தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சமையலில் அசத்தும் வெள்ளிங்கிரி

சமையலில் அசத்தும் வெள்ளிங்கிரி

சமையலில் அசத்தும் வெள்ளிங்கிரி


PUBLISHED ON : ஜூலை 12, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 12, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொதுவாக வி.ஐ.பி.,கள் அல்லது ஜோசியர்களிடம் தேதி கேட்டுத்தான் பல இல்லங்களில் திருமண நாளைக் குறிப்பது வழக்கம். ஆனால், கொங்கு மண்டலத்தின், 'டெக்ஸ்டைல் சிட்டி'யான திருப்பூரில், பெரும்பாலோர், ஒரு சமையல் கலைஞரிடம், தேதி வாங்கிய பிறகுதான் மற்ற வேலைகளை துவங்குவர்.

அந்த சமையல் கலைஞரின் பெயர், வெள்ளிங்கிரி.

'எங்கள் இல்லத் திருமண விழாவில், வெள்ளிங்கிரி குழுவினரின் சுவையான விருந்து உபசரிப்பு இடம்பெறும்!' என்று திருமணப் பத்திரிகையிலேயே அச்சிடுவர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

தற்போது, 66 வயதாகும் வெள்ளிங்கிரி, பள்ளிப்படிப்பை தாண்டாதவர். சிறு வயதிலேயே குடும்பச் சுமை காரணமாக, திருமண வீடுகளில் சமையல் மாஸ்டர்களுக்கு உதவியாளராக சேர்ந்தார். 20 ஆண்டுகால கடுமையான உழைப்பிற்கு பிறகு, 'வெள்ளிங்கிரி சமையல் குழு' என்ற தனிப் பேரரசாக உருவெடுத்தார். கொங்கு நாட்டு பாரம்பரிய சமையல் கலையில் இன்று, இவரை மிஞ்ச ஆள் இல்லை.

வெள்ளிங்கிரியின் அசுர வளர்ச்சிக்குக் காரணம், அவர், தன் தொழிலில் கடைப்பிடிக்கும் மிக உயரிய கட்டுப்பாடுகள் தான். அஜினோமோட்டோவோ, செயற்கை நிறமூட்டிகளோ இவரது சமையலில் இடம் பெறாது.

எத்தனை ஆயிரம் பேருக்கு சாப்பாடு என்றாலும், பழங்கால முறைப்படி சாம்பார், ரசம் போன்றவற்றுக்கான மசாலாக்களை உரலிலிட்டு பாரம்பரியமாக அரைத்துத்தான் சேர்க்கிறார்.

'என் சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு யாரும் வயிறு வலிக்கிறது என்றோ, நெஞ்சு எரிகிறது என்றோ சொல்லிவிடக் கூடாது. அதுதான் என் இலக்கு...' என்கிறார், இந்த உணவுக் கலைஞர்.

இட்லி, ஆப்பம், மொறுமொறு பரோட்டா, விதவிதமான தோசைகள் மற்றும் மணமணக்கும் பிரியாணி என, இவர் தயாரிக்கும் அனைத்து உணவுகளிலும் சுவை துாக்கலாக இருக்கும். இதனால், திருப்பூரைத் தாண்டி கோவை, மதுரை, சென்னை என, தமிழகம் எங்கும் இவரது குழுவினர் பம்பரமாக சுழன்று வருகின்றனர்.

உணவு சமைப்பது எவ்வளவு முக்கியமோ, அதை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பரிமாறுவதும் அவ்வளவு முக்கியம் என்பதில், வெள்ளிங்கிரி கறாரானவர். சமையல் கூடம் முதல், சீருடை அணிந்த பரிமாறும் நபர்கள் வரை அனைத்திலும் இவரது தனிப்பார்வை இருக்கும். ஒரே நாளில், ஆறு முகூர்த்தங்கள் வந்தாலும், அத்தனையையும் ஏற்றுக்கொண்டு பம்பரமாக சுழன்று, அனைவரையும் திருப்திப்படுத்திய அனுபவம் இவருக்கு உண்டு.

ஒரு லட்சம் பேர் கூடும் பிரமாண்ட கோவில் திருவிழாவாக இருந்தாலும் சரி, 100 பேர் கூடும் எளிய வீட்டு விசேஷமாக இருந்தாலும் சரி... அதே தரத்தோடு சமைப்பார். சைவம் மட்டுமின்றி, அசைவத்திலும் இவர் கில்லாடி என்பதால், ஆண்டு முழுவதுமே இவருக்கு, 'ஹவுஸ் புல்' ஆர்டர்கள் தான்!

வி.ஐ.பி.,கள் முதல், சாமானியர்கள் வரை யாரைப் பார்த்தாலும் இரு கைகளையும் கூப்பி, 'வணக்கம் முதலாளி!' என்று முகமலர்ச்சியோடு தான் பேசத் துவங்குவார். 'எனக்காக இல்லாவிட்டாலும், என்னை நம்பி இருக்கும் நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் நலனிற்காக நான் ஓடிக்கொண்டே இருப்பேன்...' என்று நெகிழ்கிறார்.

கடந்த, 26 ஆண்டுகளுக்கும் மேலாக, 'தினமலர்' நாளிதழின் தீவிர வாசகராக இருக்கும், வெள்ளிங்கிரி, இதுவரை எந்த ஊடக வெளிச்சத்திற்கும் ஆசைப்பட்டதில்லை. முதன்முறையாக, தான் ஆராதிக்கும், 'வாரமலர்' இதழில் தன்னைப் பற்றிய கட்டுரை வெளியாவது, அவருக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கும்.

இவருடன் பேசுவதற்கான எண்கள்: 94421 25828/90038 38888

எல்.எம். ராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us