PUBLISHED ON : ஜன 18, 2026

பஞ்ச பாண்டவர்களுக்கும். கவுரவர்களுக்கும் போர் நடந்து கொண்டிருந்தது. போரில், மிகவும் சிறந்த வீரனாகப் புகழ் பெற்றிருந்தான். அர்ஜுனன். எனினும், சுவுரவர்களிலும் சிறந்த வீரர்கள் இருந்தனர். அவர்களை ஜெயிப்பது எளிதான காரியமன்று என்பதை நன்றாக அறிந்திருந்தான், அர்ஜுனன்.
'பாசுபத அஸ்திரம் மட்டும் இருந்தால், எனக்கு வெற்றி கிடைப்பது நிச்சயம்...' என்று நினைத்தான். அர்ஜுனன்.
சிவபெருமானுக்கு, பசுபதி என்று இன்னொரு பெயர் உண்டு. பாசுபத அஸ்திரம் சிவபெருமானிடம் இருந்தது. அதை வில்லிலே தொடுத்துப் பிரயோகித்து விட்டால், வேறு எந்த அம்போ, அஸ்திரமுமோ அதை எதிர்த்து வந்து தடுக்க முடியாது. 'பசுபதியைப் பூஜிப்பேன்; பாசுபத அஸ்திரம் பெறுவேன்...' என்று உறுதியெடுத்தான், அர்ஜுனன்.
அவசரமாகப் புறப்பட்டான், அர்ஜுனன். அதைக்கண்ட கண்ணன், 'நண்பா, எங்கே போகிறாய்?' என்று கேட்டார்.
‛சிவ பூஜை செய்யப் போகிறேன்...' என்றான், அர்ஜுனன்.
'அந்தப் பூஜையை எனக்கே செய்துவிடு... என்று, கண்ணன் கட்டளையிட, சற்றுத் திகைத்து நின்றான், அர்ஜுனன்.
பிறகு, 'கண்ணன் சொல்லை மறுப்பது எப்படி?' என்று நினைத்து, பூஜைக்காக வைத்திருந்த பூக்களை, கண்ணன் மீதே அர்ச்சனை செய்து, பூஜித்தான், அர்ஜுனன்.
இரவில், உறக்கம் பிடிக்க நெடு நேரமானது, அர்ஜுனனுக்கு, சிவ பூஜை செய்யாமல், அந்த பூஜையை நண்பனான, கண்ணனுக்கு அல்லவா செய்துவிட்டோம்? என்ற கவலை தூக்கம் வராததற்குக் காரணம். நடுதிரியில் களைத்துப்போய் உறங்கி விட்டான், அர்ஜுனன்.
கனவில், சிவபெருமான் தோன்றி, கண்ணன் மீது அவன் அர்ச்சனை செய்த பூக்களையெல்லாம். சிவபெருமான் மீது இருப்பதை கண்டான், அர்ஜுனன்.
'நான் சிவ பூஜை பண்ணினேனா, எப்போது? அந்தப் பூக்கள், சிவன் திருமேனியை அலங்கரிப்பதற்கு காரணம் என்ன? என்று திகைத்தான். அப்போது, சிவபெருமான் பாசுபத அஸ்திரத்தை அவனுக்கு அளித்து மறைந்து போகிறார். கண் விழித்து பார்த்தான், அர்ஜுனன். தான் கண்ட கனவு நினைவிற்கு வந்தது. பாசுபத அஸ்திரமும் தன் அருகில் இருப்பதைக் கண்டான்.
அர்ஜுனனின் உள்ளம் தெளிவுற்றிருந்தது; முகம் மலர்ச்சி பெற்றிருந்தது. 'சிவன் வேறு, கண்ணன் வேறு என்று நான் நினைத்தது தவறு; இரு உருவத்திலும் இருப்பது, ஒரே தெய்வம் தான்...' என்ற உண்மையை அறிந்து, கண்ணனை நாடிச் சென்றான், அர்ஜுனன்.
தேடப் போன மருந்து எதிரே வந்தது போல் கண்ணெதிரே வந்தார், கண்ணன். அஸ்திரம் கிடைத்ததா, பூஜை பலித்ததா?' என்று கேட்டார்.
‛அஸ்திரத்தோடு, இரு தெய்வங்களும் ஒன்றே என்ற உண்மையும் எனக்கு புரிந்தது...' என்று பதில் சொன்னான், அர்ஜுனன்.
இறைவளின் சக்தி, பல வடிவங்களில் இருந்தாலும், அனைத்தும் ஒரே மூலத்தின் வெவ்வேறு வடிவங்கள் தான்.
அருண் ராமதாசன்

