
மகிழ்ச்சி திருவிழா!
கடந்த வாரம், என் உறவினரின் அழைப்பின் பேரில், அவர் வசிக்கும் கிராமத்து பள்ளிக்கூடத்துக்கு சென்றிருந்தேன்.
அங்கு, 'மகிழ்ச்சி திருவிழா' என்ற பெயரில், மாணவர்களுக்காக மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கதை சொல்லல், நாடகப் போட்டி, உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதை மற்றும் ஓவியப் பயிற்சி, குழு விவாதங்கள், மன அழுத்தத்தை போக்கும் யோகா, சிரிப்பு சிகிச்சை ஆகியவை நடைபெற்றன.
பங்கேற்ற மாணவர்களுக்கு, புத்தகங்கள், பேனாக்கள் மற்றும் மனநல விழிப்புணர்வு கையேடுகள் பரிசாக வழங்கப்பட்டன. மதிய உணவாக வீட்டில் தயாரிக்கப்பட்ட சத்தான உணவுகள் பரிமாறப்பட்டன.
இந்நிகழ்ச்சியை, அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் உற்சாகமாக நடத்தினர்.
அவர்களிடம் பேசும்போது, 'கற்பித்தலின் அழுத்தத்துக்கு மத்தியில், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் இத்தகைய நிகழ்ச்சிகள், மாணவர்களுடன் உறவை வலுப்படுத்துவதாகவும், மனதுக்கு ஆறுதல் தருவதாகவும் இருக்கிறது...' என, மகிழ்ச்சியுடன் கூறினர்.
ஆசிரியர்களே... மாணவர்களின் மனநலத்தை மேம்படுத்தவும், உங்கள் மன அழுத்தத்தை குறைக்கவும், இதுபோன்ற நிகழ்ச்சிகளை அவரவர் பணியாற்றும் பள்ளிகளிலும் ஏற்பாடு செய்யுங்கள். மகிழ்ச்சியை பகிர்ந்து, மனநலத்தை வளருங்கள்!
— எம். முகுந்த், கோவை.
வேறு சமாசாரம் கிடைக்கலையா?
பஸ்சுக்காக, பேருந்து நிலையத்தில் நின்றிருந்தேன். அருகிலிருந்த பெட்டி கடை முன் நின்றிருந்த இளைஞர் இருவர், தொலைவில் நடந்து வரும் பெண்களை பார்த்து, 'போட்டிருக்கு...' என்றும், 'போடலை...' என்றும் கூறி பந்தயம் கட்டி விளையாடிக் கொண்டிருந்தனர்.
அதில், ஒரு இளைஞன், 'பிரமாதம்டா... கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்ட. உன் பார்வை ரொம்ப ஷார்ப்...' என்று மற்றவனை பாராட்டுவதையும் கவனித்தேன். இவர்கள் எதை வைத்து பந்தயம் கட்டுகின்றனர் என்பதை ஊகிக்க முடியவில்லை.
கம்மல், வளையல், கொலுசு, நெக்லஸ் போன்ற ஆபரணங்கள் போட்டிருப்பதை சொல்கின்றனரா என, நானும் உற்றுப் பார்த்தேன். எதுவும் எனக்கு பிடிபடவில்லை.
பின்னர் தான் புரிந்தது பெண்கள் நடந்து வரும்போது, ஏற்படும், அங்க அசைவுகளை கொண்டு அவர்கள், பிரா அணிந்திருக்கின்றனரா, இல்லையா என, கவனித்து பந்தயம் கட்டி விளையாடுகின்றனர் என்பது.
'அடக் கொடுமையே...' என, தலையிலடித்துக் கொண்டேன், நான்.
இளைஞர்களே... நீங்கள், உங்கள் பார்வையின் கூர்மையை சோதித்து அறிய உங்களுக்கு வேறு சமாசாரமே கிட்டவில்லையா?
— எச்.சம்பத்குமார், கோவை.
பிறந்த நாள், 'பார்ட்டி'க்கு போனால் தப்பா?
அ ரசுத் துறையில் பெண் அதிகாரியாக பணி புரிகிறேன் நான். என் சக அலுவலர், தன் பிறந்த நாளை முன்னிட்டு, உயர்தர ஹோட்டல் ஒன்றில், 'பார்ட்டி' கொடுத்தார். உ.பா., 'பார்ட்டி'யாக இருக்கும் என்று, சக பெண் ஊழியர்கள் யாரும் செல்லவில்லை.
பல நேரங்களில் எனக்கு உதவியாகவும், பிரச்னையான சமயங்களில் ஆறுதலாகவும் இருந்தவர் என்பதால், அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவதற்காக பரிசு பொருள் வாங்கி கொண்டு, 'பார்ட்டி' நடக்கும் ஹோட்டலுக்கு சென்று, வாழ்த்து கூறினேன். அவர், எனக்கு ஐஸ்கிரீம், 'ஆர்டர்' செய்ய, சாப்பிட்டு விட்டு வந்தேன்.
மறுநாள், நான் அலுவலகம் சென்ற போது, 'உ.பா., அருந்தும் இடத்திற்கு ஒரு பெண் போகலாமா?' என்றும், 'நண்பரே ஆனாலும், ஆண்கள், உ.பா., அருந்தும் போது, அங்கு பெண்கள் செல்லக்கூடாது...' என்றும் என் சக பெண் அலுவலர்கள் எனக்கு அறிவுரை கூற ஆரம்பித்து விட்டனர்.
கடுப்பான நான், 'உங்களில் எத்தனை பேருடைய கணவர் உ.பா., அருந்தும் பழக்கம் இல்லாதவர்?' என்று கேட்டதோடு, 'உங்கள் கணவர் உ.பா., அருந்திய நிலையில், பிற பெண்களிடம் எப்படி நடந்து கொள்வார்?' என்று வினா எழுப்பி, அவர்கள் வாயை அடைத்தேன்.
ஆணுக்கு பெண் சமம் என்று வாய் கிழிய பேசும் பெண்களே... பழகிய ஒரு ஆண், அதிலும், சக அலுவலர் தன் பிறந்த நாள் விழாவுக்கு, உ.பா., 'பார்ட்டி' கொடுத்தால், அந்த இடத்திற்கு பெண் அலுவலர் போகக்கூடாது என்று கூறுவதும், போனால், ஆளுக்கு ஆள் இலவச அறிவுரை வழங்குவதும் நியாயமா?
— பார்வதி சடகோபன், சென்னை.