PUBLISHED ON : ஆக 30, 2026

சிறந்த முடிவு!
நண்பருக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. நண்பர் மற்றும் அவர் மனைவி இருவருமே அரசுப் பணியாளர்கள். கடந்த ஆண்டு வரை பிரச்னை ஏதுமின்றி இருந்த அவர்களுக்கு ஏற்கனவே நண்பரின் அப்பா இறந்துவிட்ட நிலையில், சமீபத்தில், அம்மாவும் இறந்து போனார்.
நண்பருக்கு, நான்கு மற்றும் இரண்டு வயதில் இரு குழந்தைகள். நண்பரின் அம்மா இருந்தவரை இவர்கள் அலுவலகம் சென்றபின், அவர் குழந்தைகளை கவனித்துக் கொண்டார். தற்சமயம் குழந்தை, குடும்பம் மற்றும் கொஞ்சம் விவசாய நிலம் இருக்கும் நிலையில் இருவரும் வேலைக்குப் போவது சிரமம். யாராவது ஒருவர் வேலையை விடுவது என்ற முடிவுக்கு வந்தனர்.
பொதுவாக இதுபோன்ற சூழலில், மனைவி தான் வேலையை துறக்க வேண்டியிருக்கும். ஆனால், நண்பரோ தானே வேலையை விடுவதாக முடிவெடுத்தார். அதற்கான காரணம், அவரை விட, அவரது மனைவி உயர் பதவியில் இருந்ததும், ஊதியமும் நண்பரை விட, 20 ஆயிரம் ரூபாய் அதிகம். மனைவி வேலையை விட்டால் குழந்தைகளையும், வீட்டையும் மட்டுமே பார்த்துக் கொள்ள முடியும். ஆனால், தான் வேலையை விட்டால், விவசாய வேலையையும் சேர்த்து பார்த்துக் கொள்ள முடியும் என்று, தன் வேலையை ராஜினாமா செய்து விட்டார், நண்பர்.
எந்த,'ஈகோ'வும் இல்லாமல் வேலையை விட்டவர், குழந்தை, குடும்பம் மற்றும் விவசாயம் ஆகியவற்றை கவனித்தபடி மகிழ்ச்சியாக உள்ளார்; குடும்பமும் சிரமம் இல்லாமல் நிம்மதியாக உள்ளது.
வீண் பந்தா, 'ஈகோ'வால் வாழ்க்கையில் நிம்மதியை இழந்து கிடப்பவர்கள் மத்தியில், நண்பரின் இத்தகைய முடிவையும், செயலையும் பாராட்டாமல் இருக்க முடியுமா?
- ஆர்.ரவிவர்மன், கபிஸ்தலம், தஞ்சாவூர் மாவட்டம்.
மாற்றுத் திறனாளியின் சேவை!
ஒருநாள் காலை இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். ஓரிடத்தில், ஒரு கை முற்றிலும் செயலிழந்த மாற்றுத்திறனாளி ஒருவர், 'லிப்ட்' கேட்டார்; வண்டியை நிறுத்தி ஏற்றிக் கொண்டேன்.
அந்த மாற்றுத்திறனாளியின் மற்றொரு கையில் உணவு, 'பார்சல்'கள் கொண்ட மஞ்சள் பை வைத்திருந்தார். 'உணவை யாருக்கு கொண்டு செல்கிறீர்கள்?' என்று கேட்டேன்.
அதற்கு, 'என்னுடைய துாரத்து உறவின பெண்மணி ஒருவர் புதியதாக உணவு கடை துவக்கியுள்ளார். கிராமம் என்பதால், வியாபாரம் குறைவு; அருகில் உள்ள நகர்ப்புறத்தில், கடை வைத்திருப்பவர்களை நேரில் சந்தித்து, உணவு கடை பற்றி சொல்லி, அவர்களின் தேவைக்கேற்ப உணவுகளை, அக்கடையிலிருந்து வாங்கி, 'டெலிவரி' செய்கிறேன். இதனால், நஷ்டம் ஏற்படாமல் லாபம் ஈட்டி வருகிறார், உறவுக்கார பெண்மணி...' என்றார்.
தம்முடைய உடல் சிரமத்தையும் பொருட்படுத்தாமல், உறவினரை நஷ்டத்தில் இருந்து மீட்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு செயலாற்றும் அந்த மாற்றுத்திறனாளியின் செயல் நெகிழச் செய்தது. அவருக்கு ஓர் சபாஷ் போட்டுவிட்டு, என் பயணத்தை தொடர்ந்தேன்.
- ரா.ராஜ்மோகன், திண்டிவனம்.
தமிழாசிரியரின் நல்ல முயற்சி!
சமீபத்தில், ஒருநாள் மாலை, என் உறவினரான, பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் வீட்டுக்கு சென்றிருந்தேன். அப்போது, வீட்டின் முதல் தளத்தில் நிறைய மாணவர்கள் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தனர்.
தமிழ் புத்தகம் ஒன்றை, மாணவர்களிடம் கொடுத்து, 'இதில் ஒரு பத்தியில் உள்ள தமிழ் வார்த்தைகளை பார்த்து தனியாக ஒரு தாளில் எழுதுங்கள்...' என்றார், உறவினர்.
எல்லாரும் எழுதி அவரிடம் கொடுத்தனர். அவர்கள் எழுதியதை அப்போதே திருத்தினார், ஆசிரியர்.
பல மாணவர்கள், 'கடவுள்' என்ற வார்த்தையை, 'கடவுல்' என்றும், 'கொடு' என்ற வார்த்தையை, 'கெடு' என்றும் எழுத்து பிழையுடன் எழுதி இருந்தனர். மறுபடியும் அவர்களிடம் அப்புத்தகத்தை கொடுத்து, அதைப் பார்த்து சரியாக எழுதும்படி கூறினார்.
இதுபற்றி அவரிடம் விசாரித்த போது, 'தற்போது மாணவர்களுக்கு, எழுத்துப் பிழை அதிகமாக வருகிறது. பிழையில்லாமல் எழுதுவதற்கு, அவர்களின் பெற்றோர் கேட்டுக் கொண்டதால், இப்பணியை மேற்கொண்டு, பயிற்சி கொடுத்து வருகிறேன்.
'நானும் ஆசிரியர் பணியில் இருந்ததால், பல மாணவர்களுக்கு, சரியான உச்சரிப்பில் பேசவும், பிழையில்லாமல் எழுதவும் கற்றுக்கொடுத்து வருகிறேன்...' என்றார்.
ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரின் இச்சேவையை, அப்பகுதியிலுள்ள பலரும் பாராட்டுகின்றனர்.
பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், இதுபோன்று பயிற்சி அளிக்க முன் வந்தால், மாணவர்களின் கல்வி தரம் மேம்படுமே!
- ஆர். அழகர், கமுதி.
