PUBLISHED ON : மே 17, 2026

பசுவின் பாலிலிருந்து தயாரிக்கப்படும் தயிர் தான் மிகவும் சிறந்தது. நம் குடலுக்கு தேவையான எண்ணெய் பசையைத் தந்து வயிற்றிலிலுள்ள வாயுவை கட்டுப்படுத்துகிறது. வயிற்றில் புளிப்பை ஏற்படுத்தாது. புளிப்பு தலை காட்டத் தொடங்கிய நிலையில் தயிரைச் சாப்பிட்டால் பசியைத் துாண்டும். பசி மிகவும் குறைவாக உள்ளவர்களுக்கும் இது நல்லது. ஆனால், தயிர் மிக அதிகமாகப் புளித்து விட்டால், ரத்தக் கொதிப்பு, பித்தவாயு, வயிற்றுக் கோளாறுகள் உள்ளவர்கள் சாப்பிட ஏற்றதல்ல. மேலும், நன்றாகப் புளித்த தயிர் பற்களில் கூச்சம், குரல் கம்முதல், உடல் எரிச்சல் போன்றவற்றையும் ஏற்படுத்தும்.
தயிரை மெல்லிய துணியில் கட்டித் தொங்கவிட்டு, அதிலுள்ள நீர் முழுவதும் வடிந்த பிறகு, துணியிலுள்ள உள்ள கெட்டியான தயிருடன், சர்க்கரை, ஏலக்காய், கிராம்பு, குங்குமப்பூ மற்றும் பச்சைக் கற்பூரம் சேர்த்து குளிர வைத்துத் தயாரிப்பதற்கு, ஸ்ரீகண்ட் என்று பெயர். ருசியான சத்துள்ள உணவு இது. உடல் புஷ்டி மற்றும் பருமன் தரக்கூடியது. உடலின் உஷ்ண வறட்சியைக் குறைக்கும். அதிகம் சாப்பிட்டால் சளித் தொல்லை ஏற்படும்.
தயிரைச் சுட வைத்து சூடாகச் சாப்பிடக்கூடாது. இரவில் தொடர்ந்து அதிக அளவில் சாப்பிட கூடாது. சிலர் சூடான சாதத்தில் தயிர் கலந்து, கடுகு தாளித்து உப்பு சேர்த்து சாப்பிடுகின்றனர். இது, உடலுக்கு நல்லதல்ல. பாரம்பரிய முறைப்படி மண் பாத்திரங்களில் பாலை தோய்த்துத் தயாரிக்கப்படும் தயிர் மிகவும் சிறந்தது. பாலைக் காய்ச்சி, தயிர் தயாரித்து சாப்பிடுவது பசியின்மையும், வயிற்றுப் போக்கும் உள்ளவர்களுக்கு நல்லது.
தயிரின் அடிப்பகுதியில் தெளிவான தண்ணீர் உள்ளதைப் பார்த்திருக்கலாம். அந்த தண்ணீர் புளிப்பும், இனிப்பும், துவர்ப்பும் கலந்த ஒரு மிகச் சிறந்த பானம். அந்தத் தண்ணீரை மட்டும் கால் கப் முதல் அரை கப் வரை காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடுவது, தொண்டை எரிச்சல், குமட்டல், உடற் சூடு மற்றும் களைப்பை சரி செய்ய உதவுகிறது.
