PUBLISHED ON : செப் 11, 2026

குழந்தைகளிடம், மொபைல்போன் கொடுக்கிறீர்களா? உஷார் !
சமீபத்தில், நண்பரை சந்திக்க அவருடைய வீட்டுக்கு சென்றிருந்தேன். அப்போது தான், அவர் தன், 10 வயது மகனுடன் மருத்துவமனைக்கு சென்று கையில், 'ஸ்கேன் ரிப்போர்ட்'டோடு, வந்தார்.
என்ன என்று விசாரித்ததில், தன் மகனுக்கு, கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக ஒரு பக்கமாக தலை மற்றும் கழுத்தை அசைத்தாலே வலிக்கிறது என்றும், பள்ளியில் ஆசிரியர் கரும்பலகையில் எழுதிப் போடுவதை படிக்கவே முடியவில்லை, என்றும் அவன் கூறியதால், டாக்டரிடம் காண்பித்தேன்.
அதற்கு அவர், 'அவனுக்கு, 'வாஸ்குலர்' தலைவலி வந்திருக்கு. மொபைல் போனை, அதிக நேரம் பார்த்துக் கொண்டிருப்பானா?' என்று கேட்டார், 'ஆமாம்...' என்றதும், 'அதனால் தான் இந்தப் பிரச்னை வந்துள்ளது...' என்று டாக்டர் கூறினார், என்றார்.
எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. படித்த பெற்றோர்களே... இப்படி, தங்களது குழந்தைக்கு நோயை தேடிக்கொடுக்கின்றனர்.
அதாவது, குழந்தைகள் மொபைல்போனை அதிகநேரம் பயன்படுத்தினால், பதட்டம், மனச்சோர்வு, தலை வலி, கழுத்துசதை பிடிப்பு, துாக்கக்கோளாறுகள் மற்றும் கண் பிரச்னை போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிந்தும், பெற்றோர் அதை கண்டுகொள்ளாமல், அவர்கள் கையில் மொபைல்போனை கொடுத்துவிட்டு, மேற்படி பாதிப்புகளை குழந்தைகளுக்கு வரவழைத்து விடுகின்றனர்.
குழந்தைகளுக்கு எப்படி தடுப்பூசி அவசியமோ, அதுபோல மொபைல் போனை குழந்தைகள் வெகு நேரம் பார்க்க கூடாது என்பதில், கண்டிப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். இப்பகுதியை படிக்கும் வாசகர்களாவது இதைக் கடைப்பிடிப்பரா?
- தே.கணேஷ், மதுரை.
கிராம இளைஞர்களை திருத்திய ஊர்த்தலைவர்!
என் உறவினர் வசிக்கும் கிராமத்தில், வேலையில்லா இளைஞர்கள் சிலர், பேருந்து நிறுத்தம் அருகே கூடி, வெட்டிக்கதை பேசி நேரத்தை வீணடிப்பதும், போதையில் திரிவதுமாக இருந்துள்ளனர்.
குடும்பத்தினரும், ஊர்க்காரர்களும், எவ்வளவு அறிவுரை கூறியும், அவர்களிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
அந்த ஊர்த்தலைவர், அவர்களிடம் அன்பாக பேசி, உடல் திறன் மேம்பாட்டுக்கான விளையாட்டு உபகரணங்களை, தன் சொந்த செலவில் வாங்கிக் கொடுத்து, தினமும் உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்தியுள்ளார்.
அதோடு, கிராம நுாலகத்தை புதுப்பித்து, போட்டித் தேர்வுகள், அரசு வேலைவாய்ப்பு, தொழில் துவங்குவது, இயற்கை விவசாயம் போன்ற தலைப்புகளில், மாதந்தோறும் அனுபவம் வாய்ந்தவர்களை அழைத்து வந்து, கலந்துரையாடல் நடத்தினார். மேலும், கிராம விழாக்களை ஒழுங்குபடுத்துவது, மரக்கன்றுகள் நட்டுப் பராமரிப்பது போன்றவற்றில் அந்த இளைஞர்களை ஈடுபடுத்தினார்.
பொறுப்பு கிடைத்த பிறகு, அவர்களுக்கு தன்னம்பிக்கையும், ஒழுக்கமும் வளரத் துவங்கி, இன்று, அதே இளைஞர்கள், போதைப் பழக்கத்திலிருந்து விடுபட்டு, வேலை வாய்ப்புகள் பெற்று முன்னேறி வருகின்றனர்.
இதுபற்றி ஊர்த்தலைவரிடம் கேட்டபோது, 'இக்கால இளைஞர்களை, அறிவுரை கூறியோ, அடித்தோ, திட்டியோ மாற்றிவிட முடியாது. அவர்களின் ஆற்றலை நல்ல திசையில் திருப்பும் வாய்ப்பையும், பொறுப்பையும் வழங்கினால், அவர்கள் தங்களையும், சமூகத்தையும் உயர்த்தும் சக்தியாக மாறுவர்...' என்றார்.
உண்மையான தலைமைப் பண்பு கொண்ட ஊர்த்தலைவர் சொல்வதும் சரியான கருத்துத்தானே!
டி.எல்.குமார், விழுப்புரம்.
கைத்தொழில் இருக்க...
சமீபத்தில், வெளியூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் என் தோழியின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது, 60 வயதை கடந்த ஒரு தாத்தாவும், பாட்டியும் அங்கு வந்தனர். தோழி கொடுத்த நல்லெண்ணெயை எடுத்து, அவர்கள் வீட்டிலிருந்தவர்களுக்கு, தலை மற்றும் உடலுக்கு எண்ணெய் தேய்த்து, 'மசாஜ்' செய்தனர்.
பின்னர், இதற்குரிய கட்டணமாக, பெரியவர்களுக்கு தலைக்கு, 20 ரூபாயும், சிறியவர்களுக்கு 10 ரூபாயும் வாங்கிக் கொண்டு, அடுத்த வீட்டிற்கு சென்றனர்.
இதுபற்றி தோழியிடம் கேட்டபோது, 'அவர்கள் அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள். அவர்களுடைய பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்து, சொத்துக்களைப் பிரித்துக் கொடுத்த பிறகு, ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டனர்.
'ஆனால், அதற்காக யாரிடமும் கையேந்தாமல், குடியிருப்பின் நிர்வாகிகளிடம் அனுமதி பெற்று, தங்களுக்கு தெரிந்த எண்ணெய், 'மசாஜ்' தொழிலை செய்து, கவுரவமாக வாழ்ந்து வருகின்றனர். மாதத்திற்கு 8,000 முதல் 10,000 ரூபாய் வரையும் சம்பாதிக்கின்றனர்...' என்றாள்.
கைத்தொழில் ஒன்றை கைவசம் வைத்திருப்பவருக்கு, வாழ்க்கையில் கவலை நெருங்காது என்பதை, அந்த முதிய தம்பதியர் நிரூபித்து வருகின்றனர்.
-மு.ஆதினி, சேலம்.
