தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஞானானந்தம்: சீதாதேவியும், அம்மிக்கல்லும்!

ஞானானந்தம்: சீதாதேவியும், அம்மிக்கல்லும்!

ஞானானந்தம்: சீதாதேவியும், அம்மிக்கல்லும்!


PUBLISHED ON : ஆக 09, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 09, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சீதையை, ராவணன் அசோகவனத்தில் சிறை வைத்திருந்தான். விபீஷணனின் மகளான திரிசடை, அங்கு சென்று, சீதைக்கு ஆறுதல் கூறுவது வழக்கம்.

ஒருநாள், அசோகவனத்தின் ஒரு மூலையில் இருந்த ஓர் அம்மிக்கல்லை, சீதைக்கு காட்டினாள், திரிசடை.

அதைப் பார்த்ததும், 'இது வெறும் அம்மிக்கல்தானே... அதில் என்ன விசேஷம்?' என்று கேட்டாள், சீதை.

'இது சாதாரண அம்மிக்கல் இல்லை; இது, அபூர்வமான அம்மிக்கல். இதில் அரைக்கப்படும் மசாலா பொருட்களின் வாசனை அதிகமாகி, சுற்றுப்புறம் எங்கும் நறுமணம் கமழும்; உணவின் சுவையும் அதிகரிக்கும்...' என்றாள், திரிசடை.

'அப்படியா?' என்று மிகவும் வியந்த, சீதாதேவி, 'ஸ்ரீராமருடன் அயோத்திக்கு செல்லும்போது இந்த அம்மிக்கல்லையும் என்னுடன் எடுத்துச் செல்வேன்...' என்று கூறினாள்.

சிறிது காலத்திற்கு பின், ராவணனை போரில் அழித்தார், ஸ்ரீராமர்.

இலங்கையை, விபீஷணனுக்குத் தானமாகக் கொடுத்து, இலங்கையின் அரசராகவும் முடிசூட்டி வைத்தார். அனைவரும் அயோத்திக்கு திரும்ப ஏற்பாடுகள் நடந்தன. அப்போது, சீதைக்கு அந்த அம்மிக்கல்லின் நினைவு வந்தது.

அனுமனிடம், அந்த அம்மிக்கல்லைக் காட்டி, 'வீரனே, சிறப்பு வாய்ந்த இந்த அம்மிக்கல்லை நம்முடன் அயோத்திக்கு எடுத்துச் செல்ல வேண்டும். எனவே, கவனமாக இதை எடுத்துவா...' என்றாள், சீதை.

சீதையின் ஆணைப்படி, அந்தக்கல்லை எடுக்க முனைந்தார், அனுமன்.

அப்போது, அங்கு வந்த, ஜாம்பவான், அனுமனிடம், 'வாயு குமாரா! எல்லாரும் அயோத்திக்கு செல்ல ஆயத்தமாக இருக்கின்றனர். இந்த நேரத்தில் நீ, ஏன் இந்தக் கல்லைப் பெயர்த்தெடுக்கிறாய்?' என்றார்.

ஜாம்பவானிடம் நடந்தவற்றை விளக்கினார், அனுமன்.

ஜாம்பவான் இரு கைகளையும் கூப்பி, சீதையை வணங்கியபடி, 'தாயே... இலங்கையை, விபீஷணனுக்கு தானமாக வழங்கிவிட்டார், ஸ்ரீராமர். தானம் கொடுத்தவர், தானம் பெற்றவரிடமிருந்து எந்தப் பொருளையும் மீண்டும் பெறக்கூடாது. தானம் வாங்கியவனே வலிய வந்து தர விரும்பினாலும், தானம் கொடுத்தவர் பெற்றுக்கொள்ளக்கூடாது. இல்லாவிட்டால் தானத்தால் பெற்ற புண்ணியத்தை இழக்க நேரிடும். விபீஷணனுக்குத் தானம் அளித்ததன் மூலம், ஸ்ரீராமர் பெற்ற மாபெரும் புண்ணியத்தை, இந்த அற்பமான அம்மிக்கல் கெடுத்துவிடுமே என்று அஞ்சுகிறேன்...' என்றார்.

ஜாம்பவான் பக்குவமாகக் கூறிய உண்மை, சீதைக்குப் புரிந்தது.

ஜாம்பவானிடம், 'சரியான சமயத்தில் தாங்கள் உண்மையை எடுத்துக் கூறி, பாவச் செயலிலிருந்து என்னை விடுவித்தீர்கள்! ஸ்ரீராமர் செய்த புண்ணியம் தங்களால் காப்பாற்றப்பட்டது...' என்றாள், சீதை.

தானம் கொடுத்த பிறகு, தானத்தைப் பெற்றவனிடமிருந்து எதையும் எதிர்பார்க்கக் கூடாது என்பதையும், கசப்பான உண்மைகளைப் பக்குவமாக எடுத்துக் கூற வேண்டும் என்பதையும் இக்கதை உணர்த்துகிறது.

அருண் ராமதாசன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us