தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : நவ 15, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 15, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வணக்கம் அம்மா,

நான், 32 வயது ஆண். மனைவி வயது: 28. காதல் திருமணம். 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. எங்கள் இருவர் குடும்பத்தினரும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள். பல பிரச்னைகளை நாங்கள் இருவரும் சேர்ந்து சமாளித்தோம். என் தங்கை மற்றும் அவள் அக்கா திருமணம் வரை பல பிரச்னைகளை நாங்கள் சேர்ந்து சமாளித்தோம்.

தற்போது, பல பிரச்னைகள் ஒன்றாக வந்து என்னை மிகவும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளன. யாரிடம் மனம் திறந்து பேசுவது என்று தெரியாமல், தங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

என் மனைவிக்கும், என் அம்மாவுக்கும் இடையே, இரண்டு மாத காலமாக கருத்து வேறுபாடு இருக்கிறது. இருவரும், அவரவர் பார்வையில், நியாயமாகவே இருப்பதாக நினைக்கின்றனர். ஆனால், அவர்களுக்குள் ஏற்படும் பிரச்னைகளுக்கு நடுவில் நான் சிக்கிக் கொள்கிறேன்.

ஒருபுறம், என் அம்மாவை விட்டுக் கொடுக்க முடியவில்லை. இன்னொருபுறம், என் மனைவியின் மனதையும் காயப்படுத்த விரும்பவில்லை. யாருடைய பக்கம் நின்றாலும், மற்றொருவருக்கு நான் எதிரியாகி விடுகிறேன் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் எனக்கு, 20 லட்சம் ரூபாய் கடன் உள்ளது. நான் சொந்த தொழில் செய்து வருகிறேன். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு தொழில் வளர்ச்சி இல்லாமல், வருமானமும் நிலையானதாக இல்லாததால், கடனை சமாளிப்பது மிகவும் கடினமாக உள்ளது.

தொழிலை வளர்க்க வேண்டும், கடனை அடைக்க வேண்டும். குடும்ப பிரச்னையை சரி செய்ய வேண்டும். என் குழந்தையின் எதிர்காலத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கும் போது, நான் மனதளவில் மிகவும் சோர்ந்து போகிறேன்.

இதற்கிடையில் என் மனைவியின் அம்மாவின் சில கருத்துக்களும், எங்கள் குடும்பப் பிரச்னையை மேலும் சிக்கலாக்குகின்றன. குடும்பத்தையும் காப்பாற்றி, தொழிலையும் வளர்த்து, கடனையும் அடைத்து, என் குழந்தையின் எதிர்காலத்தையும் பாதுகாக்க நான் என்ன செய்ய வேண்டும், அம்மா.

– அன்புடன்,

குழப்பத்தில் தவிக்கும் கணவன்.

அன்பு மகனுக்கு,

‘பிரச்னை இல்லாத வாழ்க்கை என்பது, ஒரு போதும் வாழாத வாழ்க்கைக்கு சமம்...’ என்கிறார், விவேகானந்தர்.

‘ஒவ்வொரு பெரிய பிரச்னையிலும் ஒரு பெரிய வாய்ப்பு ஒளிந்திருக்கிறது...’ என்கிறார், கலீல் ஜிப்ரான்.

மகனே! சில கேள்விகள் கேட்பேன். உன் மனதை அவை புண்படுத்துவதாக இருந்தால், என்னை மன்னித்துவிடு. 20 லட்ச ரூபாய் கடனாளியாக இருக்கிறேன் என்கிறாயே... எப்படி கடன் ஆனது? மது அருந்தும் பழக்கம் உண்டா? ‘ஆன்–லைன்’ சூதாட்டமா? ஆடம்பர வீண் செலவா? வியாபாரத்தில், நண்பனை நம்பி ஏமாந்தாயா? மிதமிஞ்சி கடன் கொடுத்து, ஓட்டாண்டி ஆனாயா?

உனக்கு, வயது: 32. இப்போதுதான் வாழ்க்கையை வாழ ஆரம்பித்திருக்கிறாய். இப்போதே பிரச்னை என்று முச்சந்தியில் நின்று ஒப்பாரி வைக்கிறாய். பிரச்னைகளை, இயல்பாக தெளிவான மனநிலையுடன் பார். மின்நுண்ணோக்கி வைத்து நுாறுமடங்கு பிரமாண்டமாய் பார்க்காதே.

ஜவ்வரசி பால் பாயசத்தில், முந்திரி பருப்பு, கிஸ்மிஸ் பழம், ஏலக்காய் கிடக்கும். முந்திரி பருப்பு வந்தால், கடித்துத் தின். ஏலக்காய் வந்தால், துப்பு. வறுத்த நிலக்கடலை தின்றால், ஒரு சொத்தைக்கடலை கடிப்படத்தான் செய்யும்-; ஒதுக்கி விடு.

உன், மூன்று பிரச்னைகளுக்கான தீர்வுகளை பார்ப்போம்...

ஒன்று – தொழில் தோல்வி மற்றும் கடன். இதுவரை, நீ செய்த தொழில்களின் சாதக பாதகங்களை சீர் துாக்கிப்பார். எங்கே ஓட்டை இருந்தது என, கண்டுபிடி. குறைந்தபட்ச லாபம், ‘காரண்டி’ உள்ள தொழிலை துவக்கு. தினமும் கணக்கு வழக்கை எழுத்துப்பூர்வமாக எழுது. அசலில் செலவு செய்யாதே. லாபத்தில் மிச்சம் வைத்து செலவு செய். கடனை, 10 ஆண்டுகளில் முழுமையாக அடைக்க திட்டவரையறை செய்.

தொழிலை நீயும், உன் மனைவியும் மட்டுமே கவனியுங்கள். வேலைக்கு ஆள் போடுவதை தவிர். ஆடம்பர செலவுகளை புறக்கணி. அடுத்தக் குழந்தையை, ஐந்து ஆண்டுகளுக்கு தள்ளிப் போடுங்கள். கணவன்–மனைவி இருவரும், வங்கி கணக்கு ஆரம்பித்து சேமியுங்கள். தொழிலில் அகலக்கால் வைக்காதே.

இரண்டு - – உன் அம்மாவுக்கும், உன் மனைவிக்கும் இடையே ஆன, ‘ஈகோ’ யுத்தம். பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டாதே. ‘பாக்ஸிங் ரிங்’கில், இரு பாக்ஸர்களுக்கு இடையே நிற்கும் நடுவர் ஆகாதே. அதற்கு பதிலாக, இருவருக்கும் தனித்தனியாகவும், சேர்த்தும் தகுந்த அறிவுரை வழங்கு...

‘உங்களின், ‘ஈகோ’ மோதலால் சேதாரம் ஒட்டுமொத்தக் குடும்பத்திற்கும் தான். ஒருவரை ஒருவர் சகித்து நல்லிணக்கமாய் வாழுங்கள். நம் குடும்பம் பற்றாக்குறை பள்ளத்திலிருந்து மீண்டு, தன்னிறைவாக அவரவர் பங்கு உழைப்பை செலவிடுங்கள். பரஸ்பரம் அவரவர் இருப்பை அங்கீகரியுங்கள்...’ எனக்கூறு.

மூன்று- – மாமியார் பிரச்னை. மாமியாரும், அம்மா ஸ்தானம் தான். அவர் எது சொன்னாலும், கெட்டதை வடிகட்டி, நல்லதை எடுத்துக் கொள்ளும் அன்னப்பறவையாக செயல்படு.

ஒழுக்கமான வியாபாரம்-; மனைவி–தாயார் இடையே நீதமாக நடத்தல்; மாமியாரை மதித்தல் ஆகியவற்றால், உன் குடும்பத்தை, பொருள் மற்றும் மகிழ்ச்சியால் மகிமைபடுத்தி விடும்.

வாழ்த்துகள் மகனே!

–-என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.

‘‘கைக்குழந்தை உள்ள வீடுகளா பார்த்து, ஏன் திருட போன, கபாலி?’’

‘‘அங்கேதானே தாய்மாமன் திட்டத்தில் கொடுத்த தங்க மோதிரம் இருக்கும்!’’

– எம்.கல்லுாரிராமன், ராமநாதபுரம்.

‘‘பொண்ணுக்கு வீட்டோட மாப்பிள்ளை பார்த்து கல்யாணத்தை முடித்த பிறகுதான் நான் நிம்மதியா இருக்கேன்!’’

‘‘ஏன், கடமை முடிந்ததுன்னா?’’

‘‘இல்ல, என்னோட வீட்டு வேலைகளை எல்லாம் வந்த மாப்பிள்ளை தலையில கட்டியாச்சுல்ல!’’

– வி.ரேவதி, தஞ்சை.

‘‘தலைவர், கட்சிக் கூட்டத்துல இங்கிலீஷல்ல பேசுறாரே, போதையில இருக்காரா?’’

‘‘இல்லை, கட்சிக் கூட்டத்துக்கு கூட்டிட்டு வந்தவங்க எல்லாம் போதையில் இருக்காங்க. அவங்களுக்கு புரியணுமே!’’

– பி.சி.ரகுமுருகன், பள்ளிச்சேரி.

@block_B@ஒரு நல்ல புத்தகம், மனிதனுக்கு மிகப்பெரிய சொத்தாகும்.

வில்லியம் ஹாஸ்லிப்@@block_B@@

@block_B@ஒருபோதும் தவறு செய்யாதவன், ஒன்றும் செய்ய மாட்டான்.

ஆவ்பரி@@block_B@@

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us