PUBLISHED ON : ஜன 11, 2026

ஓர் ஊருக்கு, சாமியார் ஒருவர் வந்தார். அவர் நன்றாகப் பேசக் கூடியவர். சத்சங்கத்தை பற்றி அடிக்கடி வலியுறுத்தி சொல்வார். சத் என்றால், நல்ல என, பொருள். சங்கம் என்பது சேர்க்கை அதாவது நல்லவர்களோடு சேர்ந்திருப்பது. நல்லார் இணக்கம் என்று சொல்வார்.
ஒரு நாள், ஊர் மக்களிடம், 'நான் ஓர் அற்புதம் செய்து காட்டுகிறேன்...' என்று கூறி, ஊர் மக்களை ஒரு குளத்தங்கரைக்கு அழைத்துச் சென்றார், அந்த சாமியார். ஒரு சிறிய கல்லை எடுத்துக் குளத்தில் போட்டார். அது நீரில் அமிழ்ந்து விட்டது.
'கல் எங்கே?' என்று கேட்டார், சாமியார்.
'நீரில் அமிழ்ந்து விட்டது...' என்றனர், அருகில் இருந்த ஊர் மக்கள்.
'கல் நீரில் மிதக்குமா?' என்றார், சாமியார்.
'மிதக்காது...' என்று பதில் வந்தது.
'இத்தனை சிறிய கல்லே நீரில் அமிழ்ந்து விட்டதே. ஒரு பெரிய கல்லைத் தண்ணீரின் மேல் மிதக்கச் செய்ய முடியுமா?' என்றார்.
'முடியவே முடியாது!' என்றனர்.
'நான் மிதக்கச் செய்கிறேன். அந்த அற்புதத்தை தான் இப்போது செய்து காட்ட எண்ணுகிறேன்...' என்று, சாமியார் சொன்னதைக் கேட்டு எல்லாரும், 'அது எப்படி முடியும்?' என்று தமக்குள் யோசிக்கத் துவங்கினர்.
உடனே, ஒரு பெரிய குண்டுக் கல்லை கொண்டுவரச் சொன்னார், சாமியார். சில பேர் அதை உருட்டிக் கொண்டு வந்தனர்.
அவருடன், இரண்டு சிஷ்யர்கள் இருந்தனர். அவர்களிடம் அங்கே கிடந்த பெரிய மரக்கட்டையை உருட்டிக் கொண்டு வரச் சொன்னார். அதைக் குளத்திற்குள் உருட்ட செய்தார். அது குளத்தில் மிதந்தது. அதன்மேல் அந்தக் குண்டுக் கல்லைத் துாக்கி வைக்கும்படி சொன்னார். அவ்வாறே செய்தனர். மரக்கட்டை சிறிது தண்ணீரில் ஆழ்ந்தாலும், அதன் மேல் இருந்த கல் அமிழவில்லை.
குண்டுக் கல் அமிழாமல் மிதந்ததைக் கண்ட ஊர் மக்கள் ஆச்சரியப்படவில்லை. 'இதுதானா?' என்றனர்.
'முன்னே போட்ட சிறிய கல் தண்ணீருக்குள் அமிழ்ந்ததா, மேலே மிதந்ததா?' என்று கேட்டார், சாமியார்.
'அமிழ்ந்து போயிற்று...' என் றார், ஒருவர்.
'இந்தப் பெரிய கல் அமிழ்ந்ததா?'
'இல்லை, ஆனால்...'
'ஆனால், என்பதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். கல் நீரில் அமிழ்ந்து போகாமல் நீரின் மேல் இருக்கிறதா, இல்லையா?'
'ஆம், இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லையே. மரக்கட்டை மிதக்கிறது. அதன் மேல் கல் இருப்பதால் அது நீரில் அமிழவில்லை...' என்றார், அந்த நபர்.
'அப்படியானால், கல், கட்டையாக மாறிற்றா? அதன் கனம் குறைந்து விட்டதா?' என கேட்டார், சாமியார்.
'இல்லை...' என்றார்.
'கல் கல்லாகவே இருந்தாலும், கட்டையின் சார்பினால் நீரின் மேல் மிதக்கிறது அல்லவா?'
'ஆம்!'
'கல் தனியாக இருப்பதாலும், எவ்வளவு சிறியதாக இருந்தாலும், குறைந்த கனமுடையதானாலும் தண்ணீரில் ஆழ்ந்து விடும். ஆனால், எவ்வளவு கனமுள்ள கல்லானாலும் மிதக்கும் மரக்கட்டையோடு சேர்ந்தால் அதுவும் மிதக்கும். அதுபோல, எவ்வளவு பொல்லாதவராக இருந்தாலும், நல்லவர்களுடன் சேர்ந்தால் அவர்களும் அறியாமை என்றும் நீரில் மூழ்கமாட்டார்கள். சத்சங்கம் அவ்வளவு சிறப்பானது...' என்றார், சாமியார்.
சாமியார் பேச்சைக் கேட்டு யாவரும் வியந்தனர்.
இப்படித்தான் இயல்பாக பிரபஞ்ச சேற்றுள் அமிழ்கிற தன்மை படைத்தவராக ஒருவர் இருந்தாலும், அதில் மூழ்காமல் மிதக்கும் சாதுக்களைச் சேர்த்தால், அவர் பிரபஞ்ச சேற்றி ல் அமிழாமல் இருக்கும் வழி பிறக்கும்.
அருண் ராமதாசன்

