தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

4


PUBLISHED ON : நவ 08, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 08, 2026

4


4
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள சகோதரிக்கு,

என் வயது: 45. மனைவியின் வயது: 41. 16 வயதில் ஒரு மகனும், 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர். நாங்கள் கூட்டுக் குடும்பத்தில் வசிக்கிறோம். வெளியே பார்க்கும் அனைவருக்கும் எங்கள் குடும்பம் மிகவும் ஒற்றுமையாக இருப்பதாகத் தெரியும். ஆனால், உண்மையில், எங்கள் வீட்டில் தினமும் ஒரு மவுன போர் நடந்து வருகிறது.

என் மனைவி முன்பெல்லாம் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தாள். கடந்த, மூன்று ஆண்டுகளாக, அவள் முற்றிலும் மாறிவிட்டாள். எப்போதும் ஏதோ ஒரு பயத்தில் இருக்கிறாள். கதவை சரியாக பூட்டியிருக்கிறோமா என்று பலமுறை சென்று பார்க்கிறாள். கேஸ் அடுப்பை அணைத்து விட்டோமா என்று, பத்து முறை உறுதிப்படுத்துகிறாள். குழந்தைகள் பள்ளிக்கு சென்றால், ஏதாவது விபத்து நடக்குமோ என்ற பயத்தில், அவர்களுக்கு அடிக்கடி போன் செய்து விசாரிக்கிறாள்.

குழந்தைகள் கூட தங்கள் அம்மாவிடம் எதையும் சொல்லத் தயங்குகின்றனர். என் மகன் இப்போது நண்பர்களுடன் பழகாமல் தனிமையில் இருக்கிறான்; மகள் எப்போதும் பயத்துடனேயே வாழ்கிறாள்.

இதற்கிடையில், என் வயது முதிர்ந்த பெற்றோர், ‘இது எல்லாம் இன்றைய பெண்களின் மனநிலை. கோவிலுக்குப் போனால் சரியாகி விடும்...’ என்கின்றனர்.

என் மனைவியின் பெற்றோர், ‘அவளுக்கு ஓய்வு கொடு...’ என்கின்றனர். ஆனால், பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நானும் வேலை அழுத்தத்தில் இருக்கிறேன். வீட்டிற்கு வந்த பிறகும், அலுவலக வேலை, மொபைல்போன் பேச்சு மற்றும் மின்னஞ்சல் என்று நேரம் செல்கிறது.

மனைவி, ‘நீங்கள் என்னிடம் மனம் விட்டுப் பேசுவதில்லை...’ என்று குற்றம் சொல்கிறாள். நானும், கோபத்தில் பேசிவிடுகிறேன்.

சில வாரங்களுக்கு முன், என் மகன் தன் பள்ளி ஆசிரியரிடம், ‘எனக்கு வீட்டிற்குப் போகவே பிடிக்கவில்லை...’ என்று கூறியிருக்கிறான். அதை, ஆசிரியர் என்னிடம் தெரிவித்தபோது, நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். எங்கள் பிரச்னை குழந்தைகளின் மனநலத்தையும் பாதிக்கிறது என்பதை, அப்போது தான் முழுமையாக உணர்ந்தேன்.

மனைவியை உளவியல் ஆலோசகரிடம் அழைத்துச் செல்ல விரும்புகிறேன். ஆனால், ‘என்னை மனநோயாளி என்று நினைக்கிறீர்களா?’ என்று கேட்டு அழ ஆரம்பித்து விடுகிறாள்.

இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? முதலில் என் மனைவியின் மனநிலைக்கு உதவ வேண்டுமா அல்லது குழந்தைகளின் மனநலத்தைப் பாதுகாக்க வேண்டுமா மனநலப் பிரச்னைகளை வெட்கப்படாமல் ஏற்றுக்கொண்டு, அனைவரும் ஒன்றாக மீண்டு வருவதற்கான முதல் படி என்ன? தயவு செய்து வழிகாட்டுங்கள்.

–இப்படிக்கு,

உங்கள் சகோதரன்.

அன்பு சகோதரனுக்கு,

உன் மனைவி என்ன படித்திருக்கிறார்? வேலை பார்த்து வந்த உன் மனைவி, குழந்தைகளை பராமரிக்க வேலையை விட்டு நின்று விட்டாரா? உனக்கு, உயர் ரத்த அழுத்தமும், நீரிழிவு நோயும் இருந்து தினமும் மாத்திரை உட்கொள்கிறாயா? உன் மனைவிக்கும் அதே பிரச்னை உள்ளதா? உன் மனைவிக்கு மாதவிடாய் ஒழுங்கீனம் உண்டா? உன் மனைவி கடந்த, ஐந்து ஆண்டுகளில் திடீரென, 20 கி.கி., எடை கூடி விட்டாரா?

உன்னு டைய கூட்டுக்குடும்பத்தில் நீ, உன் மனைவி, இரு குழந்தைகள், இருதரப்பு பெற்றோர் என, எட்டு அங்கத்தினர்கள் உள்ளனர் என, யூகிக்கிறேன். சரியா?

ஒரு கூட்டுக்குடும்பத்தில் கணவன் தரப்பு அங்கத்தினர்கள் மட்டுமே இருந்தால், அதன் செயல்பாடுகள் ஒரு மாதிரியாகவும், ஒரு கூட்டுக்குடும்பத்தில் மனைவிதரப்பு அங்கத்தினர்கள் மட்டுமே இருந்தால், அதன் செயல்பாடுகள் வேறு மாதிரியாகவும் இருக்கும். இருதரப்பு அங்கத்தினர்களும் இருந்தால், அங்கு கயிறு இழுக்கும் போட்டிதான் நடக்கும். கயிற்றின் நடுவில் உன் மனைவியை கட்டிவிடுவர்.

உன் மனைவி ஓர் இடிதாங்கி நிலையில் இருக்கிறார், என்று நினைக்கிறேன். நான்கைந்து அடுக்குமாடி கட்டடங்களுக்கு ஒரு இடிதாங்கி போதாது தானே? கடைசியாக உன் மனைவியுடன் தாம்பத்தியம் எப்போது வைத்துக் கொண்டாய்? தாம்பத்தியம் இல்லாத பேரிளம் பெண்கள் மாபெரும் உணர்வு கொந்தளிப்பில் வெடிப்பதும் உண்டு.

நீ, ஏன் உன் அலுவலகத்தை வீட்டுக்குள் கட்டி இழுத்து வருகிறாய்? உன் மனைவிக்கு நல்ல கணவனாக, உன் குழந்தைகளுக்கு நல்ல தந்தையாக, உன் பெற்றோருக்கு நல்ல மகனாக, உன் மாமனார், மாமியாருக்கு நல்ல மருமகனாக இரு. அவர்கள் அனைவருக்கும் அதிகாரியாக இராதே.

உன் மனைவிக்கு இருக்கும் பிரச்னைக்கு பெயர், ‘அப்ஸஸிவ் கம்பல்சிவ் டிஸாடர்.’ சுருக்கமாக, ஒ.சி.டி., தமிழில் – சுருக்கமாக, மூளையின் சமநிலை குறைபாடு எனப்படும்.

உன் மனைவியின் பெற்றோர் அல்லது உடன் பிறந்தோருக்கு இப்பிரச்னை இருந்தால், உன் மனைவிக்கும் வரும். இதற்கு, குடும்பத்தில் பரவும் மனஅழுத்தப் போக்கு ஒரு காரணம். தொண்டை நோய் தொற்று. அதிர்ச்சியூட்டும் அனுபவங்கள், குழந்தைப்பருவ துயரங்கள், எதையும் முழுமையாக செய்ய வேண்டும் என்ற பிடிவாதம், ஒ.சி.டி., பிரச்னையை பெரிதுபடுத்தும். தகுந்த மருத்துவம் பார்; குணமாகும்.

உன்னுடைய, 17 அல்லது 18 ஆண்டு திருமண வாழ்க்கையை சுயமதிப்பீடு செய். வீட்டிற்குள் உன் செயல்பாடுகளை மிதப்படுத்து. குடும்ப உறவினர்களுடனான உறவுமுறையை மேம்படுத்து. உன் குடும்பத்தினர் அனைவரிடமும் தனித்தனியாக பேசி, அவர்களது மனக்குறைகளை கேட்டறி.

கப்பலில் எங்கே ஓட்டை இருக்கிறது என்று பார்த்து அடைத்து விடவும். உன் வீட்டின் பிரச்னையின் நதிமூலம் நீ தான் என்று தோன்றுகிறது. நீ, உன்னை சரி செய்தால், உன் கூட்டுக்குடும்ப வீடும் சொர்க்கமாகும். பிரச்னைக்கான தீர்வு உன்னிடமே உள்ளது.

இந்த இடைத்தடங்கலை நீ அகற்றினால், உன் குடும்பம் நந்தவனமாய் பூத்துக் குலுங்கும். அமைதி பெறு சகோதரா.

–-என்றென்றும் உன் சகோதரி, சகுந்தலா கோபிநாத்.

@block_B@உயர்ந்த நோக்கங்கள், உயர்ந்த உள்ளங்களை அமைக்கின்றன.

எம்மன்ஸ்@@block_B@@

@block_B@உபகாரத்தைவிட, அனுதாபமே அதிக உதவி செய்ததாகும்.

ஆவ்பரி@@block_B@@

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us