PUBLISHED ON : அக் 26, 2025

வாழ்க்கையே போராட்டம் அலுத்து சொல்வர் சிலர்... பூந்தோட்டமே வாழ்க்கை அனுபவித்தே நீ சொல்!
மதிப்பெண் பெறவே கல்விசொல்வர் சிலர்... உலக அறிவை பெறவே கல்வி கற்றுணர்ந்தே நீ சொல்!
வேலையே குதிரைக் கொம்பென சோம்பித் திரிவர் சிலர்... முயற்சி ஒன்றே வேலை தரும் உழைப்பை காட்டி நீ சொல்!
நல்லதுக்கு காலமில்லை தத்துவமாய் உதிர்ப்பர் சிலர்... நல்லெண்ணமே நன்மை தரும் நல்லதே நடக்கும் நீ சொல்!
நேற்றோடு விவாகம் இன்றோடு விவாகரத்து... திருமணபந்தம் இதுவேஇன்றைய இளம்தம்பதியர் சொல்வர் சிலர்! தம்பதியர் புரிதல் புனிதமானால் ரத்துக்கும், ரத்து உண்டு நீ சொல்!
பிறவியைக் கொண்டாடு மனிதா சொல்வர் சிலர்... கொண்டாட்டத்தின் ஆணவத்தில் மனிதநேயம் துறந்திடாதே மரணத்தின் எல்லையை மறந்திடாதே நீ சொல்!
உன்னால் முடியாதென்றே நெஞ்சினில் நஞ்சுடன் சொல்வர் சிலர்... என்னாலும் முடியும் சாதித்துக்காட்டி நீ சொல்!
எதிர்மறை எண்ணங்களை ஏனையோர் மனதில் விதைத்து எழுச்சிக்கு வீழ்ச்சி சொல்வர் சிலர்... நேர்மறை எண்ணங்களை நெஞ்சினில் தாங்கியே நெறிவாழ்வு காண்போம் நீ சொல் நீயே சொல்வாய் தோழா!
- கோவி.திருநாயகம், கடலுார். தொடர்புக்கு : 90421 63037

