PUBLISHED ON : அக் 18, 2026

சாதனையில் சிரிப்பது
பெரிதல்ல - சோதனையில்
அழாமல் சமாளிப்பது
தான் நல்லழகு!
போதனையில்
தவமாய் வாழ்வது
பெரிதல்ல - வேதனையில்
வாடாமல் முகமலர்ச்சியாய்
இருப்பது தான் பேரழகு!
உயர்திணையில்
வாழ்ந்து சாதிப்பதை விட அஃறிணையாய்
நன்றி காட்டுவது
தான் புற அழகு!
நல்வினை தொடரும்போது
புன்சிரிப்பு காட்டுவது போல்
தீவினை தீண்டும் போதும்
மனம் தளராமல் வாழ்வது
தான் மெய்யழகு!
வாழ்ந்து காட்டுவது பெரிதல்ல
வீழ்ந்து எழுந்து
வாழ்ந்து காட்டுவது தான்
நல்மன அழகு!
உயர்வினையில்
தலை உயர்த்துவது பெரிதல்ல
செய்வினையில் சிக்கினாலும்
மீண்டு உயர்வது
தான் செயல் அழகு!
பொய் வினையில்
புரண்டது போல்
காட்டுவது பெரிதல்ல
ஊழ்வினையை
கடந்து ஏற்றம்
காண்பது தான்
கால அழகு!
பலர் போற்ற
வாழ்வது பெரிதல்ல
படிப்பினையால் புத்தி பெற்று
வாழ்வது தான் சுய அழகு!
முதல் போட்டு வாழ்வது பெரிதல்ல
கடனை வாங்காமல்
வழி நடத்துவது
தான் திறன் அழகு!
கொடுவினையில்
மீள்வது பெரிதல்ல
கெடு வினையிலும்
வாழ்ந்து காட்டுவது
தான் சுப அழகு!
- ஆர். சீதாராமன், சீர்காழி.
தொடர்புக்கு : 9842371679
