தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

4


PUBLISHED ON : அக் 25, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 25, 2026

4


4
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ ன்புள்ள அம்மாவுக்கு,

நான், 26 வயது பெண். மருத்துவம் படித்து வருகிறேன். மிகச் சிறந்த மகப்பேறு மருத்துவராக வேண்டும் என்பது என் லட்சியம்.

ஆனால், விதி, சதி செய்து விட்டது. என் தாத்தா–பாட்டியின் விருப்பப்படி, என் தாய் மாமனுக்கு என்னை திருமணம் செய்து வைத்து விட்டனர். என்னைவிட, 10 வயது மூத்தவர் அவர். சுயதொழில் செய்து வருகிறார். மிகவும் நல்லவர். தாய் மாமாவை எனக்கு மிகவும் பிடிக்கும். சிறு வயது முதலே, அவர் என்னை துாக்கி வளர்த்துள்ளார். என்னுடைய, நலவிரும்பி என்ற அளவிலேயே அவரை கருதி வந்தேன். ஆனால், அவரை கணவராக ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

முதலிரவன்றே, என் எண்ணத்தை கூறி விட்டேன். என் படிப்பு முடியும் வரை, என்னை தொடக் கூடாது என்றும் சத்தியம் வாங்கினேன். அவரும் ஒத்துக்கொண்டார்.

தினமும், அவரை பார்க்கும்போதெல்லாம் கட்டாயப்படுத்தி, எனக்கும், அவருக்கும் திருமணம் செய்து வைத்த, தாத்தா–பாட்டி உட்பட அனைவர் மீதும் கோபம் வருகிறது. எல்லாரிடமும் எரிந்து விழுகிறேன். என் பெற்றோரிடமும் உண்மையை சொல்லி, என்னை அவருடன் வாழ வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள் என்று கூறி விட்டேன்.

இன்னும் இரண்டு ஆண்டுகளில், நான் படிப்பை முடித்து விடுவேன். வெளிநாட்டில் வேலை கிடைத்து போய்விடலாம் என்று அதற்காக முயற்சித்து வருகிறேன்.

இதற்கிடையில், என் தாய் மாமாவின் நண்பர் ஒருவர், என்னை விரும்புவதாகவும், திருமணம் செய்து கொள்ள சம்மதமா என்றும் கேட்கிறார். என் தாய் மாமாவுக்கும் இது தெரியும். அவரும், ‘உனக்கு விருப்பம் இருந்தால், நானே முன்னின்று உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறேன். நாம் விவாகரத்தும் செய்து கொள்ளலாம்...’ என்கிறார்.

இப்போது என் பிரச்னை என்னவென்றால், வெளிநாட்டுக்கு செல்வதா அல்லது தாய் மாமாவின் நண்பரை திருமணம் செய்து கொண்டு, இங்கேயே இருப்பதா என்பது தான்.

எனக்காக, மருத்துவமனை ஒன்றை வைத்து தருவதாகவும் கூறுகிறார், தாய் மாமா. அவரது நல்ல மனசை புண்படுத்துகிறோமோ என்றும் தோன்றுகிறது. குழப்பத்தில் உள்ளேன். நல்ல ஆலோசனை தாருங்கள் அம்மா.

— இப்படிக்கு, உங்கள் மகள்.

அ ன்பு மகளுக்கு,

நீ, பலவீனமான பெண் என்று கருதுகிறேன். தாத்தா–-பாட்டி வற்புறுத்தலுக்காக தாய்மாமனை ஏன் திருமணம் செய்து கொண்டாய்? நிர்தாட்சண்யமாக மறுத்திருக்க வேண்டும். முழுஅளவில், உன் எதிர்ப்பை பதிவு செய்திருந்தால், வலுக்கட்டாய திருமணம் நடந்தே இருக்காது. தலையை விட்டுவிட்டு, வாலை பிடித்து இழுக்கிறாய். விருப்பமில்லாத திருமணத்தை செய்து வைக்கின்றனர் என, காவல்துறையில் நீ ஒரு புகார் கொடுத்திருந்தால், உன் தாத்தா–பாட்டியை காவல்நிலையத்திற்கு துாக்கிப்போய், ‘விருப்பமில்லாத திருமணத்தை இனி நடத்த முயற்சி செய்ய மாட்டோம்...’ என, எழுதி வாங்கி இருப்பர்.

சரி, தாத்தா –பாட்டிக்காக தாய்மாமனை மணந்துகொண்ட நீ, படிப்பு முடியும்வரை தாம்பத்யம் கிடையாது என, நிபந்தனை விதித்தது சிறுபிள்ளைத்தனம்.

‘டிவி’ சீரியல்கள் பார்த்து பார்த்து, ‘அவுட்டேட்டட் பேபி’யாக இருக்கிறாய்.

அடுத்த அபத்தம், உன் வாயாலேயே வருகிறது.

தாய்மாமனின் நண்பர் என்றால், அவருக்கும், தாய்மாமனின் வயதுதான் இருக்கும். ஒப்புக்கு சப்பாணியாய் கணவனுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் மனைவியை பார்த்து, ஒரு மனிதன் திடீரென, ‘வா... கல்யாணம் பண்ணிக்கலாம்...’ என்பானா?

கேட்பவனும் முட்டாள். கேட்டு அதை பரிசீலிப்பவளும் முட்டாள். ‘உனக்கு அவளை பிடித்திருந்தால், நானே அவனை உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன்...’ என்பவனும் முட்டாள்.

திருமண உறவு உங்களுக்கெல்லாம் அவ்வளவு கிள்ளுக்கீரையாக போய்விட்டது.

இனி, நீ செய்ய வேண்டியவற்றை பார்ப்போம்...

நீ இளநிலை மருத்துவ பட்டபடிப்பை முடித்துவிட்டு, முதுநிலை மகப்பேறு மருத்துவம் படித்து வருகிறாய் என, யூகிக்கிறேன். ஒவ்வாமையை விலக்கிவிட்டு தாய்மாமனுடன் குடும்பம் நடத்து.

தாய்மாமனின் நண்பரை வீட்டுக்குள் சேர்க்காதே. அடுத்த டேபிளில் சாப்பிடுபவனின் மசால் தோசையை கேட்கும் மகா அல்பம் அந்த நபர். உன் கணவரிடமும், அந்த நபரின் நட்பை துண்டிக்கச் சொல்.

நீ மகப்பேறு மருத்துவம் முடித்து கிளினிக் வைக்கும்போது, கிளினிக்கின் முழு நிர்வாக பொறுப்பை உன் கணவரிடம் ஒப்படை. உன் கணவரின் அன்பும், ஆதரவும் உனக்கு முழுமையாக கிட்டும். ‘கிளினிக்’ ஆலமரமாய் வளர்ந்து வானோங்கி வளரும்.

வாழ்க்கையை பக்குவமான பார்வை பார்த்து வாழ். இயல்பாக இரு. கிடைத்ததை ஏற்று திருப்திப்படு. சாதிக்க முடியாத இலக்குகளை நிர்ணயித்து அல்லல் படாதே.

குழந்தைகள் இல்லாத வாழ்க்கை பூரணமடையாது. குழந்தைகள், சாதிக்க உத்வேகம் தருமே ஒழிய தடைக்கல்லாய் நிற்காது.

பணி செய்து கொண்டே குழந்தை வளர்ப்பில் ஈடுபடுவது பெரிய கம்பசூத்திரமல்ல.

உள்நாட்டில் மகப்பேறு மருத்துவராக இருந்து ஆயிரம் சாதிக்கலாம். வெளிநாட்டு ஆசையை உதறு.

இந்தியாவின், ‘நம்பர் ஒன்’ மகப்பேறு மருத்துவராக நீ, பிரகாசிக்க வாழ்த்துகள், மகளே!

— -என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.

‘‘என்னப்பா, ‘பேப்பர் ரோஸ்ட்’ தோசை சப்புன்னு இருக்கு, உப்பு போட மறந்துட்டீங்களோ...’’

‘‘நீங்க மொபைல் போனை பார்த்துக்கிட்டே, மேஜையில் கை துடைக்க வைத்திருக்கும், ‘டிஷ்யூ’ பேப்பரை சாப்பிடறீங்க, சார்!’’

– வி.ரேவதி, தஞ்சை.

‘‘டாஸ்மாக் கடைக்கு பக்கத்தில், டீக்கடை வச்சது தப்பா போச்சா... ஏன்?’’

‘‘கடைக்கு வர்றவங்க டீ குடிச்ச கிளாசை திருப்பி கொடுத்து, பத்து ரூபாய் கேட்டு தகராறு பண்றாங்க!’’

– கே.அப்துல்லா, மேலுார்.

‘‘இவன் குடிச்சிருக்கான்னு நல்லாத் தெரியுது... ஆனால், எத்தனை தரம் சொன்னாலும் ஊத மாட்டேங்கிறானே...’’

‘‘அதையே இங்கிலீஷ்ல சொல்லுங்க ஏட்டையா... உடனே ஊதுவான்!’’

– கே.ராஜா, நெய்வேலி.

@block_B@புகழ், நெருப்பை போன்றது; அதை அணைத்து விட்டால், மீண்டும் மூட்டுவது கடினம்.

பேகன்@@block_B@@

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us