PUBLISHED ON : நவ 01, 2026

ஆடிட்டரையும், லாயரையும், 'பார்க்' ஹோட்டலில் தங்க ஏற்பாடு செய்த, நித்யா. ராஜாமணியோடு போய் அவர்களை சந்தித்தாள். அவர்கள் இருவரும் வரும்போதே, அனைத்து விபரங்களையும் கொண்டு வந்திருந்தனர். ஒவ்வொரு கணக்கும் பார்க்கும் போதே புரியும்படி தெள்ளத் தெளிவாக இருந்தது. வீடுகளின் எண்ணிக்கை, 'பார்ம் ஹவுஸ்' எனப்படும் ஏக்கர் கணக்கான தோட்ட வீடுகள், தென்னந்தோப்புகள், வாழைத் தோட்டங்கள், குடகு பகுதியிலிருந்த பாக்கு, ஏலக்காய், டீ, காபி 'எஸ்டேட்'டுகள், வெளிநாட்டு முதலீடுகள், உள்நாட்டு முதலீடுகள் என, பல கோடிகளைத் தொட்டன.
மலைத்து போனாள், நித்யா.
''இவ்வளவா?'' என்ற பிரமிப்பு ஏற்பட்டது.
''இவை தவிர, ஹைதராபாத்தில் திராட்சை தோட்டமும், நாக்பூரில் ஆரஞ்சு தோட்டமும் உண்டு,'' என்றார், ஆடிட்டர்.
''இவை அனைத்தும், சித்தார்த் ஒருவரின் சம்பாதிப்பில் உருவானதா?''
''இல்லம்மா... முக்கால்வாசி பூர்வீக சொத்தும்மா. ராஜபரம்பரை. பிரிட்டிஷ்காரர்கள் ஆண்டபோதே இவர்கள் கோடீஸ்வரர்கள்மா. அவரின் பாட்டி, கெம்பம்மாவின் அப்பா அப்போதே ஆங்கிலேயருக்கு, கப்பம் கட்ட மறுத்து, ஏகாதிபத்தியத்தை எதிர்த்தவர். கட்டபொம்மன், வாஞ்சிநாதன் போன்றவர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸிற்கு ஆதரவாக செயல்பட்டவர். அவரது எதிர்ப்பை தாங்க முடியாத ஆங்கிலேயர் ஒருவரால் சுட்டு கொல்லப்பட்டவர்.''
''இதையெல்லாம் எனக்கு, சித்தார்த் கவுதம் சொல்லவே இல்லையே.''
''அவர் எதையுமே பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையம்மா. கிரிக்கெட்டும், விமானம் ஓட்டுவதும் தவிர வேறு எதுவும் அவர் மனதில் பதியவில்லையே.''
கேட்க, கேட்க நித்யாவிற்கு பெருமிதமாக இருந்தது. நினைக்க, நினைக்க பூரிப்பு ஏற்பட்டது. ஆனால், தன்னை அடக்கிக் கொண்டு பேசினாள்...
''இவை அனைத்தையும் பணமாக மாற்ற எத்தனை நாள் பிடிக்கும்?''
அவள் கேட்டதும், ஆடிட்டரும், வக்கீலும் மலைத்து போயினர்.
ராஜாமணியை ஏறிட்டு, ''என்ன சார்?'' என்றனர்.
''ஒரு நிமிடம்,'' என்ற ராஜாமணி, நித்யாவிடம் பேசினான்...
''நீ என்ன ஐடியா வைச்சிருக்க, நித்யா?'' என்றான்.
''ராஜு... நாம் ரெண்டு பேருமே சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர்கள். ஆடிட்டரும், லாயரும் சொன்னதையெல்லாம் நாம் கனவில் கூட பார்த்திருக்க மாட்டோம். நீங்களும், நானும் அறிந்த சித்தார்த் கவுதமின் பின்னணி பற்றி இவர்கள் சொல்கிற வரை நமக்கு எதுவும் தெரியாது. ஒரு பெரிய கிரிக்கெட் வீரர் என்பதை தவிர, ஒரு சாதாரண மனிதராகவே அவர் நடந்து கொண்டார்.''
ஒரு விநாடி அவள் நிறுத்திய போது, ராஜாமணி குறுக்கிட்டான்...
''சரி, அதற்கும், எல்லாவற்றையும் விற்பதற்கும் என்ன சம்பந்தம்.''
''இருக்கிறது, ராஜு. கொஞ்சம் பொறுமையாக நான் பேசுவதைக் கேளு. பிறக்கப் போவது ஆணாக இருந்தால், அவர் விருப்பப்படி, ராஜாமணி என்று பெயர் வைத்து, அவனையும் அவரைப் போல் புகழ்பெற்ற ஒரு கிரிக்கெட் வீரனாக்குவேன்.''
''பெண்ணாக பிறந்தால்...''
''பாட்டியின் பெயரான, கெம்பம்மா என்று வைத்து, அவளையும் கிரிக்கெட் வீராங்கனை ஆக்குவேன்.''
''சரி, அதற்கும் எதற்காக அத்தனையும் விற்க வேண்டும்?'' என்று கேட்டான் ராஜாமணி.
அதற்கு அவள், ''எனக்கு நிறைய கனவுகள் உருவாகியிருக்கின்றன...''
ஆடிட்டரும், லாயரும், ராஜாமணியும் அவளே பேசட்டும் என்று அமைதியாக இருந்தனர்.
''எல்லாவற்றையும் அரசாங்கம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தால் முடியுமா? எத்தனை கோடி மக்கள்... அதில், எத்தனை குடும்பங்கள். வீடு, வாசல் இன்றி பிளாட்பார வாசிகளாக இருக்கின்றனர். கூவம் கரையோரத்தில் வாசலுக்குக் கதவின்றி புடவையை மறைவுக்கு கட்டி தொங்கவிட்டு வாழ்கின்றனர். கூடிய வரையில் அவர்களுக்கு வீடு கட்டித் தர வேண்டும்.
''அவர்களின் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும். அவர்களில் எத்தனை பேருக்கு கிரிக்கெட் வீரனாக வேண்டும் என்ற ஆசை இருக்கும்? டென்னிஸ் விளையாட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். உள்ளுக்குள் ஒளிந்து கிடக்கும் திறமைகளை வெளியில் கொண்டு வந்து பிரகாசிக்க வைக்க வேண்டும், ராஜு.''
''நித்யா இதெல்லாம் உனக்கு?''
''இதெல்லாம் என் எண்ணமில்லை; என் ஆசையுமில்லை, ராஜு. அவருடைய ஆசை. அவருடைய எண்ணம். ஒருநாள் விடிய விடிய இதையெல்லாம் என்னிடம் சொல்லி இருக்கிறார். அப்போது கூட, தன் பணத்தைப் பற்றியோ, செல்வத்தைப் பற்றியோ சொல்லவே இல்லை.
''இதுமட்டுமில்ல, ராஜு. அவருக்கு அம்மாவை அவள் படும் கஷ்டங்களிலிருந்து மீட்கும் ஆசை இருந்தது. உங்களை பற்றின கனவு கூட அவரிடமிருந்தது.''
''என்னைப் பற்றியா?''
''ஆமாம், ராஜு. நீங்க ஆசைப்படுகிற மாதிரி, உலகத் தரத்திற்கு திரைப்படங்கள் எடுக்க வைக்க வேண்டும். அதற்காக, 'ராஜாமணி புரொடக்ஷன்ஸ்' என்று ஒரு திரைப்படக் கம்பெனி உருவாக்கித் தரவேண்டும் என்று என்னிடம் சொன்னார்...''
''என்ன?''
''ஆமாம், ராஜு.''
''நாம், நம் எண்ணத்தில் உறுதியாக, ஆசையில் நேர்மையாக இருந்தால் நிச்சயம் கிடைக்கும். நீ எனக்கு கிடைச்ச மாதிரி என்று சொன்னாரே தவிர, தன்னுடைய பணம் பற்றி எதுவுமே சொல்லவில்லை.''
''போதும், நித்யா. மேலே பேசாதே. நான் கதறி அழுதுடுவேன்,'' என்றான், ராஜாமணி.
''இல்ல, ராஜாமணி. முழுசுமா என்னை சொல்ல விடுங்க. அவர் ஆசைப்படி முதல்ல பெரிய வீடாக ஒண்ணு கட்டறோம். உங்க குடும்பம், எங்க குடும்பம் ரெண்டும் ஒன்றாக வாழணும்ங்கிறது அவர் விருப்பம். அதை அத்தை பேர்லயும், அம்மா பேர்லயும் பதிவு பண்ணுவோம்.''
''சித்தார்த்துக்கு இப்படி ஒரு மனசா! நானெல்லாம் சித்தார்த் கவுதமிற்கு எதிரே துரும்பு,'' என்று கதறி அழுதே விட்டான், ராஜாமணி. ஆடிட்டரும், லாயரும் கூட கண்கலங்கினர். 'கரகர'த்த குரலில் மெல்ல பேசினாள், நித்யா...
''அப்பா மீது கூட, அவருக்கு கோபமில்லை, ராஜு. அவருக்கு, 'காம்ப்ளெக்ஸ்' என்று அடிக்கடி சொல்வார். அந்தத்தாழ்வு மனப்பான்மையினால் தான், அவர், சகுந்தலாவை தேடிக் கொண்டார். 'பாவம் சகுந்தலா...' என்று அவள் மீதும் இரக்கப்படுவார். சகுந்தலா பேர்ல ஒரு பெரிய தொகை, 'பிக்ஸட் டெபாஸிட்'ல போடணும். நாளைக்கு அவளுக்கு குழந்தை பிறந்தால், உபயோகமாக இருக்கும் என்றும் சொல்லியிருக்கிறார்.''
''நம் குடும்பத்தை பற்றி இவ்வளவு யோசித்திருக்கிறாரா? இத்தனை யோசிச்சவர், அவரைப் பற்றி யோசிக்கவே இல்லையே, நித்யா.''
''அவர் யோசனையில் இருந்ததெல்லாம் கிரிக்கெட், விமானம், நான்... இந்த மூன்றுக்காகத்தான் வாழ்ந்தார்.''
அதன்பின் ஒரு கனத்த மவுனம் நிலவியது. கடைசியில், நித்யாவே அதைக் கலைத்தாள்...
''ஆடிட்டர் சார், லாயர் சார்... ராஜாமணி கூட சேர்ந்து, அவர் ஆசைப்பட்ட எல்லாவற்றையும் நிறைவேற்றிடுங்க. அவர் பெயரில் பள்ளிக்கூடங்கள், கல்லுாரிகள், கிரிக்கெட் 'கோச்சிங் சென்டர்'கள், எங்க வீடு, சகுந்தலா பேர்ல பணம், ராஜாமணி புரொடக்ஷன் கம்பெனி.''
''சாரி, நித்யா. எல்லாமே அவர் பேர்ல தான் இருக்கணும். பள்ளிகள், கல்லுாரிகள், 'கோச்சிங் சென்டர்'கள் மாதிரி, புரொடக்ஷன் கம்பெனியும், சித்தார்த் புரொடக்ஷன்ஸ் தான்,'' என்று உறுதியாக சொன்னான், ராஜாமணி.
''சரி, அப்படியே ஆகட்டும். ஆடிட்டர் சார், லாயர் சார் மீதமுள்ள பணத்தில் பாதியை பிறக்கப்போகும் குழந்தை பேரிலும், பாக்கி உங்கள் இருவருக்குமாக எடுத்துக் கொள்ளுங்கள்,'' என்று எழுந்து கொண்டாள், நித்யா.
அப்போது, ராஜாமணியின் மொபைல் போன் ஒலித்தது...
''நான், ஸ்ரீனிவாசன் பேசறேன், மிஸ்டர் ராஜாமணி,'' என்றது மறுபுறக் குரல்.
''மிஸ்டர், ராஜாமணி?''
''சொல்லுங்க, மிஸ்டர் ஸ்ரீனிவாசன்.''
''மிஸஸ் சித்தார்த் எங்கே இருக்கிறார்?''
''இங்கு தான் சார். சென்னையில் தான். இப்போது என் எதிரில் தான் இருக்கிறார்.''
''வெரிகுட்! உங்களுக்கு ஒரு, 'குட் நியூஸ்' சொல்லத் தான் கூப்பிட்டேன்.''
''சொல்லுங்க, சார்.''
''பிசிசியோடு, சென்னை கிரிக்கெட் வாரியமும் சேர்ந்து, சித்தார்த்துக்கு ஆளுயர வெண்கலச்சிலை வைக்க முடிவு செய்திருக்கிறோம். அவர் மிகவும் விரும்பி நேசித்து விளையாடிய, லட்சக்கணக்கான ரசிகர்களை பரவசப்படுத்திய, சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தான் சிலை வைக்கத் தீர்மானித்திருக்கிறோம். சேப்பாக்கம் ஸ்டேடியம், சித்தார்த் கவுதமின் மனம் கவர்ந்த இடம். சித்தார்த்திற்கு சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சிலை வைக்க வேண்டும் என்பது, கோடானு கோடி ரசிகர்களின் விருப்பம். அதை மதித்துத்தான் இப்போது இந்த சிலை திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். சிலை தயாராகி விட்டது. தத்ரூபமாக சித்தார்த் கவுதம் மாதிரியே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வரும், 10ம் தேதி மாலை, 5:00 மணிக்கு சிலை திறப்பு விழா. முன்னாள், இன்னாள் கிரிக்கெட் வீரர்களும் விழாவில் கலந்து கொள்கின்றனர்,'' என்று சொல்லி நிறுத்தினார், ஸ்ரீனிவாசன்.
''நல்லது சார், சந்தோஷம்,'' என்றான், ராஜாமணி.
''இதையெல்லாம் தெரியப்படுத்த மட்டும் உங்களைக் கூப்பிடல மிஸ்டர், ராஜாமணி. இன்னும் ஒரு முக்கியமான, 'ரிக்வெஸ்ட்' இருக்கிறது.''
''சொல்லுங்கள்?''
''சித்தார்த் கிரிக்கெட்டை எந்த அளவு நேசித்தாரோ, அதே அளவு, ஏன், அதைவிட அதிகமாகவே தன் மனைவியை நேசித்தார். ஆகவே, அவருடைய சிலை, அவரின் மனைவியின் கைகளால் திறக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் ஒருமித்த எண்ணம்.''
அதைக்கேட்டு, ராஜாமணி பேசாதிருந்தான். மீண்டும் ஸ்ரீனிவாசனே, கேள்வி எழுப்பினார்...
''இப்போது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?''
''இன்னும் அரைமணி நேரத்தில் வீட்டிற்கு சென்று விடுவோம்.''
''மிஸஸ் சித்தார்த்?''
''அவரும் தான், சார்.''
''வீடு எங்கே இருக்கிறது?''
சொன்னான்.
''விலாசம் கொடுக்க முடியுமா?''
''வாட்ஸ்-ஆப்பில் அனுப்பட்டுமா?''
''அனுப்புங்கள். நீங்கள் போங்கள் பின்னாலேயே நான் வருகிறேன்.''
சொ ன்ன மாதிரி, ஸ்ரீனிவாசன் வந்தார். தனியாக வரவில்லை. கூடவே, மத்திய அமைச்சர் ஒருவருடன் வந்தார்.
தாங்கள் வந்த நோக்கத்தை, நித்யாவிடம் தெரிவிக்க அரைமனதுடன் ஒப்புக்கொண்டாள்.
''தனிப்பட்ட முறையிலோ, அரசாங்க வழியிலோ எந்த நியாயமான உதவியும் செய்யத் தயாராக இருக்கிறோம்,'' என்றார், அமைச்சர்.
இருகரம் கூப்பி நன்றி தெரிவித்த, நித்யா சற்று முன், 'பார்க்' ஹோட்டலில் ஆடிட்டரோடும், லாயரோடும், ராஜாமணியுடனும் பகிர்ந்து கொண்ட அனைத்து விஷயங்களையும் சுருங்கக் கூறி, அவற்றிற்கு உதவுமாறு வேண்டினாள்.
''நீங்கள் இப்படி கைக்கூப்ப வேண்டியதேயில்லை, சகோதரி. உங்கள் ஆடிட்டரையும், லாயரையும் சம்பந்தப்பட்ட அத்தனை பைல்களையும் எடுத்துக்கொண்டு வந்து என்னை பார்க்க சொல்லுங்கள். எண்ணி, 10 நாட்களில் முடித்துக் கொடுத்து விடுகிறேன்,'' என்று உறுதியளித்தார், மத்திய அமைச்சர்.
கன்னங்களில் கண்ணீர் கோடாக வழிய நன்றி சொன்னாள், நித்யா.
''அப்போது நாங்கள் விடைபெறுகிறோம்,'' என்று எழுந்து நின்று, கைகூப்பி வெளியேறினர், ஸ்ரீனிவாசனும், அமைச்சரும்.
ப த்தாம் தேதி மாலை, 5:00 மணியளவில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கடல் போன்ற மக்கள் வெள்ளம்.
பெரிதாக மேடை அமைக்கப்பட்டு, அதில், வரிசையாக போடப்பட்டிருந்த நாற்காலிகளில் நடுநாயகமாக அமர்ந்திருந்தார், அமைச்சர். அடுத்தடுத்து பிரமுகர்களும், விளையாட்டு வீரர்களும், வெளிநாட்டிலிருந்து அழைக்கப்பட்டவர்களும் இருந்தனர்.
சரியாக, மாலை, 4:50 மணிக்கு நித்யா எளிமையான, துாய்மையான வெள்ளையில், சிவப்பு கரையிடப்பட்ட வங்காள கைத்தறிப் புடவையில் வந்திருந்தாள். கழுத்தில், காதுகளில், கைகளில் எதுவுமின்றி, துடைத்து விட்ட, தங்கச்சிலை போலிருந்தாள். வயிறு லேசாக மேடிட்டு, ஐந்து மாத கர்ப்பிணித் தோற்றத்திற்கான அழகைத் தந்திருந்தது. அமைச்சர் அருகில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.
முதலில், வந்தே மாதரம், தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்டது.
பின்னர் சிலை திறக்கும் நிகழ்ச்சி வந்தது. அமைதியாக எழுந்து சென்று சிலையைத் திறந்து வைத்து, அண்ணாந்து பார்த்தாள். சித்தார்த் கவுதம் நிஜமாக நேரில் நிற்பது போல சிலை அச்சு அசலாக அவளைப் பார்த்து புன்னகை செய்தது. ராணுவ வீரனுக்கு மரியாதை செய்வது போல், அந்த கிரிக்கெட் வீரனுக்கு 'சல்யூட்' வைத்து, மரியாதை செய்தாள், நித்யா.
யாரும் அறியாமல், கண்ணீரைத் துடைத்தபடி திரும்பி வந்து, நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.
பின் ஒவ்வொருவராக சென்று, சித்தார்த் சிலையின் பாதங்களில் ரோஜா இதழ்களை துாவி அஞ்சலி செலுத்தினர்.
கடைசியாக, அமைச்சர் பேசி, ஒரு அறிவிப்பை வெளியிட்டார்...
'இந்த ஆண்டு விளையாட்டுத் துறைக்கான, 'பத்மபூஷன்' விருது, சித்தார்த் கவுதமுக்கு வழங்கப்பட உள்ளது...' என்று அறிவித்தார்.
கரகோஷம் ஸ்டேடியத்தை அதிரவைத்தது. நித்யா எழுந்து நின்று அமைச்சருக்கு கைக்கூப்பிய பின், ஸ்டேடியத்தில் இருந்த மக்களுக்கு தலைவணங்கி நன்றி தெரிவித்து, ராஜாமணியை ஏறிட்டாள். அவன் முகம் சூரியனாகப் பிரகாசித்து, உதட்டில் புன்னகைப் பூ மலர்ந்து விரிந்திருந்தது.
இ.ரங்கநாயகி
