
எதையும் முன்பே தெரிவிப்பதே நல்லது!
மகனுக்கு நடக்க இருந்த நிச்சயதார்த்த விழா நின்று விட்டதாக, என் தோழியிடமிருந்து போன் வரவே, அவளது வீட்டுக்கு சென்று விசாரித்தேன்.
தோழி சொன்ன தகவல்:
விழாவுக்கு நான்கு நாட்களே இருந்த நிலையில், பெண்ணின் அம்மா போன் செய்து, சில நிபந்தனைகளை கூறியுள்ளார். அது...
* உங்கள் பெயரிலுள்ள வீட்டை, என் பெண்ணின் பெயருக்கு மாற்றி எழுதித் தர வேண்டும்
* திருமணம் முடிந்த உடனேயே தனிக்குடித்தனம் வைத்து விட வேண்டும். மாப்பிள்ளையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என, ஒருவரும் வரக்கூடாது எனக் கூறியுள்ளார்.
'இப்போது இதை சொல்லும் நீங்கள், முன்பே கூறியிருந்தால், நாங்கள் இதுபற்றி முன்பே யோசித்திருப்போம். நிச்சயம் செய்யும் இந்த தருணத்தில் இதை சொல்கிறீர்களே... உங்களுக்கு இரு பெண்கள் மட்டுமே இருப்பதால் இப்படி பேசுகிறீர்கள்.
'உங்களுக்கு ஒரு மகன் இருந்து, அவனுக்கு வரும் பெண் வீட்டில் இருந்து, இப்படி நிபந்தனைகளை விதித்தால், அப்போது உங்களுக்கு எப்படி இருக்கும்? இம்மாதிரி சூழ்நிலையில் நாம், அவர்கள் இடத்தில் இருந்தால் எப்படி நடந்து கொள்வோம் என்பதையெல்லாம் சிந்தித்து பின் பேச வேண்டும்...' என சொல்லி, போனை, 'கட்' செய்துள்ளாள், என் தோழி.
சிறிது நேரத்தில் பெண்ணின் அப்பா, என் தோழிக்கு போன் செய்து, தன் மனைவியின் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து, சமாதானம் செய்யும் விதமாக பேசியுள்ளார்.
ஆனால், அவரிடம், 'உங்கள் வீட்டில் பெண் எடுக்க எங்களுக்கு விருப்பமில்லை...' எனக் கூறி விட்டாள், என் தோழி.
என் தோழி செய்தது சரி தானே!
— பி.மரகதவள்ளி, சென்னை.
வாழ்வில் சாதிக்க ஊனம் குறையல்ல!
நான் வேலைக்கு செல்லும் வழியில், மாற்றுத்திறனாளியான வாய் பேச முடியாத நபர் ஒருவர் இருப்பார். தினமும் என்னை பார்த்து கை அசைப்பார். நானும், பதிலுக்கு கை அசைத்து விட்டு செல்வேன். ஒருமுறை அவரிடம் பேச வாய்ப்பு கிடைத்தது.
அவரிடம் விசாரித்த போது, 'நான் டிகிரி முடித்துள்ளேன். எந்த வேலையும் எனக்கு அமையவில்லை...' என, சைகையில் கூறினார்.
'பஞ்சர் கடை வைத்துக் கொடுத்தால், வேலை செய்கிறீர்களா?' என்றேன். அதற்கு அவரும், 'சரி...' என்றார்.
நான் செல்லும் வழியில், 5 கி.மீ., துாரத்திற்கு எந்த பஞ்சர் கடையும் கிடையாது. அதனால், இந்த வழியில் பஞ்சர் கடை வைத்தால் நன்றாக ஓடும் என்று நினைத்து, பஞ்சர் கடை வைத்திருக்கும் என் நண்பரிடம், இவரை வேலை கற்றுக் கொள்ள செய்தேன்.
இரண்டு மாதத்தில் நன்றாக தொழில் கற்றுக் கொண்டார். பிறகு, அவரிடம் கடனாக, 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து, பஞ்சர் கடை வைத்து கொடுத்தேன். முதலில் சுமாராக இருந்த வருமானம், நாளடைவில் மாதம், 40 ஆயிரம் ரூபாய் வரை வந்தது.
நான் கொடுத்த, 10 ஆயிரம் ரூபாயை வட்டியுடன் திருப்பி கொடுத்தார். நான், வட்டி வாங்காமல் கொடுத்த பணத்தை மட்டும் வாங்கி கொண்டேன்.
வாசகர்களே... உங்கள் ஊரிலும் படித்த மாற்றுத்திறனாளிகள், வேலை அமையாமல் இருக்கலாம். அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்தால் போதும். அவர்களும் வாழ்வில் முன்னேறுவர். செய்வீர்களா?
— வெ.சென்னப்பன், உதகை, நீலகிரி.
முதியோருக்கு தனி இடம்!
நண்பர் ஒருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். மேடையில், மணமக்களை வாழ்த்திய பிறகு, உணவருந்தும் ஹாலுக்கு சென்றேன். அங்கு, 'பபே' முறையில், 'டின்னர்' ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பரபரப்பாக உணவருந்த வந்தோர், மேஜையில் வைக்கப்பட்டிருந்த கனமான பீங்கான் தட்டைக் கையிலேந்தியவாறு, அதில் உணவு வகைகளை நிரப்பி, தடுமாறியபடி சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
இந்நிலையில், வயது முதிர்ந்த நான், எப்படி உணவருந்த போகிறோமோ என, சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது, அங்கு ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த ஒருவர், என்னை கைத்தாங்கலாக அழைத்து சென்றார்; ஹாலின் ஒருபுறம், 'முதியோர் பகுதி' என, அறிவிப்பு பலகை பொருத்தியிருந்த இடத்தில், வாழையிலை போடப்பட்டிருந்த மேஜை முன், அமர வைத்தார்.
சிறப்பு உடை அணிந்து சிலர், மேஜைக்கு வந்து உணவு வகைகளை பரிவுடன் பரிமாறினர். நாங்கள் சாவகாசமாக உணவருந்திய பிறகு, ஐஸ்கிரீம், புருட் சாலட் போன்றவற்றையும் மேஜையிலேயே வழங்கினர்.
'பபே' முறையில் சிரமங்களை எண்ணி அஞ்சிய நிலையில், எவ்விதமான சிரமமுமின்றி மிகுந்த மனநிறைவோடு உணவருந்தி திரும்பினேன். 'பபே' முறை விருந்தில், இப்படி முதியோருக்கான சிறப்பு ஏற்பாட்டை செய்திருந்த ஏற்பாட்டாளரை கனிவோடு பாராட்டி, விடை பெற்றேன்.
—எஸ்.ஏ.சுந்தரமூர்த்தி, சென்னை.