
போளி!
தேவையான பொருட்கள்:
தேங்காய், மைதா மாவு - தலா ஒரு கப்
வெல்லம் - அரை கப், ஏலக்காய் - மூன்று.
செய்முறை:
மைதா மாவில், எண்ணெய் சிறிது விட்டு, தண்ணீர் மற்றும் சிட்டிகை கேசரி பவுடர் போட்டு தளர பிசைந்து, ஊற வைக்கவும். தேங்காய், வெல்லம், ஏலக்காய் சேர்த்து அடுப்பில் வைத்து கிளறி, பூரணம் தயார் பண்ணவும். வாழை இலையில் எண்ணெய் தடவி, மைதா மாவை, சிறுசிறு உருண்டைகளாக்கி, தட்டி, அதில் பூரணத்தை வைத்து மூடி, மறுபடியும் தட்டி, தோசை கல்லில் போட்டு, நெய் விட்டு, வேக வைத்து எடுக்கவும்.
*****
இஞ்சி பச்சடி!
தேவையான பொருட்கள்:
இஞ்சி - ஒன்றரை அங்குலம், உப்பு, வெல்லத்துருவல் - சிறிதளவு, புளி - சிறிய எலுமிச்சை அளவு ஊற வைத்து கரைத்தது, எண்ணெய் - சிறிதளவு, சாம்பார் பொடி - ஒரு தேக்கரண்டி, கடுகு - கால் தேக்கரண்டி, பெருங்காயத்துாள்.
செய்முறை:
இஞ்சியை தோலெடுத்து, தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைக்கலாம்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து அரைத்த இஞ்சியை சேர்த்து நன்கு வதக்கவும்.
அதோடு புளிக்கரைசல், உப்பு, வெல்லம், சாம்பார்ப்பொடி சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பச்சடி போல கெட்டிப்பட்டதும் இறக்கி வைக்கவும்.
பொங்கலுக்கு தோதான இந்த பச்சடியை விருந்து சாப்பாட்டிலும் சிறிது சேர்த்துக் கொண்டால், நன்கு செரிமானம் ஆகும்.
***
பறங்கிக்காய் மொச்சை குழம்பு!
தேவையான பொருட்கள்:
பறங்கிக்காய் - ஒரு துண்டு
பச்சை மொச்சை பயறு உரித்தது - கால் டம்ளர்
புளி - எலுமிச்சை அளவு
வெல்லம் - சிறு துண்டு உப்பு, எண்ணெய் - தே வையான அளவு
தாளிக்க - கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை பெருங்காயத்துாள் மற்றும் வெந்தயம் சிறிதளவு
வறுத்து அரைக்க:
சிவப்பு மிளகாய் - ஐந்து
தனியா - ஒரு மேஜைக்கரண்டி சீரகம் - ஒன்றரை தேக்கரண்டி மிளகு - 10
தேங்காய் - ஒரு மூடி துருவியது
எல்லாவற்றையும் சிறிது எண்ணெயில் வறுத்து அரைத்து கொள்ளவும். பறங்கிக்காயை தோலோடு சதுரங்களாக அரிந்து மொச்சை சேர்த்து, போதிய தண்ணீர் விட்டு வேக வைக்கவும். வெந்த பின் புளிக்கரைசல், உப்பு, வெல்லம், அரைத்த விழுது சேர்த்து, கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும். இறுதியாக, கடுகு தாளித்து, அடுப்பிலிருந்து இறக்கவும். சர்க்கரை பொங்கலுக்கு ஏற்ற ஜோடி இது.
*******
சர்க்கரை பொங்கல்!
தேவையான பொருட்கள்:
அரி சி - 250 கிராம், பாசிப்பருப்பு - 50 கிராம், பால் - ஒரு டம்ளர், வெல்லம் - அரை கிலோ, முந்திரி, திராட்சை - தலா - 10 கிராம், ஏலக்காய், குங்குமப்பூ, பச்சை கற்பூரம் - சிறிதளவு, நெய் - 100 கிராம்
செய்முறை:
பாசிப்பருப்பை வறுத்து, வெண்கலப் பானையில் பாலும், தண்ணீருமாக வைத்து கொதிக்க விடவும். பிறகு, அரிசியையும், பருப்பையும் களைந்து பானையில் போட்டு, நன்றாக குழைந்து கெட்டியானவுடன் , நெய், முந்திரி, திராட்சை போட்டு கிளறி இறக்கவும்.
***********
பருப்பு வடை!
தேவையான பொருட்கள்:
கடலைப் பருப்பு - ஒரு கப்
மிளகாய் வற்றல் - 5
பெருங்காயப் பொடி, உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க
செய்முறை:
எண்ணெய் தவிர, மற்றவைகளை மிக்ஸியில் தண்ணீர் விடாமல், கொரகொரப்பாக அரைக்கவும். பொடியாக நறுக்கிய கொத்துமல்லி அல்லது புதினா -சிறுதளவு சேர்த்து கலந்து வடைகளாக தட்டி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
*****
உளுந்து வடை!
தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு - ஒரு டம்ளர், பச்சை மிளகாய் - மூன்று, இஞ்சி - சிறிய துண்டு, பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை
செய்முறை:
உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, தண்ணீர் விடாமல்,
பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து அரைக்கவும். கடைசியாக உப்பு மற்றும்
கறிவேப்பிலை சேர்க்கவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வாழையிலையில்
வைத்து தட்டி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

