PUBLISHED ON : ஜூன் 28, 2026

ஷீரடி ஸ்ரீ சாயி பாபா, இந்தியாவின் புகழ் பெற்ற மகான். அவர், மகாராஷ்டிர மாநிலம், ஷீரடியில் உள்ள துவாரகா மாயி மசூதியில் வசித்து வந்தார். உபாசனி மஹராஜ் என்பவர், அவருடைய சீடர்.
ஷீரடியின் புறநகர் பகுதியில் இருக்கும், கண்டோபா ஆலயத்தில் வசித்து வந்தார், உபாசனி மஹராஜ். அவர் பாபாவின் கட்டளைப்படி, தினமும் மதிய உணவு தயாரித்து, துவாரகா மாயி மசூதிக்கு, கொண்டு வருவது வழக்கம். பாபா உணவருந்திய பின் தான் அவர் உணவும், நீரும் எடுத்துக் கொள்வார்.
ஒருநாள், அவரிடம், 'நீ வசிக்கும் கோவிலில் யாராவது உன்னை தேடி வருகின்றனரா?' என்று கேட்டார்.
'பாபா, அப்படி யாரும் வருவதில்லை...' என்றார், உபாசனி மஹராஜ்.
'நல்லது. எப்பவாவது, நான் உன்னிடம் வருவேன்...' என்று, மஹராஜிடம் கருணையுடன் கூறினார், பாபா.
ஒருநாள், நண்பகல் நேரம். உபாசனி மஹராஜ் மதிய உணவை, பாபாவுக்காக கொண்டு சென்று கொண்டிருந்தார். கரிய நிறத்தில் ஒரு நாய் அவரைத் திடீரென வழி மறித்தது. அது மிகவும் பசியுடன் இருந்தது.
'முதலில் பாபாவுக்கு உணவு தர வேண்டும். அதற்கு பின், நாய்க்கு உணவு கொடுப்பது தான் சரி. முதலில் கொடுப்பது முறையாகாது...' என்று நினைத்த, மஹராஜ், சிறிது துாரம் சென்றதும், அவர் மனம் மாறியது. திரும்பிப் பார்த்து நாயைத் தேடினார். ஆனால், அது மறைந்து விட்டது.
அவர் நடந்து சென்று மசூதியை அடைந்து, பாபாவை சந்தித்தார். 'இந்தக் கடும் வெயிலில், நீ இத்தனை துாரம் வர வேண்டிய அவசியம் என்ன? நான் வழியிலேயே உன்னைச் சந்தித்தேனே...' என்று, அவரிடம் கூறினார், பாபா. அவர் இப்படி கூறியதும், உபாசனி மஹராஜுக்கு வழியில் கண்ட நாயின் நினைவு வந்தது. அதற்கு உணவளிக்காமல் வந்த தன் தவறுக்காக பெரிதும் வருந்தினார்.
அடுத்த நாளும், மஹராஜ் வழக்கம் போல உணவுடன் புறப்பட்டார். வீட்டின் அருகே ஏழை ஒருவர் உணவு தரும்படிக் கேட்டார். ஆனால், மஹராஜ் அவர் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. விரைவாக மசூதியை நோக்கி நடந்து வந்து, பாபாவிடம் சென்றார், 'இன்றும் நீ தேவையில்லாமல் கஷ்டப்பட்டிருக்கிறாய். நான், உன் வீட்டின் அருகிலேயே நின்று கொண்டிருந்தேன். ஆனால், நீ, என்னைப் பார்ப்பதில் அக்கறை கொள்ளவில்லை...' என்று கூறினார், பாபா.
இப்போது, சீடரின் கண்கள் பாபாவினால் திறக்கப்பட்டன. 'நானே உன் முன், நாயாகவும், ஏழையாகவும் வந்தேன். ஒரே பரமாத்மா தான் இவர்கள் அனைவரிடமும் வசிக்கிறார். எனவே, நீ அனைவரையும் சம நோக்குடன் காண வேண்டும். எப்போதும் சரியான செயல்களையே செய்ய வேண்டும். அது தான் மிக உயர்ந்த தர்மம்...' என்று கூறினார், பாபா.
இறைவன் எல்லா உயிர்களிலும் வசிக்கிறார். அனைவரிடத்திலும் இறைவனைக் காண முயற்சிக்க வேண்டும்!
அருண் ராமதாசன்
