தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : அக் 11, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 11, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பயனுள்ள ஆண்டு விழா!

சமீபத்தில், என் நண்பர் வசிக்கும் குடியிருப்பில் நடைபெற்ற ஆண்டு விழாவில் கலந்து கொண்டேன்.

வழக்கமாக இதுபோன்ற விழாக்களில், ஆடல், பாடல் நிகழ்ச்சிகளே இடம்பெறும். ஆனால், அங்கு ஒரு வித்தியாசமான முயற்சியை செய்திருந்தனர்.

விழாவின் ஒரு பகுதியாக, குடியிருப்பில் வசிக்கும், பல்வேறு துறைகளை சேர்ந்த நபர்கள், தங்கள் திறன்களையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளும் பயனுள்ள நிகழ்ச்சியாக அமைந்திருந்தது.

குடியிருப்பில் வசிக்கும், மருத்துவர், முதலுதவி செய்யும் முறை ; வங்கி அதிகாரி, இணைய மோசடிகளை தவிர்க்கவும்; வழக்கறிஞர், அடிப்படை சட்ட விழிப்புணர்வு மற்றும் இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் அமைப்பது பற்றியும் தெளிவாக புரியும்படி விளக்கி கூறினர்.

நிகழ்ச்சி முடிந்த பின், நண்பரிடம் விசாரித்தேன்...

'ஒரே குடியிருப்பில் வசித்தாலும், பலரின் திறமைகள், மற்றவர்களுக்கு தெரியாமல் போய் விடுகின்றன. அதனால், அனைவரும் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளும் வகையில், இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம்...' என்றார்.

பொழுதுபோக்குடன், அனைவருக்கும் பயன்படும் முயற்சியை மேற்கொண்ட, அக்குடியிருப்பு நிர்வாகிகளை பாராட்டி வந்தேன்.

- ஆ.வீரப்பன், திருச்சி.

பக்கவாத நோயாளியின் உற்சாகமூட்டும் செயல்!

பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட நண்பரின் அப்பாவை, சந்தித்து நலம் விசாரிக்க அவரது வீட்டிற்கு சென்றிருந்தேன்.

ஹாலில் இருந்த நண்பரின் அம்மாவிடம் நலம் விசாரித்தபின், நண்பரின், அப்பா இருந்த அறைக்குச் சென்றேன். அந்த அறையில் மெல்லிய ஓசையில் சினிமா பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, அந்த பாடலை ரசித்தபடியும், பாடலின் இசைக்கு ஏற்ப கை, கால் மற்றும் உடலை அசைத்துக் கொண்டிருந்தார், அந்த பக்கவாத நோயாளி.

இதைப் பார்த்ததும், என்னப்பா, 'டான்ஸா!' என, அவரை கிண்டலடித்தேன்.

அதற்கு அவர், 'இந்த செயல் மற்றவரின் பார்வைக்கு கிண்டலாக தெரியும்; ஆனால், எனக்கு இது ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்லாமல், மன அழுத்தத்தை குறைக்கும் மருந்து. இதுபோன்ற செயலால், செயலற்று கிடக்கும் நரம்புகள் மீண்டும் புத்துணர்ச்சி பெறுவது போன்ற உணர்வுகளும் ஏற்படுகின்றன. நான் ஒரு நோயாளி என்பதை மறந்து, முன்பு எப்படி இருந்தேனோ அது போலவே, இப்பவும் இருப்பதாக உணர்கிறேன். இதனால், சீக்கிரம் குணமடைவேன் என்ற நம்பிக்கை எனக்கு வருகிறது...' என்றார்.

உடல்நலம் குன்றி விட்டதால், நாம் மற்றவர்களுக்கு பாரமாகி விட்டோம் என, எண்ணி வருந்தாமல், இப்போதும் நலமுடன் வாழ்கிறோம் என்ற எண்ணத்துடன் செயலாற்றும் நண்பரின் அப்பாவுக்கு வாழ்த்து சொல்லி, விடைபெற்றேன்.

உங்களுக்கு தெரிந்த இதுபோன்ற நோயாளி உள்ளனரா? நண்பரின் தந்தையின் முயற்சியை பின்பற்றச் சொல்லுங்கள்.

-  ரா.ராஜ்மோகன், திண்டிவனம்.

உறவினரின் வித்தியாசமான உதவி!

என் உறவினர் ஒருவர், தன் மகனின் திருமணத்தை வித்தியாசமான முறையில் கொண்டாடினார்.

திருமணத்திற்காக ஆடம்பரமாக செலவு செய்வதற்கு பதிலாக, அவரது வீட்டின் அக்கம்பக்கத்தில் நீண்ட காலமாக, 'பெயின்ட்' அடிக்கப்படாமல் இருந்த, ஏழ்மை மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு புது, 'பெயின்ட்' அடித்து, பளிச்சென்று மாற்றியிருந்தார்.

அவரது இந்தச் செயல், அந்த ஏழைக் குடும்பங்களுக்கு எதிர்பாராத மகிழ்ச்சியைத் தந்ததோடு, அத்தெருவில் வசித்த அனைவரின் பாராட்டையும் பெற்றது.

திருமண விழா சில மணி நேரத்தில் முடிந்து விடும். ஆனால், ஒருவரின் வீட்டை அழகுபடுத்தி, அவர்களது மனதில் ஏற்படுத்தும் மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நிலைத்திருக்கும். அதைவிட, அந்த ஏழைக் குடும்பங்களின் மனமார்ந்த ஆசீர்வாதம் அந்தத் தம்பதியருக்கு கிடைக்கும்.

திருமணம் போன்ற விசேஷ நிகழ்ச்சிகளில் தேவையற்ற ஆடம்பரச் செலவுகளை சற்றுக் குறைத்து, அதில் ஒரு பகுதியையாவது ஏழைகளின் தேவைக்காகச் செலவிட்டால், உதவி பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியும், உதவி செய்பவர்களுக்கு மனநிறைவும் கிடைக்கும்.

இப்படியொரு வித்தியாசமான நல்ல காரியத்தை செய்த என் உறவினரை மனதாரப் பாராட்டினேன்.

-  மகேஷ் அப்பாசாமி, கன்னியாகுமரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us