PUBLISHED ON : நவ 09, 2025

குழந்தைகள் --
தலைக்கனம் இல்லாத
வாழ்வின் இலக்கணங்கள்!
அவர்கள் இன்னும் அச்சுக்கு வராத
புத்தம்புதிய
வெள்ளைக் காகிதங்கள்!
அவர்களை
மதிப்பு மிக்க
கரன்சிகளாக்குவதும்
விலைமதிப்புள்ள
புத்தகங்களாக்குவதும்
நம் கையில் தான் இருக்கிறது!
இந்த தளிர்களில் தான்
விண்வெளியை அளக்கும்
விஞ்ஞானிகள்
ஒளிந்திருக்கின்றனர்...
மரணத்துக்கும்
மருந்து கண்டுபிடிக்கும்
மாமேதைகள்
மறைந்திருக்கின்றனர்!
அதனால்
சினிமா கவர்ச்சிக்கும்
இனக்கவர்ச்சிக்கும்
சிக்குண்டு போகாமல்
சிகரங்களை நோக்கி
சிறகு விரிக்க
சிறார்களுக்கு
கற்றுக்கொடுப்போம்!
போதைகளின் பாதைகளை
மூடிவைப்போம்...
மேதைகளின் பாதைகளை
திறந்து வைப்போம்!
இணையத்தில்
அவசியமானதை தேடவும்
அவசியமற்றதை மூடவும்
வலியுறுத்துவோம்
வழிநடத்துவோம்!
குற்றங்கள் செய்யாத நற்குணமே
சிறந்ததென்று குழந்தைகளுக்கு
உணர வைப்போம்...
ஜாதி மத பேதங்களை அல்ல...
மனித நேயத்தை - பிஞ்சு
மனதில் பதியம் வைப்போம்!
கூலிக்காக குழந்தைகள் தொழிற்கூடங்களில்
வதைபடுவதை தடுப்போம் - அந்த
சின்ன வேர்களில் தான்
நாளைய விடியல் இருக்கிறது
என்பதை புரியவைப்போம்!
நாளைய உலகத்தில்
நம் குழந்தைகளை
ஆகாய உயரத்தில்
விடிவெள்ளி நட்சத்திரங்களாய்
ஜொலிக்க வைப்போம்!
- என்.ஆசைத்தம்பி, சென்னை. தொடர்புக்கு: 98411 66883

