/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
ஞானானந்தம்: தெய்வம் இருப்பது எங்கே?
/
ஞானானந்தம்: தெய்வம் இருப்பது எங்கே?
PUBLISHED ON : மார் 08, 2026

ஓர் ஊரில் கந்தன் என்பவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு கடவுள் பக்தி அதிகம்; எல்லாருக்கும் உதவும் எண்ணம் உடையவன்.
ஒரு நாள் கடவுளை நேரில் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம், கந்தனுக்கு தோன்றியது. எனவே, அவன் கடவுளிடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்தவன், அப்படியே உறங்கிப்போனான்.
அப்போது, அவன் கனவில், கடவுள் தோன்றி, 'அன்பனே! நாளை நான், உன் வீட்டிற்கு வருகிறேன்...' என்று கூறினார்.
மறுநாள் எழுந்தவுடன், கடவுள் என், வீட்டிற்கு வருவதாக சொல்லியிருக்கிறார்... 'அவர் வரும்போது, அறுசுவை உணவு செய்து, சாப்பிட கொடுக்க வேண்டும், ஒரு புதிய ஜோடி செருப்பு மற்றும் நல்ல சால்வை அளிக்க வேண்டும்...' என்று நினைத்தான், கந்தன்.
அவன் நல்ல எண்ணத்தை சோதித்து பார்க்க நினைத்தார், கடவுள்.
அன்று காலையில் இருந்தே கடவுளை வரவேற்க தயாராக இருந்தான், கந்தன்.
அப்போது, ஏழைப்பெண் ஒருத்தி அவன் வீட்டின் அருகே நடந்து வந்த போது, மயக்கமடைந்து கீழே விழுந்து விட்டாள்.
அந்த பெண்ணை மயக்கம் தெளிய வைத்து, விசாரித்த போது, வறுமை காரணமாக, இரண்டு நாட்களாக சாப்பிடாததே மயங்கி விழக் காரணம் என, தெரிந்தது, கந்தனுக்கு. உடனே கடவுளுக்காக தயாரித்திருந்த உணவை அவளுக்கு சாப்பிட கொடுத்தான். அவளும் வயிறார சாப்பிட்டு, கந்தனுக்கு நன்றி சொல்லி, சென்று விட்டாள்.
மதியம் ஆனது, தன் வீட்டிற்கு கடவுள் வருவார், என்று எதிர்பார்த்துக் காத்திருந்தான், கந்தன்.
அப்போது, அவன் வீட்டிற்கு, பிச்சைக்காரன் ஒருவன் வந்து, 'ஐயா! வழியெங்கும் கல்லும் முள்ளுமாக இருக்கிறது. நடக்க கஷ்டமாக இருக்கிறது. ஏதாவது பழைய செருப்பு இருந்தால் கொடுத்து உதவுங்கள்...' என்று, கந்தனிடம் வேண்டினான்.
அவன் கால்களைப் பார்த்தான், கந்தன். கல்லும் முள்ளும் குத்தி, நடக்கவே பலம் இல்லாமல் இருந்தது. உடனே, கடவுளுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த புதிய செருப்பை அவனிடம் கொடுத்து விட்டான். மிக்க மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட, பிச்சைக்காரன், அவனை வாழ்த்தி, நன்றி கூறி சென்றான்.
மாலை நெருங்கியது... இன்னும் கடவுள் வரவில்லை!
பனி காற்று வீச ஆரம்பித்தது... அப்போது குளிரில் நடுங்கியபடியே, தெருவில் நடந்து வந்தார், முதியவர் ஒருவர்.
அவரைக் கண்ட கந்தன், 'இந்த முதியவர் குளிரில் கஷ்டப்படுகிறாரே... எப்படி இவர் பனி காற்றை சமாளிப்பார்...' என்று எண்ணி, வீட்டிற்குள் சென்று, கடவுளுக்காக வைத்திருந்த சால்வையை எடுத்து வந்து அந்த முதியவருக்கு போர்த்தி விட்டான். அவரும், கந்தனுக்கு நன்றிசொல்லி, வாழ்த்தி சென்றுவிட்டார்.
இரவும் வந்தது...
'வீட்டிற்கு இன்று வருவதாக சொன்ன கடவுள், ஏன் இன்னும் வரவில்லை...' என்று நினைத்து, மனம் வருந்தினான், கந்தன்.
அப்போது, வானத்திலிருந்து அசரீரியாக கடவுள் பேசியது அவன் காதில் ஒலித்தது...
'நான் மூன்று முறை உன் வீட்டிற்கு வந்தேன்; நீ, கொடுத்தவற்றையும் பெற்றேன். ஆம், நீ எனக்கு கொடுக்க வைத்திருந்தவற்றை, ஏழைப் பெண்ணுக்கும், பிச்சைக்காரனுக்கும், முதியவருக்கும், கொடுத்து உதவியது நீ எனக்கே கொடுத்தது போல் தான்!' என்றார். அதைக்கேட்டதும் ஆச்சரியமும், சந்தோஷமும் அடைந்தான், கந்தன்.
கடவுளுக்கு சேவை செய்ய விரும்புபவர்கள், முதலில் அவருடைய குழந்தைகளாகிய இந்த உலகில் உள்ள மனிதர்களுக்கு தொண்டு செய்ய வேண்டும். இந்தத் தர்மத்தை ஒருவன் சரியான முறையில் பின்பற்றினால், அவனுக்கு கடவுள் ஆசியும், முக்தியும் வந்து சேரும்!
அருண்ராமதாசன்

