/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கவிதைச்சோலை: தீங்கறுக்கும் தீபாவளி!
/
கவிதைச்சோலை: தீங்கறுக்கும் தீபாவளி!
PUBLISHED ON : அக் 19, 2025

தீபங்களின் வரிசையே தீபாவளி - இது தீபாவளிக்கான விளக்கம்!
தீமை என்ற இருள் விலகி நன்மை என்ற ஒளி பிறக்கும் உண்மையான தத்துவ திருநாளே தீபாவளி!
அதிகாலையில் நீராடி விளக்கேற்றும் வீடுகள் தோறும் வறுமை எனும் தீமை போக்கி செல்வமெனும் செம்மை அருள தேடிவருவாள் மகாலட்சுமி என்கிறது விஷ்ணு புராணம்!
அந்தி மாலையில் ஏற்றும்அகல்விளக்கின் ஒளியானது அந்தகன் பயம் போக்குவதோடு துர்மரணம் எனும் துயரம் போக்கிநம்மை காக்கிறது என்கிறது பவிஷ்ய புராணம்!
தீமைகள் யாவும் ஒழிய நீராடும் நீரில் கங்கையும் உடலெங்கும் பூசும் நல்லெண்ணெயில்திருமகளும் உறைவதாக முன்னோர்களின் வாக்கு முன்னுதாரணம் காட்டுகிறது!
உடல் நீராடும் நேரத்தில் மனதின் தீய குணங்களான அகந்தையும், ஆணவமும் அகற்றி அகத் துாய்மைக்கு அஸ்திவாரம் போடும் திருநாள் இது!
உடல் துாய்மையும் உள்ள துாய்மையும் ஒன்றுபட்டால் சமுதாயம் துாய்மையாகும் என்ற தத்துவம் சொல்லும் திருநாளே இது!
இருளென அசுரனும் மறைந்தான் இன்னல்கள் யாவும் அவனோடு இறங்கின பாதாளம்!
தீமைகள் யாவும் களைய சுடர்வாளாய் உதித்தான் சூரியன் பூமித்தாயின் புதல்வர்கள் பண்டமும் பட்டாசும் பட்டாடையும் பரிமாறும் கலாசாரத்தின் விடிவெள்ளி திருநாள்!
பண்பாட்டின் மாண்புகள் சொல்லி தீங்கறுக்க வந்த தீபாவளியே... இனி தேசம் யாவும் அறிவொளி பரவி உற்றமும் சுற்றமும் ஒற்றுமையோடு வாழ சுடராய் நின்று வழிகாட்டு!
தலைமுறைகள் தழைத்துலகம் தலைநிமிரட்டும் இன்புற்று அகம் மகிழ்வோம்... ஆனந்தத்தில் திளைக்கட்டும் அனைவர் மனமும்!
- எஸ்.ஆர்.தமிழ்ச்செல்வன், விருதுநகர் தொடர்புக்கு : 8220212189