PUBLISHED ON : மே 10, 2026

பொதுவாக நாம் தர்பூசணி பழத்தை சாப்பிட்டு, அதன் வெள்ளை நிறத் தோல் பகுதியை குப்பையில் வீசி விடுவோம். ஆனால், அந்தத் தோலில் தான், நம் சருமத்தை பளபளப்பாக்கும் அரிய சத்துக்கள் மறைந்துள்ளன. இதை எப்படி பயன்படுத்தலாம் என்று விரிவாகப் பார்ப்போம்:
வெயிலினால் வரும் கருமையை நீக்க...
வெ யிலில் அலைவதால் முகம், கை, கால்கள் கருத்து போய்விட்டதா? கவலை வேண்டாம். தர்பூசணி தோலின் உட்புற வெள்ளை பகுதியை அப்படியே எடுத்து, சருமத்தில் தேய்க்கவும். இது, சருமத்திற்கு நல்ல குளிர்ச்சியை தருவதோடு, வேனல் கட்டிகள் மற்றும் எரிச்சலை உடனே குறைக்கும்.
முகப்பருக்களை விரட்ட...
மு கத்தில் அடிக்கடி பருக்கள் வருகிறதா? தர்பூசணி தோலில் உள்ள சத்துக்கள் சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை கட்டுப்படுத்தும். அந்தத் தோலை அரைத்து முகத்தில் பூசி வர, பருக்கள் குறையும் மற்றும் பருக்களால் வரும் வீக்கமும் வடியும்.
இளமையை நீட்டிக்க...
வ யதானால் முகத்தில் சுருக்கங்கள் வருவது இயற்கை. ஆனால், தர்பூசணி தோலில் உள்ள, லைகோபீன் மற்றும் வைட்டமின்கள் சருமத்தை சுருக்கங்கள் இன்றி இளமையாக வைத்திருக்க உதவுகிறது. இது ஒரு இயற்கை, 'ஆன்டி-ஏஜிங்' மருந்தாகச் செயல்படுகிறது.
ஈரப்பதமான சருமத்திற்கு...
சி லருக்கு தோல் வறண்டு, செதில் செதிலாக உதிரும். தர்பூசணி தோலில் நீர்ச்சத்து மிக அதிகம். இதை முகத்தில் தேய்ப்பதன் மூலம், சருமம் எப்போதும் மென்மையாகவும், ஈரப்பதமாகவும் இருக்கும்.
தர்பூசணி பழத்தை சாப்பிட்ட பின், அதன் தோலைச் சிறு துண்டுகளாக வெட்டி, பிரிஜ்ஜில் சிறிது நேரம் வைத்து, குளிர வைக்கவும். பிறகு, அந்தத் தோலை முகத்தில், ஐந்து முதல் 10 நிமிடம் மென்மையாக தேய்த்து, குளிர்ந்த நீரால் கழுவவும்.
தர்பூசணி தோலின் வெள்ளை பகுதியை மட்டும் துருவி சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன், ஒரு தேக்கரண்டி தேன் அல்லது கடலை மாவு கலந்து முகத்தில் பூசி, 15 நிமிடம் கழித்து கழுவினால், முகம் பிரகாசமாக மாறும்.
தர்பூசணி தோலை, ஒரு முறை சிறிய அளவில் தோலில் பூசி பார்த்து உங்களுக்கு ஒவ்வாமை இல்லை என்பதை உறுதி செய்த பிறகு, முழுமையாக பயன்படுத்தவும்.
தொகுப்பு : வெ.நாராயணன்.
