PUBLISHED ON : ஜன 04, 2026

இரண்டு நண்பர்கள், ஒரு துறவியிடம் வந்து, தாங்கள் இருவரும் பாவங்கள் செய்தவர்கள் என்றும், அதற்கு பிராயச்சித்தம் தேடி வந்திருப்பதாகவும் கூறினர்.
அந்த இருவர் செய்த குற்றங்களை விபரமாகக் கேட்டார், துறவி.
முதலாமவன், 'ஐயா, என்னுடைய ஆத்திர புத்தியினால், என் தோழன் ஒருவன் இறக்க காரணமாகி விட்டேன். என் மனசாட்சி என்னை மிகவும் துன்புறுத்துகிறது. அந்தச் செயலை நினைத்து நான் நாள்தோறும் வேதனைப் படுகிறேன்...' என்று சொல்லி அழுதான்.
இரண்டாமவன், 'ஐயா, நான் பெரிய குற்றம் ஏதும் செய்யவில்லை. சிறிய சிறிய குற்றங்களாக பல செய்திருக்கிறேன். அதனால், அவற்றையெல்லாம் என்னால் ஞாபகம் வைத்துக்கொள்ள இயலவில்லை...' என்றான்.
சிறிது நேரம் யோசனை செய்தார், துறவி.
முதலாமவனை பார்த்து, 'உன்னால் சுமக்கக்கூடிய அளவுக்கு ஒரு பெரிய கல்லாகப் பார்த்து துாக்கிக்கொண்டு வா...' என்றார், துறவி.
இரண்டாமவனை பார்த்து, 'ஒரு கோணிப்பை நிறைய சிறிய கற்களை போட்டு கொண்டுவா...' என்றார்.
இருவரும், துறவி கூறியபடியே செய்தனர்.
முதலாமவனை பார்த்து, 'நீ எடுத்து வந்த கல்லை எடுத்த இடத்திலேயே போட்டுவிட்டு வா...' என்றார், துறவி.
முதலாமவன், அப்படியே செய்தான்.
பிறகு, இரண்டாமவனை பார்த்து, 'நீ கொண்டு வந்த கற்களை எங்கெங்கு எடுத்தாயோ அங்கங்கே போட்டு விட்டுவா...' என்றார்.
இரண்டாமவன் விழித்தான். எங்கு, எந்த கல்லை எடுத்தேன் என்பதை கண்டுபிடிக்க இயலாது என்று கூறினான்.
'அன்பர்களே, பாவங்களும், இந்த கற்களைப் போன்றவை தான். பெரும் பாவம் செய்தவன் மனம், பெரிய கல்லை போலவே அழுத்திக்கொண்டே இருக்கும். அவன் அதை உணர்ந்து, வருந்தும் போது, அந்தப் பாவத்தை மன்னித்து விடுவார், கடவுள்.
'எண்ணற்ற சிறிய சிறிய பாவங்களைச் செய்தவன், தான் என்ன பாவம் செய்தோம் என்பதை எண்ணிப் பார்க்க முடியாமல், நித்தமும் வருந்துவதால், எப்போதும் பாவியாக இருக்கிறான்.
'பாவங்கள் சிறியவையாயினும், பெரியவையாயினும் பாவம் பாவமே. அதை நினைத்து மனப்பூர்வமாக திருந்தி, கடவுளிடம் மனம் உருகி, முறையிட்டால் அவர் மன்னிப்பார். கடவுள் மிகவும் கருணையுடையவர்...' என்றார், துறவி.
குற்ற உணர்வை அகற்ற விரும்பும் ஒருவர், முதலாவதாக, தன்னிடம் உள்ள குற்ற உணர்வு என்ன என்பதை உணர வேண்டும். எவ்வளவு விரைவில் புரிந்து கொள்கிறோமோ, அவ்வளவு விரைவில் அகற்ற முற்படலாம். மனித செயல்பாடுகளில், தவறுகள் செய்வது இயல்பு. படிப்படியாக அவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளலாம். மறப்போம், மன்னிப்போம். இது, பிறருக்கு மட்டுமல்ல, நமக்கும் பொருந்தும். எதையும் முழுமையாக சரிவர செய்ய இயலவில்லையே என, வருந்தாமல், இயன்ற வரை சரியாக செய்தோம் என, மனநிறைவு அடைவோம். தவறு பெரியதோ சிறியதோ, செய்த தவறை உணர்ந்து வருந்தி திருந்துவது மிக முக்கியம்!
அருண் ராமதாசன்

