தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

1


PUBLISHED ON : அக் 04, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 04, 2026

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெற்றோர்களே, 'பிளாக் மெயில்' செய்யாதீர்!

நண்பர் ஒருவர், தன் மகனுக்கு திருமணம் செய்ய மணமகளை தேர்ந்தெடுத்தார். மணமகளாக முடிவான அப்பெண், ஏற்கனவே ஒருவரை காதலித்து வந்த நிலையில், பெண்ணின் பெற்றோர், காதலுக்கு மறுப்பு தெரிவித்து, 'நாங்கள் பார்க்கும் மாப்பிள்ளையை நீ மணக்க வேண்டும், இல்லையென்றால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம்...' என, மிரட்டி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துள்ளனர்.

இருவீட்டாரும் தாம்பூலம் மாற்றி, நிச்சயம் செய்து, கல்யாண மண்டபத்திற்கு முன்பணமும் கொடுத்து விட்டனர். இந்நிலையில், பெண்ணின் காதல் விவகாரம், நண்பருக்கு தெரிய வந்தது. இதுபற்றி அப்பெண்ணிடம் விசாரித்த போது, தன் பெற்றோர் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியதால் தான் திருமணத்திற்கு சம்மதித்ததாக கூறியுள்ளார். அவள் பெற்றோரும், பெண்ணை மிரட்டியது உண்மை என்று ஒப்புக் கொண்டனர்.

உடனே திருமண ஏற்பாடுகளை நிறுத்திய நண்பர், அப்பெண் காதலித்தவனையே திருமணம் செய்து வைக்க, அவளது பெற்றோரிடம் சொல்லி விட்டார்.

பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்யும் பெற்றோர்களே... தங்கள் பிள்ளைகளிடம் அவர்களின் முழுமையான ஒப்புதல் பெற வேண்டும். மாறாக, பிள்ளைகளை, 'பிளாக் மெயில்' செய்து, தங்கள் முடிவை ஏற்றுக்கொள்ளச் செய்வது, நாளடைவில் அவர்களின் குடும்பத்தில் தேவையற்ற மன உளைச்சலையும், பொருட்செலவையும், ஏற்படுத்தும் என்பதை, உணர வேண்டும்.

— ரா.சாந்தகுமார், சென்னை.

மனநிம்மதிக்கு வேட்டு வைத்த ஓட்டெடுப்பு!

சமீபத்தில், தோழியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அவர்கள் குடும்பத்தில், நீண்ட காலத்திற்கு பின், பிறக்கப்போகும் குழந்தை என்பதால், சைவ, அசைவ விருந்து மற்றும் வந்தவர்களுக்கு 3 கிராம் எடையுள்ள வெள்ளிக்காசு பரிசு என, விழாவை அமர்க்களப்படுத்தியிருந்தனர். எல்லா நிகழ்வுகளும் மனநிறைவை தந்தாலும், கடைசியில் நடந்த ஒரு நிகழ்வு, மன நெருடலை உண்டாக்கியது.

அதாவது, வந்திருந்தோர் பிறக்கப் போவது, ஆணா, பெண்ணா என, ஒரு பேப்பரில் தங்கள் பெயர் மற்றும் போன் நம்பருடன் எழுதி, அங்குள்ள பெட்டியில் போட வேண்டும். சரியாக கணித்தவர்களுக்கு குழந்தை பிறந்த பின், பரிசு என்று அறிவித்தனர்.

ஒன்பதாவது மாதம் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்ததால், அடுத்த மாதமே பெண் குழந்தை பிறந்தது. ஆனால், 95 சதவீதத்தினர் ஆண் குழந்தை பிறக்கும் என்றே எழுதி பெட்டியில் போட்டிருந்தனர். இதனால், மிகுந்த சந்தோஷத்தில் இருந்த தோழியின் கணவர் குடும்பத்தார், பெண் குழந்தை பிறந்ததும், தோழியை பழிக்க ஆரம்பித்துள்ளனர். இதை என்னிடம் கூறி அழுதாள், தோழி.

'பெண் குழந்தை தான் குடும்பத்திற்கு, மகாலட்சுமி, வீட்டையும் நாட்டையும் நிர்வகிக்கும் திறன் பெற்றவர்கள். மேலும் உனக்கு அடுத்தது, ஆண் குழந்தை பிறக்கலாம்...' என்று ஆறுதல் கூறி அவளை சமாதானப்படுத்தினேன்.

வளைகாப்பு நிகழ்ச்சியில், இதுபோன்ற மன நிம்மதியை கெடுக்கும் ஓட்டெடுப்பு தேவையா?

— எம்.வெண்ணிலா, திண்டுக்கல்.

தேவை உணர்ந்து தொழில் தொடங்கினால்...

சமீபத்தில், வெளியூரிலுள்ள என் உறவினரைப் பார்த்து வரச் சென்றிருந்தேன். அவர் வீட்டின் முன், தள்ளுவண்டியில், குழம்பு மற்றும் பொரியல் வகைகளை, சுகாதாரமான முறையில், சுத்தமான பாத்திரங்களில் வைத்து, விற்பனை செய்தனர், ஒரு தம்பதியர்.

பலரும் அவர்களிடம் தங்களுக்கு தேவையான பொரியல் மற்றும் குழம்புகளை, தாங்கள் கொண்டு வந்த 'டிபன் பாக்சில்' வாங்கிக் கொண்டு, வேலைக்குச் செல்வதை பார்த்தேன்.

இதுபற்றி உறவினரிடம் விசாரித்தேன்...

அவர், 'இந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலான குடும்பங்களில் கணவன் - மனைவி இருவருமே வேலைக்குச் செல்வதால், தினமும் காலையில் பிள்ளைகளை கிளப்பி பள்ளியில் விட்டு, அலுவலகம் கிளம்பவே நேரம் சரியாக இருக்கிறது; அவர்களுக்கு சமைக்க நேரம் இல்லை என்பதை அறிந்து, இதே பகுதியில் வசிக்கும் அந்த தம்பதியர், விதவிதமான குழம்பு மற்றும் பொரியல் வகைகளை வீட்டில் சமைத்து, சுயதொழிலாக செய்ய தொடங்கினர்.

'அதுமட்டுமின்றி, வீட்டு முறையில் அவர்கள் சமைக்கும் உணவு மிகுந்த சுவையாக இருக்கிறது என்ற நற்பெயரும் பெற்று விட்டனர். இதன்மூலம் அவர்கள், வருமானம் ஈட்டி, முன்னேறி வருகின்றனர்...' என்றார்.

தேவை அறிந்து தொழில் தொடங்கினால், வெற்றி நிச்சயம் என்பதை நிரூபித்து வரும் அவர்களைப் போல, வேலையில்லாதவர்களும், இதுபோல் ஏதாவது சுயதொழிலை தொடங்கி வாழ்வில் வளர்ச்சியடையலாமே!

— வி.முருகன், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us