PUBLISHED ON : ஜூலை 05, 2026

மகாபாரதப் போரில், பாண்டவர்கள் வென்றனர். அதன் அடையாளமாக வீரர்கள் முரசொலி எழுப்பினர்; சங்கை முழங்கினர்.
அப்போது அர்ஜுனன், 'என் வில்லின் ஆற்றலால் தான் வெற்றி கிடைத்தது...' என்று ஆணவம் கொண்டான். 'சாட்சாத் ஸ்ரீகிருஷ்ணனே என் தேரோட்டி!' என்ற பெருமிதமும், அவனது ஆணவத்தை அதிகமாக்கியது.
மகாபாரத போர் துவங்கியதிலிருந்து கடைசி வரை ஸ்ரீகிருஷ்ணர், அர்ஜுனனின் தேரோட்டியை போலவே நடந்து கொண்டார்.
போரின்போது, ஒவ்வொரு நாளும் அவர்கள் போர் முடிந்து மாலையில் தங்களது பாசறைக்குத் திரும்புவர். அப்போது, அர்ஜுனன் முதலில் தேரிலிருந்து இறங்குவான். அதன்பின், ஸ்ரீகிருஷ்ணர் இறங்குவார். அதுவே வழக்கமாக இருந்தது.
போர் முடிந்த கடைசி நாளன்று, அந்த வழக்கத்தை மாற்ற நினைத்தான், அர்ஜுனன். எனவே, அவன், 'ஸ்ரீகிருஷ்ணா! நீ முதலில் தேரிலிருந்து இறங்கு. அதன்பிறகு நான் இறங்குகிறேன்...' என்று கூறினான்.
அதை, ஸ்ரீகிருஷ்ணர் ஏற்கவில்லை. மாறாக, 'அர்ஜுனா... வழக்கம்போல் நீயே தேரிலிருந்து முதலில் இறங்கு...' என்று கூறினார், ஸ்ரீகிருஷ்ணர்.
ஆனால், ஸ்ரீகிருஷ்ணர் கூறியதுபோல் செய்ய, அர்ஜுனனுக்கு விருப்பமில்லை. எனினும், மீண்டும், ஸ்ரீகிருஷ்ணர் கூறியதால் வேறு வழியில்லாமல், அர்ஜுனன் தேரிலிருந்து முதலில் இறங்கினான். பின்னர், ஸ்ரீகிருஷ்ணர் இறங்கினார்.
அவர் இறங்கியது தான் தாமதம், அர்ஜுனன் பார்க்கும்போதே தேரின் உச்சியில் இருந்த, அனுமன் அங்கிருந்து பறந்து சென்றார்; தேர் தீப்பற்றி எரிந்தது.
பதற்றத்துடன், 'ஸ்ரீகிருஷ்ணா! ஏன் தேர் திடீரென தீப்பற்றி எரிகிறது?' என்று கேட்டான், அர்ஜுனன்.
அதற்கு, 'போரில் துரோணர், கர்ணன் முதலிய வீரர்களின் அம்புகளும், ஆயுதங்களும் தேரைத் தாக்கின. அதனால், அதில் நெருப்பு புகுந்திருந்தது. இதுவரையில் நான் தேரில் இருந்ததால், தேரை, அக்னி பகவான் எதுவும் செய்யாமல் இருந்தார்; அந்த ஆயுதங்களின் வலிமையும் அடங்கியிருந்தது. இப்போது போர் முடிந்து விட்டது. இனிமேல் நான் தேரில் உட்கார மாட்டேன் என்று அறிந்ததும், தேரில் இருந்த ஆற்றல் வெளிப்பட்டு தேரை எரித்தது...' என்றார்.
ஸ்ரீகிருஷ்ணரின் விளக்கத்தை கேட்ட, அர்ஜுனனின் ஆணவம் அழிந்தது. ஸ்ரீகிருஷ்ணரிடம், 'என்னை மன்னித்துவிடு. சற்று ஆணவம் கொண்டுவிட்டேன்...' என்று கூறினான், அர்ஜுனன்.
இறைவன் அருளால்தான் நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அதை அறியாமல் அஞ்ஞானம் காரணமாக, 'நாம் செய்தோம், நாம் செய்தோம்!' என்று ஆணவம் கொள்கிறோம். அவனன்றி ஓரணுவும் அசையாது. இறைவன் செயலால் தான் அனைத்தும் நடைபெறுகின்றன!
அருண் ராமதாசன்
