PUBLISHED ON : செப் 20, 2026

வயது முதிர்ந்துவிட்டது என்று
அழுது புலம்புகிறீர்
துயரத்தைக் கண்களில்
அலம்புகிறீர்!
ஓடுகிற நதியைப்
புறங்கையால் தடுத்துவிட
மீண்டும் மீண்டும் முனைகிறீர்
தோல்வி பொய்கையில் நீராடுகிறீர்!
வாலிபமும் வயதின் தேயலும்
வாழ்க்கைத் தராசின்
இருசமப் பக்கங்கள்
பிறந்த அன்றே வயதுக்கணக்கு
நெற்றியில் வரையப்படுகிறது!
காலம் வனைந்த கனிவுறு இளமை
ஞாலத்தில் இருபாலார்க்கும்
அம்புக் கணைகளை விடுத்து
காதல் மார்க்கமாய், ககன மார்க்கமாய்
மதனுக்கோர் அரங்கமாக
வாலிபத்தின் மதிலாகப் புனைகிறது!
கொய்த கனிகளை மீண்டும்
கிளைகளில் இணைப்போமோ
நாட்காட்டியின் தேதி மீதே
காலதேவன் தத்தி தத்தி நடக்கிறான்
கடிகாரம் எனும் நகை முரண் நிறுவி
நம்மைக் கண்டு நகைக்கிறான்!
பருவத்தின் மந்திரம்
உருவத்தின் உள்வாங்கிட
மூப்பும் முதிர்வும்
நம்மை வீழ்த்திட
ஒருபோதும் நாம் பணிந்திடோம்...
பாட்டையின் இறுதியில் காத்திருக்கும் இறப்பைக்
கைகுலுக்கியே நாம்
எதிர்கொள்வோம்!
- கே.எஸ்.மணி, சென்னை.
