தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நம்மிடமே இருக்கு மருந்து: இலுப்பை மரம்!

நம்மிடமே இருக்கு மருந்து: இலுப்பை மரம்!

நம்மிடமே இருக்கு மருந்து: இலுப்பை மரம்!


PUBLISHED ON : ஜூன் 28, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 28, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேகக்கூட்டங்களை தருவித்து, மழையை வரவழைக்கும் குணம் கொண்டது, இலுப்பை மரம்.

இலுப்பையின் தாயகம் தமிழகம், நேபாளம், இலங்கை மற்றும் மியான்மரிலும் காணப்படுகிறது. நம் நாட்டில், ஜார்கண்ட், குஜராத், மத்திய பிரதேசம், பீஹார், ஒரிசா, கேரளம் மாநிலங்களிலும் வளர்கிறது. இது, சப்போட்டா மர வகையை சார்ந்தது.

தமிழகத்தில், கடந்த, 1950ம் ஆண்டில், 30 ஆயிரம் மரங்களுக்கும் அதிகமாக இருந்தன. ஆனால், 2015ம் ஆண்டு கணக்கின்படி, 10 ஆயிரம் மரங்களுக்கும் குறைவாக உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இலுப்பை ஒரு வெப்ப மண்டல தாவரம். வறண்ட நிலங்களிலும் எளிதாக வளரக்கூடியது. இலுப்பையின் ஆயுட்காலம், 400 ஆண்டுகளுக்கு மேல். 60 அடிக்கும் மேல் வளரக்கூடியது.

இலுப்பை மரம் அதிகமான மருத்துவ குணமுடைய தாவரம். இதன் இலை, பூ, விதை பட்டை, எண்ணெய், புண்ணாக்கு ஆகிய அனைத்தும் சங்க காலம் தொட்டு இன்று வரையிலும் மருத்துவத்திற்கான பயன்பாட்டில் உள்ளது.

இதன் பருவகாலம் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை. முளைத்த நாளிலிருந்து, 10 ஆண்டுகளுக்கு பின்னர்தான் பலன் தரும்.

‛ஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூ சக்கரை!' என்பது பழமொழி.

ஒரு ஆண்டுக்கு, 200 கிலோவிலிருந்து, 300 கிலோ பூவும், 20 முதல் 200 கிலோ வரை இலுப்பை விதையும் கிடைக்கும். ஒரு கிலோ விதையிலிருந்து முன்னூறு மில்லி லிட்டர் எண்ணெய் எடுக்கலாம்.

ஒரு டன் பூவிலிருந்து, 700 கிலோ சர்க்கரையும், 400 கிலோ சாராயமும் தயாரிக்கலாம். இலுப்பை சாராயம் ஒரு மாற்று எரிபொருளாக பயன்படக்கூடியது. இலுப்பை எண்ணெய் ஒரு வலி நிவாரணி, சமையலுக்கும் இது பயன்படுகிறது.

இது தவிர, பாம்பு விஷம், வாத நோய், சக்கரை வியாதி, சளி, இருமல், மூலநோய், வயிற்றுப்புண், சுவாசக்கோளாறு, காயம் ஆகியவற்றுக்கு மருந்தாக பயன்படுகிறது.

இலுப்பைப் பூ ஊறுகாய், காசநோய்க்கு அருமருந்தாகும்.

விறகாக மட்டுமின்றி, அறைக்கலன்கள், மரச்சாமான்கள், சமையல் பாத்திரங்கள், வண்டிச்சக்கரங்கள் மற்றும் மரப்பெட்டிகள் போன்றவற்றின் தயாரிப்பிலும், இலுப்பை மரம் பயன்படுத்தப்படுகிறது.

உப்புநீரை தாங்குவதால் இம்மரம் படகுகள் செய்யவும் பயன்படுகிறது.

வணிக ரீதியாக ஒரு ஏக்கருக்கு, 200 இலுப்பை மரங்கள் வரை நட்டு, ஆண்டொன்றுக்க, 1,500 லிட்டர் எண்ணெய் எடுத்தால், அதன் மூலமாக மூன்று லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். இது தவிர, பூ, பட்டை, சர்க்கரை, புண்ணாக்கு, சாராயம், சிகைக்காய் ஆகிய அனைத்துமே பணம்தான்.

ஒரு கன அடி மரம் ஆயிரம் ரூபாய் வரை விலை கொண்டது. 60 ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு மரம், 5 லட்சம் ரூபாய் மதிப்புடையதாகிறது.

இதை ஒரு பணம் காய்க்கும் மரம் என்று சொல்லப்படும். வவ்வாலுக்கு மிகவும் பிடித்தமான உணவு, இலுப்பை பழங்கள்தான். இலுப்பையின் அழிவு வவ்வாலின் அழிவு; வவ்வாலின் அழிவு, கொசுவின் வளர்ச்சி; கொசுக்களின் வளர்ச்சி, வியாதிகளின் வளர்ச்சி.

இலுப்பையை அழிவிலிருந்து மீட்போம்.

- அமுதா அசோக்ராஜா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us