sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 22, 2026 ,தை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கடமை!

/

கடமை!

கடமை!

கடமை!

3


PUBLISHED ON : ஜன 18, 2026

Google News

PUBLISHED ON : ஜன 18, 2026

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அம்மா படுத்திருக்கும் அறை கதவை மெல்ல திறந்து பார்த்தாள், சுவர் பக்கமாக ஒருக்களித்து படுத்து அம்மா துாங்குவது தெரிய, சப்தமில்லாமல் கதவை மூடினாள், லதா.

ஹாலில் மனைவியோடு உட்கார்ந்திருக்கும் தம்பியைப் பார்த்தாள்.

''அப்புறம் என்ன முடிவு பண்ணியிருக்கே, ரவி.''

''எதைப் பத்தி கேட்கறே? அக்கா.''

''எல்லாம் அம்மாவை அழைச்சுட்டு போறது பத்திதான். அப்பா இறந்து, பதினாறாவது நாள் சடங்கு முடிஞ்சாச்சு. இரண்டு பேருமாக இருந்த வரைக்கும் தனியா இருந்தாங்க. அம்மாவை தனியாக விட முடியாது, ரவி. வாடகை கொடுத்து அம்மா தனியாக இருப்பது அவசியமில்லை. வீட்டை காலி பண்ணிட்டு உன்னோடு அழைச்சுட்டு போய் வச்சுக்க.''

அவள் பேசி முடிக்கும் முன் வாய் திறந்தாள், தம்பி மனைவி, ஆர்த்தி.

''ஏன் இவங்களுக்கும் அம்மா தானே. படிக்க வச்சு, நகை போட்டு கல்யாணம் பண்ணி தானே வச்சாங்க. என்னமோ நமக்கு மட்டும் தான் பொறுப்பு இருக்கிற மாதிரி பேசறாங்க,'' என்று சற்று உரக்கவே பேசினாள்.

''புரியாமல் பேசாதே, ஆர்த்தி. எனக்கும் அம்மா தான். நான் அதை மறுக்கலை. இருந்தாலும், எனக்கு மாமனார், மாமியார் இருக்காங்க, பெரிய குடும்பம். என்னால் நிரந்தரமாக அம்மாவை வச்சுக்க முடியாது. வருஷம் இரண்டு மாசம் என் ஆசைக்கு கொண்டு போய் வச்சுக்க முடியும். ஆண்மகனுக்கு தான் பொறுப்பு அதிகம். அதைப் புரிஞ்சுக்கங்க. அவங்களால உங்களுக்கு எந்த சிரமமும் வராது,'' என்றாள், லதா.

அதுவரை எதுவும் பேசாமல் இருந்த ரவி, ''சரிக்கா, யோசிச்சு ஒரு முடிவுக்கு வருவோம்.''

''தட்டிக்கழிக்க பார்க்காதே, ரவி. அப்பா இருந்த வரைக்கும், அம்மாவை நல்லபடியாக பார்த்துக்கிட்டாரு. அதேபோல், அம்மாவை கடைசிவரை நாமும் பாதுகாக்கணும். அது, நம் கடமையும் கூட,'' என்றாள், லதா.

''அக்கா சொல்றதும் சரி தான். அம்மாவை இனி தனியாக விட முடியாது. நம்மோடு அழைச்சுட்டு போய் வச்சுக்கலாம். சொல்லப் போனால் அவங்க வந்தால் உனக்கும் சவுகரியம் தான். சமையல் முதற்கொண்டு அம்மா உனக்கு உதவியாக இருப்பாங்க. உன் வேலைப்பளு கணிசமாகக் குறையும். அதுவுமில்லாமல் அப்பா, 'பென்ஷனில்' அம்மாவுக்கும் பணம் வரும். எந்த விதத்திலும், நமக்கு நஷ்டமில்லை, என்ன சொல்ற?'' என்றான், ரவி.

''ம்... எல்லாம் என் தலையெழுத்து. அக்காவும், தம்பியும் சேர்ந்து என் தலையில் கட்டப் போறீங்க. நீங்க பாட்டுக்கு நல்லதா போச்சுன்னு ஆபீசுக்கு கிளம்பிப் போயிடுவீங்க. நான்தான் நேரத்துக்கு சாப்பாடு கொடுத்து, அவங்களை பார்த்துக்கணும். பிள்ளைகளையும் கவனிச்சு, இவங்களையும் பார்த்துக்கிட்டு... நினைச்சாலே எரிச்சலாக வருது,'' என்றாள், ஆர்த்தி.

''ப்ளீஸ் ஆர்த்தி. அம்மா எந்த விதத்திலும் உனக்கு தொந்தரவு தராமல் பார்த்துக்கிறேன். வருஷத்தில் இரண்டு மாசமோ, மூணு மாசமோ, அக்கா வீட்டுக்கு அனுப்பி வைப்போம். வேற வழியில்லை. நீ கொஞ்சம் அனுசரிச்சு தான் போகணும்,'' என்றான், ரவி.

அரைமனதாக சம்மதித்தாள், ஆர்த்தி.

''அக்கா, அம்மாவை நாங்க கொண்டு போய் வச்சுக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டோம். ஆனால், இப்ப இல்லை. முப்பது முடியட்டும். முப்பதாம் நாள் சாமி கும்பிட்டு போகும் போது அழைச்சுட்டு போறோம்.

''வீட்டை காலி பண்ணி இருக்கிற சாமான்களை விலைக்கு போடணும். இரண்டு நாள் லீவு போட்டுட்டு வரேன். எல்லா வேலையும் முடிச்சுட்டு அழைச்சுட்டு போறேன்,'' என்றான், ரவி.

தம்பியைப் பார்த்து நிம்மதியுடன் சிரித்தாள், லதா.

''ரொம்ப நல்லது, ரவி. அப்படியே செய். நானும் பசங்களுக்கு லீவு சமயம் அம்மாவை அழைச்சுட்டு வந்து என் வீட்டில் கொஞ்ச நாள் வச்சுக்கிறேன்.''

''அம்மா சாப்பிட வாங்க,'' என, லதா அழைக்க, சாப்பிட உட்கார்ந்தாள். இட்லி வைத்து சாம்பாரை ஊற்றியவள், ''சாப்பிடுங்கம்மா. சரியாகவே சாப்பிட மாட்டேங்கிறீங்க. என்ன செய்யறது, விதி முடிஞ்சுடுச்சு. அப்பா நம்மையெல்லாம் விட்டுட்டு போயிட்டாரு. நீங்க உங்க உடம்பை பார்த்துக்க வேண்டாமா?''

கண்களில் கண்ணீர் பெருகி வர, மாலைகளுக்கிடையே புன்னகையோடு காட்சி தரும் கணவனைப் பார்த்தாள்.

''எனக்கும் வேலை இருக்கு, ரவி. நானும், நாளைக்கு கிளம்பறேன். வேலைக்காரிகிட்டே சொல்லி இருக்கேன். முப்பது வரைக்கும் அம்மாவுக்கு துணையாக இருப்பதாக சொல்லியிருக்கா,'' என, தன் தம்பி, ரவியிடம் சொன்னாள், லதா.

மறுநாள் காலை அம்மாவின் அறைக்குள் நுழைந்தவள் திகைத்தாள். அம்மாவும் துணிமணிகளை இரண்டு பெட்டியில் எடுத்து வைத்து கிளம்புவதற்கு தயாராகி இருப்பதை பார்த்து, சிறிது தயக்கத்துடன், ''அம்மா, தம்பி உங்களை, முப்பது சாமி கும்பிட்ட பிறகு அழைச்சுட்டு போகலாம்ன்னு இருக்கான். நீங்க இப்பவே கிளம்பி இருக்கிறீங்க!'' என்றாள், லதா.

''இல்லம்மா, நான் வரலை. நீங்க கிளம்புங்க. அப்பாவின் நண்பர், சேது அண்ணன் இப்ப வருவாரு. அவர் என்னை, 'ஹோமில்' கொண்டு போய் விட்டுடுவாரு,'' என்றாள்.

அங்கு வந்த ரவியும், ஆர்த்தியும் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

''என்னம்மா சொல்றீங்க. நாங்க இருக்கும்போது நீங்க, ஹோமிற்கு போறீங்களா?' என்றாள், ஆர்த்தி.

''இது, நானும் உங்கப்பாவும் சேர்ந்து எடுத்த முடிவும்மா. வாழ்க்கையில் எங்க கடமைகளை எந்தக் குறையுமில்லாமல் நிறைவேற்றிட்டோம். எத்தனையோ கஷ்ட நஷ்டங்கள், இரண்டு பேருமாக கைகோர்த்து கடந்து வந்தோம். உங்களுக்கான வாழ்க்கைக்கு வழிகாட்டிட்டோம். எங்களுக்கும் வயசாகும், வாழ்க்கை ஒருநாள் முடிவுக்கு வரும். துணையை பிரிந்து தனியாக இருக்கிறவங்க என்ன செய்யறதுன்னு எஞ்சிய காலங்கள் எப்படி போகும்ன்னு யோசிச்சோம்.

''உங்களுடைய வாழ்க்கைக்கு இடையூறாக இருக்க விரும்பலை. இங்கே, 'நிழல்கள்' என்ற சீனியர் சிட்டிசன் ஹோமில், அப்பா ஏற்கனவே, 'டெபாசிட்' கட்டி பேசி வச்சுட்டாரு. எங்களில் ஒருத்தர் கடைசி நாட்களில் உங்கள் இல்லத்துக்கு வருவோம்ங்கிறதையும் பதிவு பண்ணிட்டாரு.

''அதனால், எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. நான் ஹோமிற்கு கிளம்பறேன். வீட்டில் இருக்கிற பொருட்களை ஆதரவற்ற இல்லத்திற்கு, 'டொனேட்' பண்ணியாச்சு. அந்த வேலையை, சேது அண்ணன் பார்த்துப்பாரு.

''உங்களுக்கு எந்த சிரமமும் வேண்டாம். நீங்க, உங்க வாழ்க்கையை பாருங்க. பிள்ளைகளுக்கு நாங்க செய்ய வேண்டிய கடமையை செய்த திருப்தியோடு கிளம்பறேன். அப்பாவின் நினைவுகளோடு, எஞ்சிய நாட்களை, என்னால் கடந்து வர முடியும். அம்மாவை பார்க்கணும்ன்னு நினைச்சா, உங்களுக்கு அதற்கான நேரம் கிடைச்சா, அவசியம் வந்து பாருங்க. என் ஆசீர்வாதம் என்னைக்கும் உங்களுக்கு உண்டு.''

சொன்னவள், சுவரில் மாட்டியிருந்த கணவரின் படத்தை கழட்டி எடுத்து, வெளியே வர, வாசலில் அவளை அழைத்து போக காருடன் வந்து நின்றார், சேது.

அம்மாவுக்கு பதில் சொல்லக்கூட வாய் வராமல், மூவரும் கண்ணீர் வழிய தலைகுனிந்து நின்றனர்.

பரிமளா ராஜேந்திரன்






      Dinamalar
      Follow us