PUBLISHED ON : மார் 29, 2026

தன் ஒரே குழந்தை இறந்து விட, பெரும் துயரத்தில் மூழ்கியிருந்தாள், குழந்தையின் தாய்.
அப்போது, அவள் தன் குழந்தைக்கு மீண்டும் உயிர் கொடுக்கும்படி, மருத்துவர்களையும், பக்திமான்களையும் அணுகினாள். ஆனால், அவர்களால் முடியவில்லை.
அங்கிருந்த, மகானின் பக்தர் ஒருவர், உன் குழந்தை உயிர் பெற மகானிடம் சென்று, பிரார்த்திக்கும்படி, அவளிடம் யோசனை சொன்னார்.
அவ்வாறே, மகான் வசித்த இடத்திற்கு, சென்று, 'என் இறந்த குழந்தையை உயிர்ப்பிக்க வேண்டும். அதற்காக இறைவனிடம் பிரார்த்தியுங்கள்...' என்று மகானிடம் வேண்டினாள்.
வேண்டுதலை ஏற்று, அவள் குழந்தையின் உடல் இருந்த, வீட்டிற்கு வந்தார், மகான். அவர் வருகையை அறிந்த மகானின் பக்தர்கள், பெரும் கூட்டமாக வீட்டின் முன் நின்றனர்.
இறந்த குழந்தையை உயிர்ப்பிக்க அவர், பிரார்த்தித்தார். ஆனாலும், குழந்தை உயிர் பிழைக்கவில்லை.
குழந்தையின் தாய் பெரும் ஏமாற்றம் அடைந்து, பலமாக அழத் துவங்கினாள். அந்த தாயின் வேதனையை கண்டு மனம் இரங்கிய மகான், மீண்டும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து, குழந்தையின் உடலைப் பார்த்து, 'குழந்தையே, எழுந்து வா...' என்றார்.
அப்போது தாய்க்கும், அங்கே கூடி இருந்தவர்களுக்கும் ஆனந்த அதிர்ச்சி ஏற்பட்டது.
குழந்தை மீண்டும் உயிர் பெற்று, துாக்கத்தில் இருந்து எழுவது போல, தன் தாயிடம் ஓடி வந்தது.
மகான்கள் அனைவரும், இறைவனின் மறு வடிவங்களே!
நமக்கு வேண்டியதை அவர்களிடமும் முறையிடலாம். சித்தர்கள் மற்றும் ஞானிகள் போன்ற மகான்களை வழிபடுவது, நேரடியாகக் கடவுளை வழிபடுவதற்கு சமமாகக் கருதப்படுகிறது. பக்தர்கள், இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் மைல்கற்களாகவும், வாழ்க்கையை நல்வழிப்படுத்தும் வழிகாட்டிகளாகவும் திகழ்கின்றனர், மகான்கள்.
தங்களை வழிபடும் அடியவர்களுக்கு ஞானத்தையும், சாந்தமான வாழ்க்கையையும் அருளுகின்றனர்.
அவர்கள் கள்ளம் கபடமற்ற, துாய உள்ளம் கொண்டவர்களாகவும், வினைகளை அறுப்பவர்களாகவும் இருக்கின்றனர்.
சுருக்கமாகச் சொன்னால், மகான்கள் இறைவனையே, சதா நேரமும் நினைத்து, இறைவனுக்கே உரிய குணங்களைப் பெற்று, மண்ணில் வாழ்கின்றனர்!
அருண் ராமதாசன்

