PUBLISHED ON : அக் 18, 2026

அ ன்புள்ள அம்மாவுக்கு,
நான், 32 வயது பெண். அரசு கல்லுாரி ஒன்றில் பேராசிரியையாக உள்ளேன். என் கணவர் வயது: 35. அவரும் அரசு பணியில் உள்ளார். எங்களுக்கு, 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
என் கணவர், அவர் பெற்றோருக்கு ஒரே வாரிசு. எனக்கு ஒரு தம்பி உண்டு; வெளிநாட்டில் பணிபுரிகிறான்.
எனக்கு திருமணமான ஒரு வாரத்துக்கு பின், ஒரு பெண், என் கணவரை தேடி வந்தாள். இருவரும், சிறிது நேரம் தனியாக பேசினர். பிறகு அப்பெண் போய் விட்டாள். அவள் யாரென்று கேட்டதற்கு, ‘முன்பு என் அலுவலகத்தில் பணிபுரிந்தவள், திருமணத்துக்கு வர முடியவில்லை என்று கூறி, விசாரிக்க வந்தாள்...’ என்றார். நானும், அதை அப்போது பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
சமீபத்தில், என் மாமனார் இறந்து விட்டார். எங்கள் வாழ்க்கை நிம்மதியாக போய்க்கொண்டிருந்தது. திடீரென ஒருநாள், கணவருடன் வேலை பார்த்த அப்பெண், கைக்குழந்தையுடன் என் வீட்டிற்கு வந்தாள். அக்குழந்தை, என் கணவருக்கு பிறந்தது தான் என்றும், இந்த வீட்டிலேயே இருக்கப்போவதாகவும், தகராறு செய்தாள்.
‘அவளுக்கும், உங்களுக்கும் என்ன சம்பந்தம்?’ என்று, கணவரிடம் கேட்டதற்கு, ‘நீ குழந்தைபேறுக்காக, உன் அம்மா வீட்டுக்கு சென்றபோது, அவளது அண்ணன்கள் என்னை கட்டாயப்படுத்தி, அவளை எனக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். வேறு வழியில்லாமல் அவளை ஏற்றுக்கொண்டேன்...’ என்றார்.
‘அவளை ஏன் உங்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்...’ என்று கேட்டதற்கு, ‘முன்பு நாங்கள் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்தபோது, இருவரும் காதலித்தோம். அவளோ, வேறு ஊருக்கு, பணி மாறுதல் கிடைத்ததும் சென்று விட்டாள். அதற்கு பின் தான், உன்னை திருமணம் செய்து கொண்டேன்...’ என்றார்.
‘நமக்கு நிச்சயமானதுமே இதை சொல்லியிருக்கலாம்; நான் விலகி இருப்பேன்...’ என்று அழுதேன்.
‘நீதான் என் மனைவி. உன்னை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டேன்...’ என்று அவரும் அழுகிறார்.
என் மாமியாரும் ஏதும் சொல்ல முடியாமல் தவிக்கிறார்.
அப்பெண்ணை தனியாக வீடு பார்த்து, தங்க வைத்துள்ளார், கணவர்.
என் பெற்றோருக்கு விஷயம் தெரிந்து, என்னை, அழைத்து வந்து விட்டனர். இப்போது, என் அம்மா வீட்டிலிருந்து தான் வேலைக்கு சென்று வருகிறேன்.
இரண்டு, மூன்று முறை சமாதானம் பேச வந்தார், கணவர்.
‘அப்பெண்ணை நிரந்தரமாக பிரிந்து வந்தால் மட்டுமே, எங்கள் பெண்ணை அனுப்பி வைப்போம்...’ என்று உறுதியாக கூறிவிட்டனர், என் பெற்றோர்.
என் மகனை நினைத்தாலும் கவலையாக இருக்கிறது. அவனுக்கு அப்பா என்ற உறவு அவசியம் என்றும் தோன்றுகிறது.
நான் என்ன செய்யட்டும், அம்மா.
– இப்படிக்கு,
உங்கள் மகள்.
அ ன்பு மகளுக்கு,
அதிகாரப்பூர்வ முதல் மனைவி-, இ ரண்டாவது மனைவியாய் வந்த காதலி, -இரண்டு திருமணங்களை செய்துவிட்டு முழி பிதுங்கும் கணவர்-. இரண்டு சமபக்கங்களாய் நீயும், அந்த காதலியும். உங்களுக்கு எதிர்திசையில், உங்களிருவரின் கணவர்.
‘நீதான் என் மனைவி. உன்னை ஒரு போதும் விட்டுக்கொடுக்க மாட்டேன்...’ என, உன் கணவர், உன்னிடம் பேசும் வசனத்தை, இரண்டாவது மனைவியுடனும் பேசமாட்டார் என்பது என்ன நிச்சயம்?
‘ஏதோ குழந்தை விரும்பி, இரு குச்சி ஐஸ் சாப்பிடுகிறது!’ என, அம்மாக்காரி தன்னை சமாதானப்படுத்திக் கொள்வது போல, ‘போனால் போகிறார், புருஷன். காதலித்த பெண்ணை கைவிடாமல் மணந்து கொண்டார்... பாவம் அவருக்கு இளகிய மனசு...’ என, நீ உன் கணவரை மன்னித்து, இரு மனைவியருடன் வாழ அனுமதிக்க முடியுமா? அனுமதித்தால், மூன்றாவதாக ஒன்றை கட்டிக்கொண்டு வந்து நிற்பார், உன் கணவர்.
இனி, நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்...
அரசுபணியில் உள்ள உன் கணவர், இரண்டாம் திருமணம் செய்து கொண்டது, சட்டப்படி குற்றச்செயல். துறைசார்ந்த விசாரணை நடக்கும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதற்கான தண்டனையாக நிரந்தர பணி நீக்கம், ஓய்வூதிய உரிமைகள் பறிப்பு, இரண்டாவது மனைவிக்கு, குடும்ப ஓய்வூதிய மறுப்பு செய்யப்படும்.
ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் உண்டு. காவல்துறையில் புகார் செய்து, உன் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வைக்கலாம்.
காவல்துறை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் தேவை இல்லை என, நீ நினைத்தால், உன் கணவரின், இரண்டாவது மனைவியை தனியாக கூப்பிட்டு பேசு. அவள், உன் கணவரை விட்டு, கைக்குழந்தையுடன் போக சம்மதித்தால், அவளுக்கு ஒரு நஷ்டஈடு பேசு. நஷ்டஈடு பத்து லட்சம் ரூபாய் என்றால், ஐந்து லட்ச ரூபாயை, அவள் பெயரிலும், ஐந்து லட்ச ரூபாயை, அவளின் குழந்தை பெயரிலும், வைப்புநிதியாக வங்கியில் போடு. இந்த சமாதான உடன்படிக்கையை எழுத்துப்பூர்வமாக எழுதி, கையெழுத்திட்டு ஆளுக்கொரு பிரதி வைத்துக்கொள்வது நல்லது.
உன் கணவரின் இரண்டாவது மனைவி பணம் பெற்றுக் கொண்டு, கணவரை பிரிய மறுக்கிறாள் என, வைத்துக் கொள்வோம்... உன் கணவரை, அவளுக்கு விட்டுத்தர மனதார நீ தயார் என்றால், விவாகரத்து பெற்று கணவரிடமிருந்து நிரந்தரமாக விலகி விடு.
உன் கணவரை விவாகரத்து செய்த கையோடு உன் மகனை, உன் பெற்றோரின் கண்காணிப்பில் விடு; அவர்கள் அவனை வளர்க்கட்டும். நீ தகுதியானவனை பார்த்து மறுமணம் செய்து, புதுவாழ்க்கை வாழ். மேற்சொன்ன, உபாயங்களில் உனக்கு உகந்ததை செய் மகளே!
–-என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
@block_B@பணத்தை இழந்தால் சொற்ப நஷ்டம்; நேரத்தை இழந்தால் எல்லாமே நஷ்டம்.
ஆவ்பரி@@block_B@@
@block_B@புகழைத் தேடாதே. குணமுள்ள, பண்புள்ள நல்ல மனதை தேடு.
பிராங்க்ளின்@@block_B@@
‘‘அந்த குடும்பத்துல எல்லாருமே அரசியல்ல நுழைஞ்சிட்டாங்களே, ஏன்?’’
‘‘யாருக்குமே படிப்பு வராதது தான் காரணம்!’’
—வி.ரேவதி, தஞ்சை.
‘‘எங்க வீட்டு நாய் கடிக்காது!’’
‘‘இருக்கலாம் அதுக்காக, வாசல் கேட்டுல, ‘நாய் அஜாக்கிரதை’ன்னு போர்டு மாட்டறது நல்லா இல்லை!’’
—கே.ஜெகதீசன், கோவை.
‘‘பணக்காரங்க வசிக்கிற தொகுதியில இனிமேல் போட்டியிட மாட்டேன்னு தலைவர் சொல்றாரே, ஏன்?’’
‘‘அவங்க பீட்ஸா, பர்கர், சாண்ட்விச் செய்து தரணும்ன்னு கேக்குறாங்களாம்... தலைவருக்கு அதெல்லாம் செய்யத் தெரியாதே!’’
—எஸ்.முகம்மது யூசுப், திருநெல்வேலி.
