PUBLISHED ON : ஆக 23, 2026

உயர்ந்த சேவை!
எ னக்கு தெரிந்த, பணி ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியை சமீபத்தில், கிராமம் ஒன்றில் சந்தித்தேன். அக்கிராமத்தில் என்ன செய்கிறார் என, அவரிடம் விசாரித்த போது, 'ஒவ்வொரு கிராமமாக சென்று, அரசு பள்ளிகளில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, கல்லுாரி படிப்பு படிக்க, வங்கியில் கல்விக்கடன் பெறுவது எப்படி, அதற்குரிய நடைமுறைகள் என்ன, அதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன போன்ற பல்வேறு விஷயங்களை, தலைமையாசிரியர் அனுமதியுடன் மாணவர்களிடம் விளக்கி பேசிவிட்டு வருகிறேன்.
'மேலும், வங்கியில் கல்விக்கடன் பெறுவது தொடர்பாக என்ன சந்தேகம் இருந்தாலும், எப்போது வேண்டுமானாலும் என்னிடம் விபரங்கள் கேட்டுப் பெறலாம், என்று என்னுடைய மொபைல் எண்ணையும் மாணவர்களிடம் கொடுத்து வந்துள்ளேன்.
'முறையான வழிகாட்டுதல் இல்லாமையாலும், ஓரிரு வங்கி அதிகாரிகளின் அலட்சியத்தாலும் பல மாணவர்கள், கல்விக்கடன் பெற முடியாமலும், வீண் அலைச்சலுக்கும் ஆளாகின்றனர்.
'இதை அறிந்து தான், இத்தகைய சேவையில் இறங்கினேன்...' என்றார்.
தன்னுடைய ஓய்வுக்காலத்தை, வருங்கால தலைமுறையினரின் நலனுக்காக செலவிடும் அவரின் நல்ல உள்ளத்தை வெகுவாக பாராட்டினேன்.
இப்படி ஒவ்வொருவரும் தன் துறை சார்ந்த அனுபவங்களை அடுத்த சந்ததியினரின் வளர்ச்சிக்காக செலவிட்டால் வருங்கால தலைமுறை நிச்சயம் வளம் பெறும்.
- எம். முத்துகிருஷ்ணகுமார், கரூர்.
காலி இடத்தை காப்பாற்றிய நண்பர்!
சமீபத்தில், என் நண்பர், புதிதாக வாங்கிய காலி மனையைப் பார்க்க அவருடன் சென்றிருந்தேன்.
நண்பர், வாங்கிய நிலத்தில் அப்பகுதி மக்கள், குப்பைகளை கொட்டியதில், துர்நாற்றம் வீசியது.
அதன்பின், நண்பர் பல முறை, குப்பை போடாதீர்கள் என்று பணிவுடன் கேட்டும், யாரும் அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை.
ஒருநாள், இதற்கு வேறு வழி கண்டுபிடித்தார், நண்பர்.
ஜே.சி.பி., இயந்திரத்தை வரவழைத்து, மொத்த இடத்தையும் சுத்தம் செய்தார்.
அதன்பிறகு, 'இந்த இடத்தில் வீடு கட்டும் வரை, இப்பகுதி இளைஞர்கள் கிரிக்கெட், கபடி, வாலிபால் போன்ற விளையாட்டுகளை விளையாடிக் கொள்ளலாம். ஆனால், இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்...' என்று அந்த இடத்தின் முன்பாக ஒரு அறிவிப்பு பலகையை வைத்தார்.
அந்த பகுதியில், விளையாடுவதற்கு, மைதானம் ஏதும் இல்லாததால், அப்பகுதி இளைஞர்கள், மாலை நேரங்களில் அங்கே விளையாடத் துவங்கினர்.
விளையாடும் இடத்தில், குப்பை கொட்ட யாருக்கும் மனம் வரவில்லை.
தப்பித்தவறி யாராவது குப்பை கொட்ட வந்தால், விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களே, 'இங்கே போடாதீங்க; குப்பை வண்டியில் போடுங்கள்...' என்று தடுத்து அனுப்ப ஆரம்பித்தனர்.
முள்ளை முள்ளால் எடுப்பது இதுதான் என கூறி, அவரது வித்தியாசமான சிந்தனையை மனதார பாராட்டினேன்.
மனிதர்களை மாற்ற முயற்சிப்பதை விட, அவர்கள் பயன்படுத்தும் சூழலை மாற்றிப் பாருங்கள். பல நேரங்களில் அதுவே நிலையான தீர்வாக மாறிவிடும்.
- அ.துரைமணி நாகர்கோவில்.
சிறுவனின் ஆர்வம்!
சமீபத்தில், நண்பர் ஒருவரின் இல்லத் திருமணத்திற்கு சென்றிருந்தேன். திருமணத்திற்கு வந்தவர்கள், மரக்கன்றுகளை இலவசமாக எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்திருந்தார், நண்பர்
திருமணத்திற்கு வந்திருந்த என் உறவினரின், 9ம் வகுப்பு பயிலும் மகன், இரண்டு மரக்கன்றுகளை கொண்டு செல்வதை பார்த்தேன். மரக்கன்றுகளை வைத்து பராமரிக்க இயலாத வகையில், உறவினரின் குடும்பம் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வருவதை நான் அறிவேன்.
எனவே, அச்சிறுவனிடம், 'மரக்கன்றுகளை வளர்க்க இட வசதி இல்லா சூழ்நிலையில், அவற்றை எடுத்துச் சென்று வீணாக்க வேண்டாம்... என்றேன்.
அதற்கு, 'இந்த மரக்கன்றுகளை நான் பயிலும் பள்ளி வளாகத்தில் வைப்பதற்காக கொண்டு போகிறேன்...' என்றான், அச்சிறுவன்.
மரக்கன்றுகள் வைத்து வளர்ப்பதற்கு இட வசதி இல்லாத சூழ்நிலையிலும் மரம் வளர்க்க வேண்டும் என்ற அந்தச் சிறுவனின் ஆர்வம், அதற்காக மாற்றி யோசித்த அறிவுத்திறன் ஆகியவற்றுக்காக அவனை மனதாரப் பாராட்டினேன்.
- ரா.சாந்தகுமார், கூடுவாஞ்சேரி, சென்னை.
