தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : நவ 29, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 29, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நல்ல உள்ளங்களுக்கு நன்றி சொல்வோம்!

சமீபத்தில், என் குழந்தைக்கு உடல்நல குறைவு ஏற்பட, குழந்தைகள் நல மருத்துவமனை ஒன்றுக்கு சென்றிருந்தேன். அங்கே, ஏற்கனவே காய்ச்சல் கண்ட கைக்குழந்தைகளை வைத்துக் கொண்டு, பல தாய்மார்கள் காத்திருந்தனர். நேரம் செல்ல செல்ல என் குழந்தை அழ ஆரம்பித்தது; சமாதானப்படுத்த முடியாமல், தவித்தேன்.

அந்த நேரத்தில், 'ரிசப்ஷனில்' இருந்த பெண், என் குழந்தை மட்டுமல்லாமல், மற்ற அழும் குழந்தைகளிடமும் சிறு சிறு பலுான்களை ஊதி அவர்களிடம் கொடுத்தும், கிலுகிலுப்பை ஆட்டியும், பொம்மைகளைக் கொடுத்தும், சமாதானப்படுத்தினாள்.

பொதுவாக, 'ரிசப்ஷனில்' இருக்கும் பெண்கள், தினம் தினம் இது போன்று அழும் குழந்தைகளைப் பார்த்து, பார்த்து கல் போன்ற உணர்வுக்கு வந்துவிடுவர். எந்த குழந்தை எப்படி அழுதாலும் கண்டுகொள்ளாமல், சிடுசிடுப்பர்.

இதற்கு மாறாக, தன் குழந்தை போல அக்கறையோடும், அன்போடும் கவனித்துக்கொண்ட அந்தப் பெண்ணின் செயல், மனதைக் கவர்ந்தது.

தன் வேலையில் ஆத்மார்த்தமாகவும், அர்ப்பணிப்போடும் இருந்த அந்த பெண்ணை மனதார வாழ்த்தி, ஆசீர்வதித்துவிட்டு வந்தேன்.

-  பா.சுபானு, காரைக்குடி.

ஆசிரியைக்கு ஒரு சபாஷ்!

என் சகோதரியின் மகன், அரசு மேல்நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கிறான். அவன் என்னிடம், 'என் வகுப்பு ஆசிரியை வாரம் ஒருமுறை ஒவ்வொரு மாணவரையும், தங்கள் கையால் ஏதாவது சிற்றுண்டி செய்து வகுப்புக்கு கொண்டுவரச் சொல்வார். அந்த வரிசையில், இன்று என்முறை என்பதால், நானே என் கையால் சிற்றுண்டியை செய்து எடுத்து சென்றேன். அதை சுவைத்து சாப்பிட்டு, என்னையும் பாராட்டினார்...' என்றான்.

இதன் நோக்கம் என்னவென்று அறிந்து கொள்ள, நான், அவன் வகுப்பு ஆசிரியையைச் சந்தித்து விசாரித்தேன். அவரது பதில் என்னை வியக்க வைத்தது...

'இன்றைய குழந்தைகள் பலரும், 'ஆன்-லைனில்' உணவை, 'ஆர்டர்' செய்து சாப்பிடுவதையே விரும்புகின்றனர். நாளை இவர்களுக்கு சமைக்கத் தெரியாத நிலை வந்துவிடக் கூடாது; ஆண், பெண் என்ற பாகுபாடின்றி அனைவரும் சமையலை கற்றுக்கொள்ள வேண்டும். அதற்காகத்தான் நான் சிறு வயதிலேயே இந்தப் பழக்கத்தை இவர்களுக்கு ஏற்படுத்துகிறேன்...' என்றார்.

அவரது தொலைநோக்குச் சிந்தனையைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.

சமையல் வேலை, பெண்களுக்கு மட்டுமே உரிய வேலை என்ற காலம் மாறிவிட்டது. தனக்குப் பிடித்த உணவை தானே சமைத்துச் சாப்பிடுவது, ஒரு சுயசார்பு வாழ்க்கையின் அடையாளம். வீட்டில் பெற்றோரும், குழந்தைகளுக்கு சமைக்க கற்றுக்கொடுத்தால், குடும்பப் பொறுப்புணர்வும் வளரும். வீட்டுச் சாப்பாட்டின் அருமையை புரிந்து, ஆரோக்கியமற்ற உணவுகளை, 'ஆன்-லைனில் ஆர்டர்' செய்து சாப்பிடும் பழக்கமும் குறையும்.

மதிப்பெண்களுக்காக பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு மத்தியில், வாழ்க்கைக்குத் தேவையான பாடத்தையும் கற்றுத்தரும் இந்த ஆசிரியை பாராட்டுக்குரியவர்.

புத்தகக் கல்வி வாழ்க்கைக்கு வழிகாட்டும்; சமையல் கல்வி வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள உதவும்.

-  தி.ஸ்ரீபிரியா, சென்னை.

கிராமத்தினரின் மனித நேயம்!

சமீபத்தில், என் உறவினர் வசிக்கும் கிராமத்திற்கு சென்றிருந்தேன். அப்போது, ஒரு வீட்டின் முன் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர், ஊர் மக்கள்.

அதுபற்றி அறியும் ஆர்வத்தில், உறவினரிடம் விசாரித்தேன்.

'இந்த ஊரில் வசிக்கும், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், நல்ல மதிப்பெண் பெற்றிருக்கிறார். மேற்படிப்பை தொடர்வதற்கு பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை. இதையறிந்த ஊர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, தங்களால் இயன்ற தொகையைச் சேகரித்து, ஊர்த் தலைவர் முன்னிலையில், அந்த மாணவியின் கல்விச் செலவை, வழங்குவதற்காக இங்கு கூடியுள்ளனர்.

'மேலும், இந்தக் கிராமத்தைப் பொறுத்தவரை, ஒருவருக்கு ஒரு துன்பம் என்றால், அது ஒட்டுமொத்த ஊரின் துன்பமாகக் கருதப்படும். திருமணம், நோய், கல்வி என, எந்த சூழலிலும் ஒருவருக்கொருவர் துணையாக நிற்பது, எங்களது இயல்பு...' என்றார்.

அதைக்கேட்டு நெகிழ்ந்தேன், நான்.

வசதி படைத்தவர்கள் மட்டுமே உதவ முடியும் என்றில்லாமல், நல்ல மனமும், பகிர்ந்து கொள்ளும் எண்ணமும் இருந்தால், கூலி வேலை செய்து வாழ்பவர்களும், ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள முடியும் என்பதை, நிரூபித்து வருகின்றனர், அந்தக் கிராம மக்கள்.

-   கே.கல்யாணி, விக்கிரவாண்டி.

இரட்டிப்பு வருமானம் பெற...

எங்கள் பகுதியில், தனியார் பள்ளி ஒன்றில் பணியாற்றும் தமிழாசிரியர் ஒருவர் வசிக்கிறார்.

ஒருநாள் அவரது வீட்டின் முன் புதிதாக வைக்கப்பட்டிருந்த ஒரு விளம்பரப் பலகை என்னை கவர்ந்தது...

'திருமணம், காதுகுத்து, புதுமனை புகுவிழா, கண்ணீர் அஞ்சலி உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளுக்கும் மனதைத் தொடும் கவிதை, வாழ்த்து மற்றும் அஞ்சலி வாசகங்கள் எழுதித்தரப்படும்!' என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அவரைச் சந்தித்து, 'சார், இந்த யோசனை எப்படி வந்தது?' என்று கேட்டேன்.

அதற்கு அவர், 'ஒருநாள் கடை தெருவுக்கு சென்ற போது, அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு கண்ணீர் அஞ்சலி பேனரில் ஏராளமான எழுத்துப் பிழைகளும், பொருள் மாறிய வாசகங்களும் இருந்தன. அதைப் பார்த்த போது, மனம் வருந்தியது. தமிழை நேசிக்கும் நான், இதை சரிசெய்ய நினைத்தேன். அப்படித்தான் இந்த முயற்சி பிறந்தது.

'பள்ளி வேலை முடிந்த பிறகு, கிடைக்கும் நேரத்தில், திருமணம், காதணி விழா, பிறந்தநாள், புதுமனை புகுவிழா, கண்ணீர் அஞ்சலி என, எல்லா நிகழ்வுகளுக்கும், அவரவர் பின்னணிக்கு, பொருத்தமான வரிகளை எழுதிக் கொடுக்க ஆரம்பித்தேன்; மக்களுக்கும் பிடித்துப் போனது.

'இப்போது, 'பிளக்ஸ் பேனர் பிரின்ட்' செய்பவர்கள், அழைப்பிதழ் அச்சிடுபவர்கள் பலரும் என்னைத் தேடி வருகின்றனர். அவர்களிடம் குறைந்த கட்டணம் தான் வாங்குகிறேன். அதைவிட, நான் எழுதிய வரிகள் பலரது மகிழ்ச்சியிலும், துக்கத்திலும் இடம் பெறுகின்றன என்பதே எனக்கு மிகப் பெரிய மனநிறைவு...' என்றார்.

ப.சிதம்பரமணி, கோவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us