
'சந்தோஷ் வெட்ஸ் ப்ரீத்தி' என்ற,'ப்ளெக்ஸ்' விளம்பரம் நகரின் மையத்தில் இருந்த அந்த திருமண மண்டபத்தின் முன் மின்னியது.
திருமண மண்டபத்தின் உள்ளே உட்கார்ந்திருந்தனர், சந்தோஷும், ப்ரீத்தியும். போட்டோவில் பார்த்ததை விட, நேரில் பார்க்க இன்னும் அழகாக இருந்தனர்.
திருமண பெண்ணுக்கான அலங்காரத்தில் தேவதையாய் மின்னிக் கொண்டிருந்தாள், ப்ரீத்தி.
மாப்பிள்ளை, சந்தோஷ், சொர்க்கத்தின் உச்சியில் இருந்தது போல இருந்தான். வருங்கால மனைவியின் அழகை பார்த்து, பார்த்து ரசித்து கொண்டிருந்தான்.
சந்தோஷ் அருகே நெருங்கிய, அவன் நண்பன் கணேஷ், ''உங்க அம்மா முற்போக்கு எண்ணம் கொண்டவங்க. ப்ரீத்தியோட அம்மாவும் உங்க அம்மா மாதிரியே தைரியசாலின்னு கேள்விப்பட்டேன். ஊர்ல புகழ் பெற்ற வழக்கறிஞராச்சே, அவங்கள தெரியாம யாராச்சும் இருக்க முடியுமா?'' என்றான்.
அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே, தெரிந்தவர்கள் வந்து விட, அவர்களை, ப்ரீத்திக்கு அறிமுகம் செய்து வைத்தான், சந்தோஷ்.
முகூர்த்த நேரம் நெருங்கி கொண்டிருந்ததால் அதற்கான ஏற்பாடுகள் நடக்க ஆரம்பித்தன.
சந்தோஷின் மனம் முழுதும், ப்ரீத்தியே நீக்கமற நிறைந்திருந்தாள். மூன்று ஆண்டுகள் உயிருக்குயிராய் காதலித்தவள். இன்னும் சற்று நேரத்தில் மனைவியாக போகிறவள்.
ச ந்தோஷுக்கு அப்பா இல்லை. சிறிய வயதிலேயே விபத்து ஒன்றில் இறந்து விட்டார். அப்போது, சந்தோஷுக்கு வயது, ஐந்து.
சந்தோஷின் அப்பா, மகாலிங்கம். சிறிய அளவில் ஜவுளி கடை வைத்திருந்தார். நகரின் மத்தியில் இருந்ததால் நன்றாகவே வியாபாரம் ஆனது.
மகாலிங்கத்தின் மனைவியின் பெயர், மங்களம். கணவன் இறந்ததும் இடிந்து உட்கார்ந்து விடவில்லை, மங்களம். துக்கம் இருந்தாலும் மறைத்துக் கொண்டு கடையை எடுத்து நடத்த ஆரம்பித்தாள்.
கடும் உழைப்பு. இதோ... இன்று கடை விருத்தியடைந்து, ஒன்றுக்கு மூன்று ஜவுளி கடலாக நிற்கிறது.
ப்ரீத்தியின் அம்மா, அகிலா, நகரின் புகழ் பெற்ற முன்னணி வழக்கறிஞர். அவளை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பார் கவுன்சிலில் அகிலாவுக்கென்று தனி மரியாதை உண்டு.
அகிலா எடுத்த வழக்குகள் எதிலும் தோற்றதில்லை. அகிலா என்றால், நீதிபதியே மரியாதையாக தான் பார்ப்பார். காரணம், 'பொய்யான கேஸ் எதையும் அவள் எடுக்க மாட்டாள்...' என்று அவருக்கு தெரியும்.
அகிலா, சிங்கிள் மதர். அகிலாவுக்கும், சந்தேக பேர்வழியான அவள் கணவனுக்கும் ஒத்து வராமல், 20 ஆண்டுகளுக்கு முன்பே, விவாகரத்து செய்து விட்டாள்.
அகிலாவுக்கு ஒரே மகளான, ப்ரீத்தி, பெரிய கம்பெனி ஒன்றில், அக்கவுன்ட்ஸ் மேனேஜராக பணிபுரிந்தாள்.
ச ந்தோஷுக்கு வரன் பார்க்க ஆரம்பித்தாள், அவன் அம்மா, மங்களம்.
இருபதுக்கும் மேற்பட்ட பெண்களை, சந்தோஷ், காரணமே இல்லாமல் நிராகரிக்க, மங்களத்துக்கு சந்தேகம் வந்தது.
ஒருநாள், ''என்ன சந்தோஷ், வர்ற பெண்களை எல்லாம் வேணாம்ன்னு சொல்ற. என்ன காரணம்?'' என்று கேட்டே விட்டாள்.
இவ்வளவு நாள் அம்மாவிடம் சொல்ல தயங்கிய, சந்தோஷ், இது தான் சமயமென, அவன் கம்பெனியில் பணிபுரிந்த, ப்ரீத்தி பற்றி சொல்லி விட்டான்.
அம்மாவிடம் போட்டோவையும் காட்ட, மங்களத்துக்கு முழு திருப்தி.
கல்யாணம் நிச்சயமாகி, இதோ இன்று திருமணத்தில் நிற்கிறது.
மாப்பிள்ளைக்கும், பெண்ணுக்கும் நலங்கு வைக்கும் வைபவம் ஆரம்பித்தது.
அங்கு அமர்ந்திருந்த பெண்கள் ஏழு பேரை அழைத்துக் கொண்டு மேடை ஏறினாள், மங்களம்.
மண்டபத்தில் அமர்ந்திருந்த அத்தனை பேருக்கும் அதிர்ச்சி.
அந்த ஏழு பெண்களும், கணவனை இழந்தவர்களும், விவாகரத்து வாங்கி, சிங்கிள் மதராக வாழ்பவர்கள் என்பது தான் அதிர்ச்சிக்கான காரணம்.
''என்ன இது? மங்களத்துக்கு பைத்தியம் ஏதும் பிடிச்சுப் போச்சா? கணவனை இழந்தவர்களையும், சிங்கிள் மதரா வாழ்றவங்களையும் நலங்கு வைக்க கூட்டிட்டுப் போறா? மங்களகரமான கல்யாணத்துல சுமங்கலிகளை மட்டும் தானே நலங்கு வைக்க கூட்டிட்டு போவாங்க?'' என, பக்கத்தில் இருந்த தன் உறவுக்காரியிடம் சொன்னாள், பெண் ஒருத்தி.
''அதானே. இதென்ன புதுப் பழக்கம்? இவதான் சின்ன வயசுலயே புருஷனை விபத்துல பறி குடுத்தா. இப்ப வரப் போற பொண்ணாச்சும் பூவும், பொட்டுமா சந்தோஷமா தன் மகன் கூட ஆயுசு பூரா வாழணும்ன்னு நினைக்கற ஒரு தாய் செய்ய கூடிய வேலையா இது? இதென்ன அபசகுனமா,'' முகத்தை சுளித்துக் கொண்டு பதில் சொன்னாள், அவள்.
''வேற ஒண்ணுமில்ல. தனியாளா நின்னு முன்னுக்கு வந்து குடும்பத்தையும், பையனையும் கரையேத்திட்டா இல்ல. அந்த திமிர்தாங்க. வேற என்ன,'' என்று அடுத்த சேரில் உட்கார்ந்திருந்த, இன்னொரு பெண் இடைமறித்து சொன்னாள்.
திருமண மண்டபம் முழுவதும் சலசலப்பானது. ஆனால், எதையும் கண்டுகொள்ளவில்லை, மங்களம்.
யாருக்கும் பிடிக்கவில்லை தான். ஆனால், மங்களத்திடம் சென்று கேட்கும் துணிச்சல் யாரிடமும் இல்லை.
பெண்ணும், மாப்பிள்ளையும் உட்கார்ந்திருக்க, அவர்கள் அருகில் ஏழு பேரையும் அழைத்துச் சென்றாள், மங்களம்.
''உங்க பக்கம் நலங்கு வைக்க ஏழு பேர் தயார் தானே?'' என்று, அகிலாவிடம் கேட்டாள், மங்களம்.
''ம், தயாரா இருக்காங்க,'' என்றாள், அகிலா.
''எல்லாரும் நான் சொன்ன மாதிரி தானே,'' என்றாள், மங்களம்.
''ஆமாங்க. நீங்க சொன்ன மாதிரி கணவனை இழந்தவர்களும், சிங்கிள் மதர்சும் தான்,'' என்றாள், அகிலா.
''ஓ.கே., வாங்க,'' என்று, அனைவரையும் அழைத்துக் கொண்டு மாப்பிள்ளை, சந்தோஷின் அருகில் போனாள், மங்களம்.
''மங்களம் நில்லு,'' என, திடீரென சத்தமிட்டார், மங்களத்தின் மாமா.
''என்ன மாமா?''
''நீ பண்றது உனக்கே சரின்னு படுதா? மங்களம்.''
''என்ன தப்பா பண்ணிட்டேன், மாமா?''
''நலங்கு வைக்க சுமங்கலிகளை கூட்டிட்டு வர்றது தான் ஊர் வழக்கம், மங்களம்.''
''ஏன் இவங்கள வச்சா என்ன, மாமா? நான் கணவனை இழந்தவள். பொண்ணோட அம்மா, சிங்கிள் மதர். நாங்க இருக்கலாமா. இல்ல நாங்களும் போயிடணுமா?'' என்றாள், மங்களம்.
அந்த கேள்வியை எதிர்பார்க்காமல் திகைத்தார், மங்களத்தின் மாமா.
''மாமா, நானும், பொண்ணோட அம்மா அகிலாவும் புருஷன் இல்லாதவங்க தான். அதுக்காக எந்த வகையில தாழ்ந்து போயிட்டோம்? சொந்த கால்ல தைரியமா, தன்னம்பிக்கையோட, எந்த உதவியும் இல்லாம உழைச்சு, முன்னேறி இன்னைக்கு சமுதாயம் மதிக்கிற இடத்துல உயர்வா, மதிப்போட தானே, மாமா இருக்கோம். எங்களுக்கு இருக்கற தைரியமும், தன்னம்பிக்கையும், உழைப்பும் இதோ, புருஷன் இல்லாம தனியா உழைச்சு வாழற இந்த, 14 பெண்களுக்கும் இருக்கு. அவங்க எல்லாரும் உழைப்பால முன்னேறி இன்னிக்கு பெரிய இடத்துல கம்பீரமா இருக்காங்க.
''இதோ இன்னிக்கு திருமணம் பண்ணி தாம்பத்தியத்துல அடி எடுத்து வைக்கிறாளே, அவளுக்கு, எங்கள முன்மாதிரியா காட்ட விரும்பினோம். குடும்பத்துல இன்பம், துன்பம், கஷ்டம், நஷ்டம் எது வந்தாலும் தைரியத்தையும், தன்னம்பிக்கையும், உழைப்பையும் கை விட்டுட கூடாது. யாரையும் நம்பி இருக்க கூடாது. நமக்கு நாமே துணை. எவ்வளவு சோதனை வந்தாலும் சோர்ந்துட கூடாது. தைரியம், தன்னம்பிக்கை, உழைப்பு போதும், வாழ்க்கைல முன்னேறிடலாம். அதுக்கு நாங்களே சாட்சின்னு இவங்களுக்கு எங்க வாழ்க்கையை உதாரணமா காட்டணும்ன்னு விரும்பினேன். இந்த காலத்து பசங்களுக்கு இதுதானே, மாமா தேவை,'' என்றாள், உறுதியாக, மங்களம்.
''ஆனாலும்மா...'' என்று இழுத்தார்.
''ஒருத்தரை வாழ்த்த புருஷன் இருக்கணும்ன்னு அவசியமில்ல, மாமா. நல்ல மனசு இருந்தா போதும். இவங்க எல்லாரோட மனப்பூர்வமான ஆசியும் இவங்க ரெண்டு பேருக்கும் உண்டு. எந்த குறையும் இல்லாம சந்தோஷமாவே வாழ்வாங்க. நீங்க நலங்கு வைக்க ஆரம்பிங்க,'' என்றாள், மங்களம்.
கே. ஆனந்தன்

