தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஞானானந்தம்: பொருட்காட்சி சாலை!

ஞானானந்தம்: பொருட்காட்சி சாலை!

ஞானானந்தம்: பொருட்காட்சி சாலை!


PUBLISHED ON : ஜூலை 19, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 19, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரசர் ஒருவர், தன் நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொண்டு, தலைநகரில் பொருட்காட்சி சாலை ஒன்றை அமைத்து, 'அதில் மக்களுக்கு தேவையான பொருட்கள் எப்போதும் இருக்க வேண்டும். அனைவரும் தங்களுக்கு தேவையானவற்றை தேவையான அளவு இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும்...' என்று எண்ணினார்.

உடனே, அதிகாரிகளை அழைத்து, தன் எண்ணத்தைக் கூறி, 'அப்படிப்பட்ட பொருட்காட்சியை அமைக்க தேவையான ஏற்பாடுகளை செய்யுங்கள்...' என்று உத்தரவிட்டார், அரசர். அதன்படி அவர்களும், உலகமே வியக்கும் வகையில் அந்தப் பொருட்காட்சியை அமைத்தனர்.

நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் மக்கள் பெரும் கூட்டமாக பொருட்காட்சிக்கு வந்தனர். தேவையான பொருட்களை இலவசமாக எடுத்துச் சென்றனர்.

பாட்டி ஒருத்தியும் பொருட்காட்சியை பார்க்க வந்தாள். எல்லாப் பொருட்களையும் பார்த்தாலும் அவள் எதையும் எடுத்துக்கொள்ளவில்லை.

அவளிடம், 'பாட்டி! ஏன் எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை? உங்களுக்கு எதுவும் பிடிக்கவில்லையா?' என்று வியப்புடன் கேட்டனர், அதிகாரிகள்.

அதற்கு அந்தப் பாட்டி, 'எந்தப் பொருளும் எனக்கு வேண்டாம். நான் அரசரை பார்க்க வேண்டும்...' என்றாள்.

அரசரிடம், பாட்டியின் விருப்பத்தைத் தெரிவித்தனர், அதிகாரிகள். யானை மீது ஏறி பாட்டி இருந்த இடத்திற்கு வந்தார், அரசர்.

யானை மீது இருந்தபடியே, 'பாட்டி! நான் இதோ வந்துவிட்டேன். என்ன விஷயம்?' என்று கேட்டார்.

அதற்கு, 'யானை மேலிருந்து முதலில் கீழே இறங்கி வாருங்கள். பிறகு சொல்கிறேன்...' என்றாள், பாட்டி. கீழே இறங்கி, பாட்டியின் அருகில் வந்தார், அரசர்.

உடனடியாக அரசரின் கையை பிடித்துக்கொண்டு, 'மகனே! எனக்கு நீதான் வேண்டும்...' என்று கூறினாள், அந்த பாட்டி.

பாட்டி கூறியதைக் கேட்ட, அரசரும், மற்றவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

'ஏன் அப்படி கூறுகிறீர்கள் பாட்டி?!' என்று கேட்டார், அரசர்.

'எனக்குப் பொருட்காட்சியில் எதுவும் வேண்டாம். எனக்கு நீதான் வேண்டும்! நான் உன் பாட்டி! உன்னை என் பேரனாக அடைந்தால், இந்த நாட்டையே அடைந்தவளாவேன்...' என்றார்.

பாட்டி கூறியதை ஏற்றார், அரசர். தன்னுடன் பாட்டியை அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவள் தங்கவும் ஏற்பாடுகளைச் செய்தார்; தன் தாயைப் போன்று கவனித்துக் கொண்டார்.

அந்த அரசர் போன்றவன் இறைவன்; பொருட்காட்சி போன்ற இந்த உலகத்தை இறைவனே அமைத்துள்ளான். பணம், பதவி, பொருட்கள் என்று விரும்பியதை எடுத்துச் சென்று அனுபவிக்கின்றனர், மக்கள். சிறந்த பக்தனைப் போன்றவள், அந்தப் பாட்டி. உலகப் பொருட்களை நாடாமல் அரசரையே வேண்டியவள் அவள். உலகியல் விஷயங்களை விரும்பினால் அவை கிடைக்கலாம்; அவற்றைத் துறந்தால், உயர்ந்த இறைவனை அடையலாம். அப்படிப்பட்ட பக்திக்கு அனன்ய பக்தி என்று பெயர். அது, இறை வனைத் தவிர வேறு எதையும் வேண்டாத பக்தி!

அருண் ராமதாசன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us