தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மணிவிழாக் கொண்டாட்டம்!

மணிவிழாக் கொண்டாட்டம்!

மணிவிழாக் கொண்டாட்டம்!


PUBLISHED ON : ஆக 09, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 09, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாமியப்பனுக்கு, 60ம் கல்யாணம் என, சொல்லப்படுகிற, 'சஷ்டியப்த பூர்த்தி'யை விமரிசையாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவரைவிட மனைவி மரகதம், மகன் ஜெய்கணேஷ், மகள் வினோதினி ஆகியோர் அதில் ஆர்வமாக இருந்தனர்.

இல்லற வாழ்வில், ஆணின் அறுபதாவது பிறந்தநாள் என்பது, நிறைவின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. எல்லாருக்கும், எல்லா வகையிலும், அது நிறைவாக இருக்குமா என்பதை சொல்வதற்கில்லை. எனினும், பலரும் இதை சம்பிரதாயத்துக்காக அவரவர் வசதிக்கும், விருப்பத்துக்கும் ஏற்ப கொண்டாடுவது வழக்கம்.

சாமியப்பனுக்கு இனிய குடும்பம் வாய்த்திருந்தது. பிள்ளைகள் வளரும் காலத்திலேயே சொந்த வீடு கட்டியாகி விட்டது. மகனை படிக்க வைத்து ஆளாக்கினார். மகளுக்கு நல்ல மாப்பிள்ளையை பார்த்து மணமுடித்து கொடுத்தார். அதன்பின், மகனுக்கும் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தார்.

இப்போது அவனுக்கு, மூன்று வயதில் ஒரு குழந்தை உள்ளது. மகளுக்கு, ஐந்து மற்றும் இரண்டு வயதுகளில் இரு குழந்தைகள். இவர், பணி ஓய்வு காலத்தை நிம்மதியாகக் கழித்து கொண்டிருக்கிறார். நடுத்தர வர்க்கத்தினருக்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் கொண்ட சுக ஜீவிதம்.

கடைநிலை ஊழியரான அவர், எவ்வளவோ கஷ்டப்பட்டுத்தான், குடும்ப தேவைகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றினார். இந்த மகிழ்ச்சியையும், திருப்தியையும் உற்றார், உறவினர்களோடு பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பாகவே தன் மணிவிழாக் கொண்டாட்டத்தை கருதினார்.

சாமியப்பன் படு சிக்கனமான ஆள். சில சமயம் அது, கஞ்சத்தனம் என்கிற அளவுக்கும் போய்விடும். காரணம், அவர் ஏழ்மையில் வாழ்ந்து, பசி பட்டினியோடு போராடி வளர்ந்தவர். பேச்சுக்காக அல்ல; நிஜமாகவே, அவரும் மரகதமும் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டித்தான் சொந்த வீட்டு மனை வாங்கவும், வீடு கட்டவும், பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கவும் முடிந்தது.

அறுபதாம் கல்யாணத்தை, மிக முக்கியமான உற்றார் உறவினர்கள், 100 பேரை மட்டும் அழைத்து நடத்தலாம் என்பது தான் அவரது எண்ணம். ஆனால், மகனும், மகளும் அதற்கு சம்மதிக்கவில்லை. மகள் இதற்காக நேரிலேயே வந்திருந்து, மகனுடன் சேர்ந்து, வட்டமேஜை மாநாடு நடத்தினாள்.

''நீங்க எங்களுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டீங்க, எங்களுக்கு எவ்வளவு செஞ்சிருக்கிறீங்க? உங்களுக்காக நீங்க எதுவுமே செஞ்சுக்கல... அதனால், இந்த அறுபதாம் கல்யாணத்தை, 'கிராண்டா' நடத்தணும்,'' என்றான் மகன், ஜெய்கணேஷ்.

''செலவைப் பத்தி நீங்க கவலைப்படாதீங்கப்பா! அண்ணனும், நானும் பாதி பாதி செலவை ஏத்துக்கறோம்,'' என்றாள் மகள், வினோதினி.

அவர்களின் விருப்பத்துக்காக, மணிவிழாவை விமரிசையாக நடத்த சம்மதித்தார். ஆனால், அவர்களின் செலவில் அதைச் செய்ய மனம் ஒப்பவில்லை. செலவை தானே பார்த்துக்கொள்வதாக சொன்னார்.

ஜெய்கணேஷ் புன்னகையோடு, ''நீங்களே செலவு செஞ்சா, எப்படி சிக்கனமா செய்யறதுன்னு தான் குறியா இருப்பீங்க. 'கிராண்டா' செய்ய மாட்டீங்க. நாங்களே பாத்துக்கிறோம்,'' என்றான்.

வினோதினியும் வழிமொழிந்தாள்.

இருதரப்பு விவாதம் நடந்தது. மரகதம் மத்தியஸ்தம் செய்தாள்...

''உங்கப்பா பாதி செலவு; நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து பாதி செலவு,'' என, அவள் கூறியதை ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.

திருமண மண்டபம், 500 பேருக்கு அழைப்பு, திருமணப் பத்திரிகை அச்சடிப்பு, மரகதத்துக்கு பட்டுப் புடவை - ரவிக்கை, சாமியப்பனுக்குப் பட்டு வேட்டி-சட்டை, தங்க நகைகள், புதுத் தாலி என, மகனும், மகளும் அமர்க்களப்படுத்தினர்.

''தேவையில்லாம எதுக்கு இவ்வளவு செலவு?'' என, அங்கலாய்த்தார், சாமியப்பன்.

ஆனால், மரகதம் அதில் பூரிப்பு அடைந்தாள்.

இவரிடம், ''மொதல்லதான் நமக்கு வருமானம் இல்ல; கஷ்டப்பட்டோம். இப்ப இருக்கும்போது செய்யறதுக்கென்ன?'' என்றாள்.

மகனும், மகளும் வாங்கி வந்தது என்று பெருமையாக அக்கம் பக்கம் வீட்டு பெண்களிடம் காட்டவும் செய்தாள்.

அவள் சொல்வதும் நியாயம் தான் என்று அவருக்குப்பட்டது.

அதன் பிறகே முகநுாலில் தன் மணிவிழா குறித்த தகவல்களை பகிர்ந்தார்.

'வாட்ஸ்-அப்' குழுக்களில், மணிவிழா அழைப்பிதழையே பகிர்ந்திருந்தான், அவரது மகன். அதனால், சாமியப்பன்-மரகதம் தம்பதியர் வைரலாகி விட்டனர். வாழ்வில் முதல் முறையாக இதையெல்லாம் அனுபவிப்பதால் அவருக்கும் அந்த உற்சாகம் தொற்றிக்கொண்டது.

வெளியூரில் இருக்கும் நெருங்கிய உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அஞ்சல் மற்றும் கூரியரில் பத்திரிகைகள் அனுப்பப்பட்டன. இரண்டாம் கட்டத்தினருக்கு, 'வாட்ஸ்-அப்'பில் டிஜிட்டல் அழைப்பு மட்டுமே. 50 கி.மீ., சுற்றுவட்டாரத்தில் உள்ள நெருங்கிய உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நேரில் சென்று பத்திரிகை வைத்து அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில், இவ்வளவு காலம் தொடர்பில் இல்லாதிருந்த உறவினர்கள், பழைய நண்பர்கள் ஆகியோருடன் தொடர்புகொள்ள நேர்ந்தது, கூடுதல் மகிழ்ச்சியளித்தது. சில பழைய நண்பர்கள் எங்கிருந்தோ யார் மூலமாகவோ கேள்விப்பட்டு, மொபைல் எண் கண்டுபிடித்து, அழைத்து வாழ்த்து தெரிவித்தது இன்ப அதிர்ச்சியையும் கொடுத்தது.

வெளியூர் மற்றும் வெளிப்புற அழைப்புகளை முடித்த பிறகு, விசேஷத்திற்கு இன்னும் சில நாட்களே இருந்த நிலையில், இவர்கள் குடியிருக்கும் பகுதியில் பத்திரிகை விநியோகம் செய்தனர்.

எதிர்சாரியில் மூன்றாவது வீட்டில், ஓய்வுபெற்ற கல்லுாரி பேராசிரியர், வேணுகோபால், வசிக்கிறார். அவருக்கு, 65 வயது இருக்கும். நகர்ப்புற வழக்கப்படி, அக்கம் பக்கத்தினருடன் அதிக பழக்கம் வைத்துக்கொள்ள மாட்டார். அதிகாலை நடைபயிற்சியின் போது, சாமியப்பனை பார்த்தால் மெல்லிய தலையசைப்புடன் கடந்து செல்வார்.

இருவருக்குமிடையே சொல்லும்படியான பேச்சுவார்த்தையும் கிடையாது. இருந்தாலும், வீட்டுக்கு அருகில் வசிப்பவர் என்ற முறையிலும், அவர் ஒரு பேராசிரியர் என்பதாலும், அவருக்கும் பத்திரிகை கொடுக்க விரும்பினார், சாமியப்பன்.

''ரெண்டு பேரும் போய் குடுக்கணும்ங்கறதில்ல. நான் மட்டுமே போயிட்டு வந்துடறேன்,'' என, மரகதத்திடம் சொல்லிவிட்டு, தன்னிடம் எஞ்சியிருந்த அழைப்பிதழ்களில் ஒன்றை எடுத்துக்கொண்டு சென்றார்.

அ ந்த சமயத்தில் பேராசிரியர் வீட்டு முன்புறம் இருந்த தொட்டி செடிகளுக்கு, நீர் ஊற்றிக் கொண்டிருந்தார். அவரிடம் விபரம் தெரிவித்து, ''நீங்க அவசியம் வரணும்,'' எனக் கூறி, இரு கைகளாலும் பவ்யமாக அழைப்பிதழை நீட்டினார், சாமியப்பன்.

அவரும் அழைப்பிதழை மரியாதையோடு இரு கைகளாலும் வாங்கி, ஜன்னல் திட்டின் மீது வைத்தார். அதைப் புரட்டிப் பார்க்கவோ, மணிவிழா தொடர்பாக இவரிடம் எதுவும் விசாரிக்கவோ இல்லை.

மாறாக, ''தப்பா எடுத்துக்காதீங்க சார். நான் வர இயலாது,'' என்றார்.

அதைக் கேட்டதும் இவருக்கு முகத்தில் அடித்தாற்போலிருந்தது.

''ஏன் சார்?'' என்று கேட்டார்.

''நான் பொதுவா, பெரியவர்களோட பிறந்தநாள் விழாவுக்கோ, திருமண நாள் விழாவுக்கோ போறதில்ல. அது மட்டுமில்ல; அவங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்றதும் கிடையாது. அவ்வளவு ஏன், என்னோட பிறந்தநாளைக்கூட கொண்டாடுறது இல்ல; எனக்கு யாரும் பிறந்தநாள் வாழ்த்து சொல்றதும் பிடிக்காது. அதனால்தான், சமூக வலைதளங்களில் கூட, என்னோட பிறந்தநாளை மறைச்சு வெச்சிருக்கிறேன்,'' என்றார், வேணுகோபால்.

அதைக்கேட்டதும், சாமியப்பனுக்கு வியப்பாக இருந்தது.

''குழந்தைகளோட பிறந்தநாளை கொண்டாடறதுல எனக்கு ஆட்சேபனை இல்ல. ஏன்னா, பெத்தவங்களுக்கு குழந்தைகள் ஒரு பாக்கியம். அதே மாதிரி, குழந்தைகள் அவங்களோட பிறந்தநாள் கொண்டாட்டத்தையும், 'கேக்' வெட்டறதையும் ரொம்ப விரும்பி, சந்தோஷப்படுவாங்க என்பதனால், அவங்க என்கிட்ட வந்து மிட்டாய் குடுத்துட்டு, 'எனக்கு இன்னைக்குப் பிறந்தநாள்'ன்னு சொன்னா, அவங்களை சந்தோஷமா வாழ்த்துவேன்.

''ஆனா, பெரியவங்க, தன்னோட பிறந்தநாளை கொண்டாடறதுல எனக்கு சில கேள்விகள் இருக்கு. தேசத் தலைவர்கள், மகான்கள், தியாகிகள், விஞ்ஞானிகள் மாதிரி, நாட்டுக்காகவோ, உலகத்துக்காகவோ வாழ்ந்தவங்களோட பிறந்தநாளை மக்கள் கொண்டாடலாம்; கொண்டாடணும். நம்மளை மாதிரி சாமானிய மனுஷங்களோட பிறந்தநாளைக் கொண்டாடறது அர்த்தமில்லங்கறது என்னோட கருத்து.

''அதுக்காக, நான் யாரையும், 'நீங்க பிறந்தநாள் கொண்டாடக் கூடாது'ன்னு சொல்ல மாட்டேன். அது அவரவர் விருப்பம்; உரிமை. ஆனா, நான் அதுல எந்த விதத்துலயும் கலந்துக்க மாட்டேன்.

''நானும், ஏன் என்னோட பிறந்தநாளை கொண்டாடறதில்லன்னா, 'பிறந்தநாள் கொண்டாடுற அளவுக்கு நீ என்ன சாதிச்சே? உன் பிறந்தநாள்ல நீயோ, மத்தவங்களோ பெருமைப்பட்டுக்க என்ன இருக்கு? சுயநலமா உனக்காகவும், உன் குடும்பத்துக்காகவும்தான் சம்பாதிச்சு, அதுக்கு வேண்டியதை செஞ்சியே தவிர, மத்தவங்களுக்காக ஏதாவது செஞ்சிருக்கியா?'ங்கற கேள்வி எனக்குள்ள எழும்,'' என்றார்.

அமைதியாகவும், ஆழ்ந்த கருத்துகளோடும் அவர் பேசியது, சாமியப்பனை வாயடைக்கச் செய்து விட்டது.

அ ன்று இரவு, சாமியப்பனால் உறங்க முடியவில்லை. மொபைல் போனில் வந்த வாழ்த்துகள் இப்போது வெற்று சொற்களாகத் தெரிந்தன. தனக்காக ஒரு மண்டபம், 500 பேருக்கு விருந்து... இத்தனைக்கும் பிறகு எஞ்சப்போவது என்ன?

ம றுநாள் காலையில் ஒரு முடிவுக்கு வந்தார். தன் குடும்பத்தினரை அழைத்து, தன் முடிவை தெரிவித்தார். ஆரம்பத்தில் அவர்கள் மறுத்தாலும், சாமியப்பனின் உறுதியைக் கண்டு சம்மதித்தனர்.

அவரது மணிவிழா ரத்து செய்யப்பட்டது.

அன்றைய தினம், சாமியப்பன் குடும்பத்தார், அந்த நகரின் ஒதுக்குப்புறத்தில் இருந்த ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கும், சிறுவர் இல்லத்திற்கும் சென்றனர். மணிவிழாவுக்காக செலவாகவிருந்த தொகையை அங்கே நன்கொடையாக கொடுத்தார், சாமியப்பன். அன்று காலை சிற்றுண்டி, ஆதரவற்ற சிறார்களோடும், மதிய உணவு காப்பக இல்லத்து முதியோர்களோடும் நடந்தது.

அந்த ஒளிப்படங்களுடன் முகநுாலில், 'இன்று புதிதாய் பிறந்தேன். இது, என் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம்!' என, பதிவிட்டிருந்தார், சாமியப்பன்.

ஷாராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us