தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : நவ 15, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 15, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்...

எங்கள் வீட்டு அருகில், நடுத்தர வயது பெண்மணி ஒருவர் வசிக்கிறார். அவர், கணவனை இழந்தவர். அவருடைய மகன், சென்னையில் வேலை செய்கிறான். போதிய வருமானம் இல்லை. ஒருநாள், என்னிடம் பேசிக்கொண்டு இருந்தார், அப்பெண்மணி. அப்போது, 'மகன் அனுப்பும் பணம் வீட்டு வாடகை கொடுத்தது போக, சாப்பாட்டுக்கே கஷ்டமாக உள்ளது...' என, கூறி வருத்தப்பட்டார். இதனால், 'அவருக்கு நம்மால் முடிந்த ஏதாவது உதவி செய்யணும்...' என்று நினைத்து கொண்டேன்.

அச்சமயம், நான் ஒரு மாதம் குடும்பத்துடன் பெங்களூருக்கு செல்ல வேண்டியிருந்தது. அப்போது, 'நம் வீட்டு வாசல், பெருக்கப்படாமலும், கோலமிடப்படாமலும், ஒரு மாதம் குப்பைகள் சேர்ந்து காணப்பட்டால், அது ஆள் நடமாட்டம் இல்லாத வீடு என்று, திருடர்களுக்கு தெரிந்து, அவர்கள் வந்து, வீட்டில் இருக்கும் விலை உயர்ந்த பொருட்களை திருடிச் சென்றுவிடுவார்களே...' என்று பயந்தேன்.

அதனால், அந்த பெண்மணியிடம், 'ஒரு மாதம் ஊருக்கு போறேன். நீங்கள் தினமும் எங்கள் வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து, கோலம் போட்டு, செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற முடியுமா? 1500 ரூபாய் பணம் தருகிறேன்...' என்று கேட்டேன். அவரும், 'கண்டிப்பாக செய்கிறேன்...' என்று ஒப்புக்கொண்டார்.

நாங்களும், எங்களுடைய பயணத்தை முடித்துவிட்டு, வீட்டிற்கு வந்தோம். எங்களை பார்த்ததும் அந்த அம்மாவின் முகத்தில் மிகுந்த சந்தோஷம் தெரிந்தது.

அவர் என்னிடம் வந்து, 'அம்மா, நீங்கள் தொடங்கி வைத்த இந்த வேலையால், இப்போது நான் சுற்றுவட்டாரத்தில், 10 வீடுகளுக்கு வாசல் தெளித்து, கோலம் போடுகிறேன். மாதம், 15 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் வருகிறது...' என்றார். அதைக்கேட்டு, சந்தோஷமடைந்தேன்.



ந.பகவதி, கோவில்பட்டி.

அதட்டல் ஒரு திகட்டல்!

சமீபத்தில், உறவினர் இல்ல திருமணத்துக்கு சென்றபோது, மத்திய அரசின் உயர் பொறுப்பில் இருக்கும் சொந்தக்கார பெண்மணி ஒருவர், விழாவில் ஆடம்பரமாக, அலட்டலாக வலம் வந்து கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த, ஒரு கிராமத்து பெண்மணி, 'அடடே, சின்ன வயசுல பார்த்தது. அடையாளமே தெரியல. எப்படிம்மா இருக்கே?' என்று ஆவலாக தமிழில் விசாரித்தார்.

ஆனால், அந்த பெண்மணியோ ஆங்கிலத்தில் பதில் சொன்னாள்.

கிராமத்து பெண்மணி எதுவும் புரியாமல் விழிக்க, 'அப்பா-அம்மா நல்லா இருக்காங்களா? சொந்த ஊர் பக்கமே வரவில்லையே. ஏம்மா?' என்றாள், மீண்டும்.

அதற்கும் அந்த அலட்டல் பெண்மணி நுனி நாக்கு ஆங்கிலத்தில் அனைவருக்கும் கேட்கும்படி, ஆங்கிலத்திலேயே பதில் சொன்னாள். கிராமத்து பெண்மணி விழித்தபடி அசட்டு சிரிப்புடன் விலகினாள்.

பொது இடத்தில் ஆங்கில புலமையையோ, அந்தஸ்தையோ காட்டி, போலி மரியாதையை வலிய தேடுவது அநாகரிகம். ஆங்கிலேயர்களோடு ஆங்கிலம் பேசினால், அதில் அர்த்தமுண்டு. படிக்காத கிராமத்து பெண்ணிடம் ஆங்கிலம் பேசினால், எப்படி புரிந்துகொள்வாள் என்ற அடிப்படை அறிவு கூடவா இல்லை.

படித்தவர்களே, இப்படி இருந்தால், பாமரர்களும், 'தமிங்கிலீஷில்' பேசுவது தான் நாகரிகம் என்று தப்பாக புரிந்துகொண்டு, பாவம் நம் தாய் மொழியைத்தான் அழித்துக் கொண்டிருக்கின்றனர். இனியாவது படித்தவர்கள் முன்மாதிரியாக நடப்பரா!



மல்லிகா அன்பழகன், சென்னை


பணியாளர்களையும் மதிப்போம்!

சமீபத்தில், என் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அனைவரும் மிகவும் சோர்வாகக் காணப்பட்டனர். 'என்னாச்சு... யாருக்காவது, உடம்பு சரியில்லையா?' என்று கேட்டேன்.

அதற்கு அவர், 'ஒரு வாரத்திற்கு முன் வாங்கிய,'சிக்கன்' சமைக்கப்படாமல் அப்படியே 'பிரிஜ்ஜில்' இருந்திருக்கு. அதை பார்த்த என் மனைவி, வீட்டில் வேலை செய்யும் பெண்ணிடம் கொடுத்திருக்கிறாள். அவளும் வீட்டிற்கு எடுத்து சென்று சமைத்து, குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டிருக்கின்றனர். சாப்பிட்ட ஒரு மணி நேரத்திலேயே வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு அதிகமாகியதன் விளைவாக, அப்பெண் மற்றும் அவள் குடும்பத்தினரை மருத்துவமனையில் சேர்ந்திருக்கின்றனர்.

'நடந்த விஷயத்தை போன் செய்து என்னிடம் கூறினான், அப்பெண்ணின் அண்ணன். நாங்கள் உடனே மருத்துவமனைக்கு சென்று, அவர்களிடம் விசாரித்தோம். 'புட் பாய்சன்' ஆகியிருக்கு, உயிருக்கு ஏதும் ஆபத்தில்லை. ஆனால், சகஜ நிலைக்கு திரும்ப, இரண்டு நாட்கள் ஆகும், என்று டாக்டர் சொல்லியதாக கூறினர்.

'அப்போது, அப்பெண்ணின் அண்ணன் என்னிடம் கோபமாக, எதற்காக, கெட்டுப்போன சிக்கனை கொடுத்தீர்கள்? நீங்களே சமைத்து சாப்பிட்டிருக்கலாமே, இல்லையென்றால், குப்பையில் போட்டிருக்க வேண்டியதுதானே, ஏழைகள் என்றால் உங்களுக்கு இளக்காரமா... அவர்கள் செலவுக்கே சிரமப்படுபவர்கள், அதனால், அவர்களின் மருத்து வச் செலவை நீங்களே ஏற்க வேண்டும்...' என்று கறாராக சொன்னான்.

'வேண்டுமென்றே செய்யவில்லை. தெரியாமல் நடந்துவிட்டது. மன்னித்துக் கொள்ளுங்கள், மருத்துவ செலவு எல்லாவற்றையும் நானே ஏற்றுக்கொள்கிறேன், என்று சொன்ன பின்னரே, அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு கோபம் தணிந்தது.

'குணமடைந்து வீடு திரும்பிய அந்த பெண், 'இனி, நான் உங்க வீட்டுக்கு வேலைக்கு வர முடியாது...' என்று கூறிவிட்டாள்.

'அதுமட்டுமல்லாமல், 'சிக்கன்' கொடுத்த விஷயத்தை அக்கம்பக்கத்திலுள்ள வீடுகளுக்கும் தெரியப்படுத்தி விட்டாள். இப்போது அவர்கள் எங்களை ஒரு வெறுப்புடன் பார்க்கின்றனர்...' என்றும் வேதனையோடு சொல்லி முடித்தார், உறவினர்.

நம் பணியாளர்களும், நம்மை போன்ற சக மனிதர்கள் தான் என்று நினைக்க வேண்டும். இல்லாவிட்டால் இப்படி தான் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டியிருக்கும்.

எ.முகமது ஹுமாயூன், நாகர்கோவில்.

மனமிருந்தால்...

கணவனை இழந்த பெண் ஒருவர், தன் இரண்டு குழந்தைகளுடன் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். அவரது நிலையைக் கண்ட ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர், 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து, மிளகாய், தனியா, பருப்பு வகை போன்ற சமையல் பொருட்களை மொத்தமாக வாங்கி, அவற்றை சின்ன சின்ன பாக்கெட்டுகளாகப் போட்டு, மாலை நேரத்தில் கோவில் வாசலில் கடை போட்டு விற்பதற்கு ஏற்பாடு செய்தார்.

அந்த பெண்ணின் நல்ல நேரம், பத்தே நாளில், பொருட்கள் யாவும் விற்று, இரண்டாயிரம் ரூபாய் லாபமும் கிடைத்தது.

மீண்டும் அதே தொகையில் மளிகை பொருட்கள் வாங்கி விற்பனை செய்தார். நாளடைவில் விற்பனை பெருகி, வாங்கிய கடனையும் அடைத்து விட்டார். வீட்டில் இன்று கஷ்டம் இல்லாமல் அடுப்பு எரிகிறது. குழந்தைகளும் இப்போது நன்றாக படித்துக் கொண்டிருக்கின்றனர்.

- ர.புவனேஸ்வரி, பெங்களுரு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us