PUBLISHED ON : நவ 29, 2026

அன்புள்ள அம்மாவுக்கு,
நான், 32 வயது பெண். பிளஸ் 2 படித்துள்ளேன். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள். எனக்கு, பெற்றோரும், ஒரு தங்கையும் உள்ளனர். தங்கை, தனியார் நிறுவனம் ஒன்றில், ‘டைப்பிஸ்ட்’ ஆக உள்ளாள்.
எனக்கு திருமணமாகி, நான்கு வயதில் ஒரு மகன் உள்ளான். கணவர் வயது: 38. பெட்டிக்கடை வைத்துள்ளார். வியாபாரம் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. சமீபத்தில், சின்னதாக சொந்த வீடு கட்டியுள்ளோம்.
என் கணவரின் அக்கா முறையுள்ள உறவின பெண் ஒருவருக்கு திருமணமாகி, 10 ஆண்டுகள் ஆகின்றன. அவளது கணவருக்கு சரியான வேலை இல்லை. அவர்களுக்கு, இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
எங்கள் திருமணத்துக்கு முன்பிருந்தே, அந்த அக்காவுக்கு பண உதவி செய்து வந்திருக்கிறார், என் கணவர். திருமணத்துக்கு பிறகும் அவ்வப்போது பண உதவி செய்வார்.
இதைப்பற்றி நான் எதுவும் கேட்க மாட்டேன். வீடு கட்டியதில் கொஞ்சம் செலவாகி விட்டதால், அந்த அக்காவுக்கு பணம் அனுப்புவது குறைந்து விட்டது.
இதற்கு காரணம் நான் தான் என்று ஆத்திரமடைந்த அந்த அக்கா, என்னை, என் கணவரிடமிருந்து பிரிக்க திட்டமிட்டிருக்கிறார்.
அதற்காக, எங்களுடனே, அவரது குடும்பத்தையும் இணைத்து, ‘ஒரே குடும்பமாக இருப்போம்; செலவு குறையும்...’ என்று நயவஞ்சகமாக பேசி, எங்கள் வீட்டினுள் நுழைந்து விட்டார். வீட்டிற்குள் வந்ததும், அவரது ஆட்டம் ஆரம்பித்து விட்டது.
என்னைப் பற்றியும், என் குடும்பத்தினரை பற்றியும் இல்லாததும், பொல்லாததும் என் கணவரிடம் கூறி, எங்களுக்குள் தினமும் சண்டை மூட்டி விடுவார்.
‘உங்கள் அக்காவின் பேச்சைக் கேட்டு, உண்மை அறியாமல் என்னிடம் சண்டை போடாதீர்கள்...’ என்றேன்.
சிறுசிறு சண்டையில் ஆரம்பித்து, இப்போது, அடி, உதை வரை வந்து விட்டது. என்னிடம் பேசுவதையே நிறுத்தி விட்டார், கணவர்.
நான் சமையல் செய்து வைப்பதை, அந்த அக்கா தான், அவருக்கு பரிமாறுவாள். வெளியில் யாருடனும் பேசக்கூடாது, வீட்டு வேலைகளை மட்டுமே செய்து கொண்டு இருக்க வேண்டும் என்று கூறிவிட்டார்.
நான் ஏதாவது எதிர்த்து பேசினால், ‘உன் அம்மா வீட்டிலிருந்து மளிகை பொருட்கள் மற்றும் பணம் வாங்கி வா...’ என்று அடித்து கொடுமைப்படுத்துவார்.
‘என்னை விவாகரத்து செய்து விடுங்கள். நானும், குழந்தையும் இங்கிருந்து சென்று விடுகிறோம்...’ என்றால், ‘நான், உன்னை கட்டிப்போட்டா இருக்கிறேன். நீயே என்னை விவாகரத்து செய்துவிட்டு ஓடிப்போய் விடு...’ என்று கூறி, அடிக்கிறார்.
இந்த பிரச்னையிலிருந்து மீள, எனக்கு ஒரு வழி சொல்லுங்கள், அம்மா.
–இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு,
ஒன்றுவிட்ட அக்கா, ஒன்றுவிட்ட தங்கை, பெரியம்மா மகள், சின்னம்மா மகள் என்கிற உறவுமுறையில் பெண்களுடன் தகாத உறவு வைத்துக்கொள்வது, பல சபல ஆண்களின் நுாதன சாகசம்.
உன் கணவரின் அக்கா முறை உறவினப்பெண்ணுக்கு வயது, 40க்கு மேல் இருக்கும் என, யூகிக்கிறேன். பல பெண்களின் அழகு பூரிதம் அடைவது இந்த வயதில் தான். பல பேரிளம் பெண்கள், ஆண்களை மயக்கும் சூட்சமக்கலை கற்றவர்கள்.
உன் கணவர் அந்தப்பெண்ணை, ‘அக்கா’ என அழைத்தால், அதில், ‘அன்பே’ ஒளிந்திருக்கும். அந்தப் பெண் உன் கணவரை, ‘தம்பி’ என அழைத்தால், அதில், ‘ஆரூயிரே’ ஒளிந்திருக்கும்.
உன்னுடைய கோழைத்தனத்தை தான் உன் கணவரும், அக்காமுறை பெண்ணும் பயன்படுத்தி கொள்கின்றனர். குட்டகுட்ட குனிந்த து போதும்.
உன் கணவர் அடித்தால், திருப்பி அடிப்பேன் என, பயமுறுத்து. ‘சமைத்த உணவை நான் தான், என் கணவருக்கு பரிமாறுவேன். எட்டிப்போ... என்னை பரிமாற விடாவிட்டால், நான் சமைக்க மாட்டேன். நீயே சமைத்து பரிமாறிக்கொள்...’ என, குரல் உயர்த்து.
‘என் அம்மா வீட்டிலிருந்து மளிகை பொருட்கள் மற்றும் பணத்தை நான் ஏன் வாங்கி வர வேண்டும்? நீ, பிச்சைக்காரனா அல்லது உழைக்க முடியாத மாற்றுத் திறனாளியா?’ என, நாக்கை பிடுங்கிக்கொள்வது போல கேளு. கணவர் மீதும், அக்கா என்ற போர்வையில் ஒளிந்திருக்கும் கள்ளக்காதலி மீதும் மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடு. காவல்நிலையத்தில் அந்தப்பெண், தன் அக்கா உறவுமுறையை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தால், ‘மாதம் இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் ரூபாய் உதவித்தொகை கொடுக்கிறோம் எங்கள் வீட்டைவிட்டு தனியே போய் விடு...’ என பேசு.
காவல்நிலைய பேச்சு வார்த்தைக்கு, உன் கணவர் ஒத்துவரவில்லை என்றால், ஒரு வழக்கறிஞர் மூலம் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பு. விவாகரத்துடன், ஜீவனாம்சமும் வேண்டும் என கேள். விவாகரத்துக்குப் பின், உன் மகன், உன்னுடன்தான் இருப்பான் என, உரிமை கோரு. விவாகரத்து வழக்கு நடக்கும்போது, உன் கணவர் சமாதானத்திற்கு வருவார். எளிதில் இணங்கிப் போகாதே.
கணவரின் உறவினர்களை வைத்தே, அந்தப்பெண் அக்கா உறவுக்கார பெண் இல்லை என்பதை, நிரூபி. எதிர்காலத்தை நினைத்துப் பயப்படாதே.
பிளஸ் 2 வரை படித்துள்ளாய். உன் பெற்றோர் வீட்டில் தங்கி வேலை பார். உன் மகன் பெற்றோர் வீட்டில் வளரட்டும். தபாலில் மேற்படிப்பு படி.
தீயவர் கூட்டணி நீண்டநாள் நீடிக்காது. விவாகரத்துக்குப்பின், உன் கணவருக்கும், அந்த அக்கா உறவுமுறை பெண்ணுக்கும் முட்டல் மோதல் உரசல் வரும். இருவரும் நிம்மதி தொலைத்து, அந்தகார இருளில் உழல்வர்.
பொருத்தமான நபர் கிடைத்தால் மறுமணம் செய்து கொள். வாழ்த்துகள்!
– - என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
‘‘உன் பையனை ஏன், ‘டாஸ்மாக்’குல வேலைக்கு சேர்த்துவிட்ட, ராப்பிச்சை?’’
‘‘அங்கே அவன் இங்கிலீஷ் கத்துக்கிட்டா, அப்புறம் அவனை ‘இன்டர்நேஷனல் ஏர்போர்ட்ல’ பிச்சை எடுக்க விட்டுடுவேன், தாயி!’’
– எஸ்.முகம்மது யூசுப், திருநெல்வேலி.
‘ ‘உன் கழுத்துல கிடந்த செயினை திருடன் திருடி மூன்று நாளாச்சே... பிறகு எதுக்காக திருடனை நினைச்சு கவலையா இருக்க?’’
‘‘கவரிங் நகைன்னு உண்மை தெரிஞ்சா வந்து அடிச்சுடுவான்னு தான்!’’
– த.நேரு, வெண்கரும்பூர், கடலுார் மாவட்டம்.
‘‘என்னடா சொல்ற, குடிச்சிட்டு ரோட்டுல விழுந்து கிடந்தப்போ, நீ கூப்பிட்டும் யாருமே உன்னை காப்பாத்த முன் வரலையா... ஏன்?’’
‘‘குடிச்சிட்டு நான் பேசின இங்கிலீஷ் யாருக்குமே புரியலைன்னு நினைக்கிறேன்!’’
– ப.சோமசுந்தரம், சென்னை.
@block_B@பேசுபவன் விதைக்கிறான், பேசாதவன் அறுவடை செய்கிறான்.
— ஜான்ரே@@block_B@@
@block_B@பிறரை அறிந்தவன் கெட்டிக்காரன், தன்னை அறிந்தவன் ஞானி.
வோட்ஸே@@block_B@@
