தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

1


PUBLISHED ON : அக் 18, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 18, 2026

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாராட்டுக்குரிய திருமண வரவேற்பு ஏற்பாடு!

அண்மையில், என் நெருங்கிய உறவினரின் மகன் திருமணத்திற்கு, குடும்பத்துடன் சென்றேன். வழக்கமாக, மண்டப நுழைவாயிலில், இளம் பெண்கள், பன்னீர் தெளித்து வரவேற்பர். ஆனால், அங்கு மணமக்களின் தாத்தாவும், பாட்டியும் பாரம்பரிய உடையில் நின்று, திருமணத்திற்கு வருகை தந்த விருந்தினர்களை, புன்னகையுடன் கைகூப்பி வரவேற்றனர்.

திருமண விழாவுக்கு வந்த விருந்தினர்கள் அனைவருக்கும், அவர்கள் பன்னீர் தெளித்து, அன்போடு ஆசீர்வதித்து, வரவேற்பளித்தனர். அவர்களின் வரவேற்பில், மரியாதை, பாசம் மற்றும் பாரம்பரியம் ஆகியவை கலந்திருந்தன. வயது முதிர்ந்த பெரியோர்களின் கைகளால் ஆசீர்வாதம் பெற்றது, மனதிற்கு தனி மகிழ்ச்சியை அளித்தது.

வீட்டின் மூத்தோருக்கு உரிய மரியாதையையும், விருந்தினர்களுக்கு அர்த்தமுள்ள வரவேற்பையும் ஒருசேர வழங்கிய இந்த ஏற்பாடு, மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

இதுபோன்ற நல்ல நடைமுறைகளை, குடும்ப விழாக்களில் பின்பற்றலாமே!

-ஆர்.செந்தில்குமார், மதுரை

தெருவின் ஒற்றுமை!

வெளியூரில் வசிக்கும் நண்பர் ஒருவரை சந்திக்க, அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவரது தெரு முழுவதும் மாவிலை தோரணம் கட்டி, வீட்டுக்கு வீடு அழகாகக் கோலமிட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. அந்த காட்சி என்னை ஆச்சரியப்படுத்தியது.

'என்ன விசேஷம்?' என்று நண்பரிடம் கேட்டேன்.

'எங்கள் தெருவில், புதிதாக ஒருவர், இடம் வாங்கி வீடு கட்டி இன்று, புதுமனை புகுவிழா நடத்துகிறார். அதனால், தெருவில் உள்ள அனைவரும் சேர்ந்து இப்படி விழாவைச் சிறப்பிக்கிறோம்...' என்றார்.

'அவர் வீட்டில் விசேஷம் என்றால், தெரு முழுவதும் மாவிலை தோரணம் கட்டி, அனைவர் வீடுகளிலும், கோலமிடுவது புதுமையாக இருக்கிறதே!' என்றேன்.

சிரித்தபடி, 'எங்கள் தெருவில் யார் வீட்டில் விசேஷம் நடந்தாலும், அது அவர்களுடைய குடும்பத்தின் விசேஷமாக மட்டும் இருப்பதில்லை. எங்கள் தெருவில் வசிப்பவர்கள் அனைவருடைய வீட்டு விசேஷமாகவே கருதி, ஒன்று சேர்ந்து கொண்டாடுவோம்.

'புதிதாக ஒருவர் இங்கே குடியேறும்போது, அவர்களுக்கு, 'நாம் தனியாக இல்லை; இந்தத் தெருவே நம்முடன் இருக்கிறது...' என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பதற்காகவே, எங்கள் தெருவிலுள்ளவர்கள் அனைவரும் இணைந்து இதைச் செய்கிறோம்...' என்றார், நண்பர்.

அதைக்கேட்டு வியந்தேன்.

சிறிய அளவில் துவங்கும் அன்பும், ஒற்றுமையும் எவ்வளவு பெரிய உறவை உருவாக்கும் என்பதை, அந்தத் தெருவாசிகள் எனக்கு உணர்த்தினர். 'தெரு ஒற்றுமையாக இருந்தால், ஊர் ஒற்றுமையாக இருக்கும்; ஊர் ஒற்றுமையாக இருந்தால், நாடு ஒற்றுமையாக இருக்கும்' என்பதற்கு, இந்த தெருவாசிகளின் செயல்பாடே நல்ல எடுத்துக்காட்டு!

எம்.பி.இலக்கியவாணன், பல்லடம்.

இளைஞர்கள் நடத்திய கோவில் கொடை விழா!

எங்கள் ஊர், காவல் தெய்வத்தின் கோவிலில், ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் கொடைவிழா நடைபெறும். அவ்விழாவை கோவிலின் தர்மகர்த்தா குழுவினர், நடத்துவது வழக்கம். அப்போது, பக்தர்கள் நேர்த்திக்கடனாக நுாற்றுக்கணக்கான ஆடுகளை பலியிடுவர்.

கடவுளின் பெயரால், ஆடுகள் பலியிடுவதை அவ்வூரில் உள்ள இளைஞர்கள் விரும்பாமல், தர்மகர்த்தா குழுவினரிடம், 'ஆடுகளை பலியிட வேண்டாம்...' என, கேட்டு கொண்டனர்.

ஆனால் அவர்களோ, 'அது பக்தர்களின் நேர்த்திக்கடன். அதை நாம் தடை செய்தால், அது, தெய்வ குற்றம் ஆகிவிடும்...' எனக் கூறிவிட்டனர்.

சமீபத்தில், வயது மூப்பு காரணமாக கோவிலின் தர்மகர்த்தா மற்றும் நிர்வாகத்தினர் சிலர் அப்பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றனர். அடுத்து கோவில் தர்மகர்த்தாவாக, இளைஞர் ஒருவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார், அவருடன் சில இளைஞர்களும், கோவிலின் நிர்வாக பொறுப்பை ஏற்றனர். அவர்கள் நடத்திய, முதல் காவல் தெய்வ கொடை விழாவில், ஊர் பெரியவர்களின் எதிர்ப்பையும் மீறி, ஆடுகளைப்பலியிடுவதை தடை செய்தனர்.

'பக்தர்கள், கோவிலுக்கு ஆடுகளை நேர்த்திக்கடனாக செலுத்த விரும்பினால், அதற்குரிய பணத்தை கோவில் நிர்வாகத்திடம் செலுத்தி, ரசீது பெற்றுக்கொள்ளலாம்!' என, அறிவித்தனர். நுாற்றுக்கணக்கான பக்தர்கள், ஆடு வாங்குவதற்கு வைத்திருந்த, பணத்தை கோவில் நிர்வாகத்திடம் செலுத்தி, நேர்த்திக்கடனை நிறைவேற்றிய மனநிறைவை பெற்றனர். லட்சக்கணக்கில் பணம் சேர்ந்தது.

கோவிலின் நிர்வாக செலவு போக மீதமுள்ள பணத்தில், ஊரில் உள்ள ஏழை மாணவ - மாணவியருக்கு கல்விச் செலவு, குளம் துார் வாருதல், பேருந்து நிலையம் சீரமைப்பு, சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல் போன்ற பொது காரியங்களையும் செய்து வருகின்றனர்.

ஆரம்பத்தில், எதிர்ப்பு தெரிவித்த பெரியவர்கள் கூட, இளைஞர்களின் இந்த செயல்களை கண்டு, அவர்களுக்கு ஆதரவாக மாறிவிட்டனர்.

அனைத்து கோவில் திருவிழாக்களிலும், இதே முறையை, கோவில் நிர்வாகத்தினர் செயல்படுத்தி, தங்கள் ஊரை வளர்ச்சியடைய செய்யலாமே!

-  க.சரவணக்குமார், திருநெல்வேலி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us