PUBLISHED ON : டிச 07, 2025

தோல்வி நம்பிக்கையை உடைக்கும் போது
தோற்றுவிடாதே - அதிலிருந்து
வெற்றிக்கான படிப்பினையை கற்றுக்கொள்!
ஏழ்மை நம்மை துரத்தும் போதும்
அறத்தை கைவிடாதே...
செழுமை நம் அருகில் தான் இருக்கிறது!
புகழ்ச்சியை கண்டு மயங்காதே
இகழ்ச்சியை கண்டு கலங்காதே
நாணயத்தின் இரு துருவங்கள் இவை
நடுநிலையாக இருக்க கற்றுக்கொள்!
சவால்கள் கொண்ட வேலையென
சஞ்சலப் படாதே...
நம்மை சாதனை புரிய வைப்பது சவால்களே!
நோய்கள் நம்மை துரத்தும் போது
நொடிந்து போய் விடாதே...
நோய்கள் நம் உடலையே தாக்கும்
மனதை அல்ல...
மனதை உறுதியாய் வைக்க கற்றுக்கொள்!
கோபம் நம்மை ஆட்கொள்ளும் போது
அமைதியாக இருக்க கற்றுக்கொள்...
அமைதியே கோபத்தை
வென்று விடும் ஆயுதம்!
வெற்றியின் உச்சத்தை தொடும்போது
அடக்கமாய் இருக்க கற்றுக்கொள்...
வெற்றிக்கான படிக்கட்டுகளாய் இருந்தவர்களை
மனதில் என்றும் நினைத்து கொள்!
உண்மையான மகிழ்ச்சி எது என்பதை நினையுங்கள்
சந்தோஷத்தின் எல்லையை
வரையறுங்கள்
இல்லாததை நினைத்து
கவலைப்படுவதை விட்டுவிட்டு
இருப்பதில் ஆனந்தம் காணுங்கள்!
பணத்தை தேடி ஓடும்போது
பாசத்தை தொலைத்து விடாதே...
உண்மையான பாசம்
பணத்தை தேடாது
இந்த உண்மையை உணர்ந்துகொள்!
மரணம் உன்னை அணுகும் போது
மனதில் பயம் வேண்டாம்
வாழ்க்கையின் இறுதிகட்டத்தில்
நாமென்ற நிஜத்தை உணர்ந்துகொள்!
சிறிய சந்தோஷங்களையும்
கொண்டாடுங்கள்
பெரிய கவலைகளை விட்டொழியுங்கள்
மகிழ்ச்சிக்கு எல்லைகள் கிடையாது
ஒவ்வொன்றையும் மனநிறைவாக
வாழ உறுதி செய்துகொள்!
- ரேஷ்மி சிவகுமார், கோவை. தொலைபேசி : 89035 21039

