PUBLISHED ON : ஜூலை 12, 2026

ஓர் ஊரில், அறிவும், ஆர்வமும் கொண்ட புத்திசாலி சிறுவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனது மனதில் ஓர் ஆசை ஏற்பட்டது. வாழ்க்கையில், யாராவது ஒரு பெரிய மனிதரை சந்தித்து, அவரிடம் வேலை செய்ய வேண்டும் என்பது தான் அது.
ஒருநாள் அவ்வூர் தலைவர், அந்த சிறுவனின் வீட்டிற்கு அருகில் வந்தபோது, அனைவரும் அவரிடம் மரியாதையாக நடந்து கொள்வதை கண்டான்.
'இவர் உண்மையிலேயே பெரிய மனிதர்!' என்று எண்ணிய சிறுவன், மறுநாள் அந்த ஊர் தலைவரை அணுகி, அவரிடம் வேலை செய்ய விரும்புவதாக தெரிவித்தான். அவரும், அவனை வேலையில் சேர்த்துக் கொண்டார். சிறுவன் அங்கே பணிவுடன் சேவை செய்யத் துவங்கினான்.
சில நாட்களுக்கு பின், ஊர் தலைவர் அரசரை சந்திக்கச் சென்றார். சிறுவனும் அவருடன் சென்றான். அரசரின் முன், ஊர் தலைவர் மிகவும் பணிவாக நடந்துகொள்வதை கவனித்தான், சிறுவன்.
'ஊர் தலைவரைவிட, அரசர் இன்னும் பெரியவர் போல...' என்று நினைத்து, அரசருக்கு சேவை செய்ய விரும்பி, ஊர் தலைவரிடம் அனுமதி வாங்கினான்.
'சரி, அரசரிடம் செல்! நன்றாக சேவை செய்து, எனக்கும் நல்ல பெயர் வாங்கிக் கொடு...' என்று சொல்லி, அவனை அரசரிடம் அனுப்பி வைத்தார், ஊர் தலைவர்.
அரசரிடம் சேவை செய்யும்போது, அரசர் ஒருநாள், பேரரசரிடம் சென்று கப்பம் கட்டுவதை பார்த்தான்,சிறுவன்.
'இவர் தான் அனைவரிலும் மிகப் பெரியவர்!' என்று எண்ணி, அரசரிடம் அனுமதி பெற்று, பேரரசரிடம் வேலைக்கு சேர்ந்தான், சிறுவன்.
ஒருநாள், ஒரு முனிவரை சந்தித்து மிகுந்த மரியாதையுடன் வணங்கினார், பேரரசர். அதைக் கண்ட சிறுவன், 'இவரைவிடவும் பெரியவர் இருக்கிறாரா?' என்று எண்ணி மிகவும் ஆச்சரியமடைந்தான்.
முனிவரை அணுகி பணிவுடன் சேவை செய்யத் தொடங்கினான், சிறுவன்.
'நீங்கள் தான் அனைவரிலும் மிகப் பெரியவர். நீங்களே தலைசிறந்த எஜமானர்...' என்று முனிவரிடம் கூறினான், சிறுவன்.
சிரித்தபடி, 'இல்லை குழந்தாய். அனைவரிலும் பெரியவர் பகவான் தான். நானும், இவ்வுலகிலுள்ள அரசர்களும் மற்றவர்களும், ஏன் தேவர்களும்கூட, அவருக்குக் கீழ்ப்படிந்தவர்கள் தான். இறைவனின் திருநாமத்தை உச்சரித்து, அவரது உபதேசங்களை அறிந்து கொண்டால், நீ எப்போதும் அவரது சேவையில் இருப்பாய்...' என்று கூறி அருளினார், முனிவர்.
உண்மையை உணர்ந்த சிறுவன், 'பகவானின் சேவையே தலைசிறந்த சேவை!' என்பதைப் புரிந்து கொண்டான்.
அன்று முதல் அவன் ஒரு சிறந்த பக்தனாக மாறினான்.
குறுகிய வட்டத்தில் அணுகும்போது, யாரேனும் ஒருவரை நாம் எஜமானராக நினைக்கலாம். ஆனால், ஆழமாகப் பார்க்கும்போது, அத்தகு எஜமானர்கள் ஒவ்வொருவரும் யாரோ ஒருவருக்குக் கீழ்ப்படிந்தவர்களாகவே உள்ளனர். ஆகவே, கேள்வி ஞானமுடைய புத்திசாலி மனிதன், இறைவனை உணர்ந்து, அவரது பக்தித் தொண்டில் ஈடுபட வேண்டும்!
அருண் ராமதாசன்
