PUBLISHED ON : ஜூலை 26, 2026

அரசர் ஒருவர், காட்டிற்கு வேட்டையாட சென்றார். பலத்த மழை வந்ததால், குடிசை ஒன்றில் ஒதுங்கினார்.
அந்தக் குடிசையில் இருந்த ஏழை விறகு வெட்டி, வந்தவரை வரவேற்று, குடிப்பதற்கு கூழ் வழங்கினான்.
வந்திருப்பவர் அரசர் என்பது, விறகு வெட்டிக்குத் தெரியாது. அரசரும் தன்னைப் பற்றி, விறகு வெட்டியிடம் எதுவும் தெரியப்படுத்தவில்லை.
மழை நின்றதும், விறகு வெட்டியிடம் விடைபெற்று, தன் நாட்டிற்குத் திரும்பினார், அரசர்.
'ஏழையான அந்த விறகு வெட்டி மிகவும் நல்லவன். அவனுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும்...' என்று எண்ணிய, அரசர், அவனை அரண்மனைக்கு அழைத்து, அன்புடன் உபசரித்து, அவனது குடிசையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை நினைவூட்டி நன்றி கூறினார். அப்போது தான், விறகு வெட்டிக்கு தன் குடிசைக்கு வந்தவர் அரசர் என்பது தெரியவந்தது.
விறகு வெட்டியிடம், 'ஐயா! தங்களது குடிசைக்கு அருகில் சந்தன மரங்கள் கொண்ட ஒரு பெரிய காடு உள்ளது. அந்தக் காட்டை நான் தங்களுக்குத் தருகிறே ன். அதைக்கொண்டு தாங்கள் சுகமாக வாழலாம்...' என்று கூறினார், அரசர்.
சி ல ஆண்டுகள் கடந்தன...
அரசருக்கு விறகு வெட்டியின் நினைவு வந்தது. 'விறகுவெட்டி தற்போது பெரிய செல்வந்தனாக ஆகியிருப்பான். அவன் மகிழ்ச்சியாக வாழ்வதைக் காண வேண்டும்...' என்று எண்ணி, அவன் வீட்டிற்குச் சென்றார், அரசர்.
விதி யாரை விட்டது! விறகுவெட்டி முன்பு போலவே, தன் குடிசையில் கூழ் அருந்தியபடி அமர்ந்திருந்தான்!
விறகு வெட்டியிடம், 'தங்களுக்குச் சந்தன மரங்கள் கொண்ட காட்டையே கொடுத்தேனே... இருந்தும், தாங்கள் ஏன் அதே ஏழ்மை நிலையில் இருக்கிறீர்கள்?' என்று கேட்டார், அரசர்.
அதற்கு, 'உண்மைதான் அரசே... நீங்கள் அளித்த காட்டில் இருந்த சந்தன மரங்களைக் கண்ட என் நண்பன், 'காட்டில் உள்ள அனைத்து மரங்களையும் வெட்டி விற்க நீண்ட காலம் ஆகும். அதற்கு அதிகமாக வேலையும் செய்ய வேண்டும். எனவே, காட்டிற்கு தீ வைத்துவிடு; மரங்கள் எரிந்து கரியாகி விடும். பிறகு கரியை மொத்தமாக விலைபேசி விற்கலாம்...' என்று யோசனை கூறினான்.
'அவன் கூறியபடியே நான் காட்டை எரித்து கரியாக்கி விற்றேன். கிடைத்த பணமும் செலவாகிவிட்டது. எனவே, மீண்டும் பழையபடி வறுமையில் இருக்கிறேன்...' என்றான், விறகு வெட்டி.
சந்தன மரக் கட்டையின் மதிப்பு தெரியாத விறகு வெட்டியின் மூடத்தனமான செயலைக் கேட்ட, அரசர் மிகவும் வருந்தினார்.
இறைவனும் அந்த அரசரைப் போன்று, விலைமதிப்பற்ற மனிதப்பிறவி என்னும் சந்தன மர காட்டையே, மனிதர்களுக்குக் கொடுத்துள்ளான். அதை நல்ல முறையில் பயன்படுத்துபவர்கள் உயர்வடைகின்றனர்; மற்றவர்கள் இழிநிலையை அடைகின்றனர். இறைவன் கொடுத்த உடல், உள்ளம், உயிர் ஆகியவற்றை சரியான வழியில் பயன்படுத்தி, வாழ்வின் உயர்ந்த குறிக்கோளான இறைவனை அடையப் தெரியாத மனிதர்கள் அனைவரும் அந்த விறகு வெட்டியைப் போன்றவர்கள் தான்.
அருண் ராமதாசன்
