துச் சென்றான்.
சிறிது நேரம் சென்றதும், மீண்டும் அதே மரத்திலிருந்து வேறொரு முட்டை தவறிக் கீழே விழுந்தது, அதிலிருந்தும் ஒரு கிளிக்குஞ்சு வெளியே வந்தது.
அப்போது, அந்த வழியாக முனிவர் ஒருவர் வந்தார். அவருக்கு கிளிக்குஞ்சின் ஆதரவற்ற நிலை புரிந்தது.
எனவே, அதனைத் தன் ஆசிரமத்திற்கு எடுத்துச் சென்று வளர்க்க ஆரம்பித்தார், முனிவர்.
நாட்கள் சென்றன, ஒருநாள் வேட்டையாட காட்டிற்கு வந்தான், நாட்டின் அரசன். அவனுக்கு மிகுந்த தாகம் ஏற்பட்டது. எனவே, தண்ணீரைத் தேடி காட்டில் அலைந்தான்.
துாரத்தில் ஒரு குடிசை தென்பட்டது. அது வேடனின் குடிசை. அரசன் சென்றபோது வேடன் அங்கு இல்லை. வேடன் வளர்த்த கிளி மட்டுமே இருந்தது.
அரசன் வருவதைக் கண்டு, 'திருடன் வருகிறான்! அவனைக் கட்டி உதைக்க வேண்டும்...' என்று அநாகரிகமான சொற்களைப் பேசியது, கிளி.
கிளியின் பண்பாடற்ற சொற்களைக் கேட்டு, வெறுப்புற்று, அங்கிருந்து அகன்றான், அரசன்.
சிறிது துாரத்தில் முனிவரின் ஆசிரமம் தென்பட, அங்கு சென்றான், அரசன். அப்போது, முனிவர் ஆசிரமத்தில் இல்லை; அவர் வளர்த்த கிளி மட்டுமே இருந்தது.
அரசன் வருவதைக் கண்ட கிளி, 'ஐயா, வாருங்கள், வாருங்கள். தங்களுக்கு நல்வரவு. முனிவர் வெளியில் சென்றிருக்கிறார். அவர் இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடுவார். நீங்கள் உள்ளே வந்து ஆசனத்தில் அமருங்கள். களைப்பு நீங்க குளிர்ந்த நீர் குடித்து, பழங்கள் சாப்பிட்டு, பால் அருந்துங்கள். பின்பு படுத்துச் சற்று ஓய்வெடுங்கள்...' என்று கூறி, அரசனை வரவேற்றது.
கிளியின் பண்புமிக்க சொற்களைக் கேட்டு மிகவும் மன மகிழ்ந்தான், அரசன்.
இரண்டு கிளிகளும் ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகள் தான். ஆனாலும், இரண்டு கிளிகளுக்கும் தான் எவ்வளவு வேறுபாடு! இந்த வேறுபாட்டிற்கு அவை வளர்ந்த சூழ்நிலையும், பயிற்சியும் தான் காரணம். நாம் நல்லவர்களாக வாழ விரும்பினால் மட்டும் போதாது; நல்லவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். தீயவர்களின் தொடர்பையும், தீய பழக்கங்களையும் தவிர்க்க வேண்டும். உயர்ந்தவர்களுடன் கொள்ளும் தொடர்பு, உயர்ந்தவர்களாக ஆக்கும். தீயவர்களுடன் கொள்ளும் தொடர்பு, தீயவர்களாக மாற்றும்!
அருண் ராமதாசன்

