PUBLISHED ON : ஜூன் 07, 2026

தனக்கென தானே
வீடு கட்டிக் கொள்ளும்
சிலந்தியின் அதிசயத்தை
ஒரு முறையேனும் பார்!
பூக்களுக்கு
மகரந்த சேர்க்கைக்கும் உதவி
தனக்கென உணவினையும்
சேமித்து வைக்கும் தேனீக்களை
ஒரு முறையேனும் பார்!
உணவு கிடைத்ததும்
தன் கூட்டத்தையே
கரைந்து அழைத்துண்ணும் காகத்தினை
ஒரு முறையேனும் பார்!
தன்னை வளர்த்த பாசத்திற்காக
காலம் முழுவதும் காவல் காக்கும்
நாயின் நன்றியினை
ஒருமுறையேனும் பார்!
வெறும் தண்ணீரைத்தான்
ஊற்றுகிறோம்;
தலை தாழ்ந்து இளநீர் தரும்
தென்னையை
ஒருமுறையேனும் பார்!
ஓரறிவென அறியப்பட்டு
பூமியைக் கீறி கீறி
உழவுக்கு உதவும்
மண்புழுவின் ரகசியத்தை
ஒருமுறையேனும் பார்!
ஆறறிவென
மார்தட்டிக் கொள்ளும் மனிதா...
அன்பு, உறவு, பாசம்
நட்பின் மகத்துவம்
இவைகளையெல்லாம்
மறைத்து வைத்து விட்டு,
'தான்... தனது' என்ற
சுயநலப் போர்வைக்குள்
ஒளிந்து கொண்டிருக்கிறாய்!
முடிந்தவரை பிறருக்கு உதவு...
வாழ்க்கையில்
தோற்றுப் போனவர்களை
அரவணைத்துக்கொள்!
நம்பியவருக்கு ஒருநாளும்
துரோகம் இழப்பதில்லையென
உறுதிமொழி எடு
உலகம் உள்ளவரை
உன்பெயர் நிலைக்கும்!
- எஸ்.செல்வம், அருப்புக்கோட்டை. தொடர்புக்கு: 9095375145
