PUBLISHED ON : ஜூலை 05, 2026

தன் முடிவில் தீர்க்கமாக இருந்தாள், காயத்ரி. தன் கணவன் நிதினின் முன்னாள் காதலி, பவித்ராவை சந்தித்து பேசி, அவளை, தன் கணவனுடன் சேர்த்து வைத்து விடுவது என்று முடிவு செய்து, பவித்ராவை சந்திக்க, ஆட்டோவில் சென்றாள், காயத்ரி.
''இந்த தெருதாம்மா நீங்க சொன்ன, ஜீவா நகர். இங்கே யார் வீடு?'' ஆட்டோக்காரர் கேட்டதும், ''பவித்ரா வீடு எதுன்னு கேளுங்கண்ணா,'' என்றாள், காயத்ரி.
''இங்கே, நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கு. வெறும், பவித்ரான்னு கேட்டா, எப்படி விலாசம் சொல்வாங்க. எத்தனையோ, பவித்ரா இருக்கலாமே?'' என்று சந்தேகம் எழுப்பினார், அவர்.
''கல்லுாரி பேராசிரியர்ன்னு சொல்லி, விசாரிங்கண்ணா. அதோ, அங்க ஒரு பெரியம்மா வர்றாங்க. அவங்கள விசாரிங்க.''
விசாரித்தார். பவித்ரா வீடு அடையாளம் காட்டப்பட்டது.
வீடு பொலிவாக இருந்தது. சின்ன, 'பட்ஜெட்'டில் ரசனையோடு கட்டியிருந்தனர்.
'காலிங்பெல்'லை அழுத்தி காத்திருந்தாள், காயத்ரி.
''யாரு வேணும்?'' கதவு திறந்து கேட்டவள், பவித்ரா தான்.
அழகாய் இருந்தாள். தேவதை அம்சம்.
''பவித்ரா?''
''நான் தான், பவித்ரா. நீங்க?'' அவளின் குரல் கேட்க இனிமையாக இருந்தது.
''நான், நிதின் மனைவி, காயத்ரி,''- இதைக்கேட்டதும், மெல்லிய அதிர்வும், சந்தோஷமும் அடைந்த பவித்ரா, ''எந்த நிதின்?'' என்று தெரியாதது போல கேட்டாள்.
''உங்க, நிதின். நீங்க காதலிச்ச, உங்களை காதலிச்ச, நிதின்,'' என்று, காயத்ரி சொன்னதும், துணுக்குற்றாள், பவித்ரா. அவளை உள்ளே அழைத்து உட்கார வைத்தவள்.
''அதெல்லாம் பழைய கதை. இப்ப எதுக்கு? உங்களுக்கு என்ன வேணும்?'' என்று கேட்டு வியர்த்து நின்றாள், பவித்ரா.
சின்னதாய் விசும்பினாள், காயத்ரி. கண்களில் நீர், குளம் கட்டியது. பேச, சற்று நேரம் எடுத்துக் கொண்டாள். பவித்ராவுக்கு எதுவும் புரியவில்லை. அவளே பேசட்டும் எனக் காத்திருந்தாள்...
''உங்களை எப்படி கூப்பிடறதுன்னு தெரியலை. உங்களுக்கும், என் வயசுதான் இருக்கும். அதனால, பவின்னே கூப்பிடறேன். நான், பி.எஸ்சி., கெமிஸ்ட்ரி முடிச்சிருக்கேன். படிப்பு முடிச்ச கையோட, அப்பா கல்யாணம் செஞ்சு வெச்சுட்டார். பள்ளி, கல்லுாரி எல்லாம் மகளிர் மட்டும் என்பதாலோ, இல்லை அம்மாவை இழந்துவிட்ட காரணத்தாலோ, குடும்பப் பொறுப்புகள் அதிகமாகிவிட்டதாலோ எனக்கு காதல் எல்லாம் வரலை. ஒரே தம்பி.
''எனக்கு திருமணமாகி, மூன்று ஆண்டுகள் ஆகிறது. இன்னும், நிதின் உங்க நினைப்பிலேயே இருக்கிறார். என்னை ஏற்றுக்கொள்ள அவர் மனம் மறுக்கிறது. நான் நெருங்கிப் போனாலும், என்னிடமிருந்து விலகிப்போகிறார். ஒருநாள், ஆற அமர மனம் விட்டு பேசியதில், அவர் இன்னும் உங்களை காதலிப்பதையும், நீங்கள், அவர் நினைப்பிலேயே இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்வதையும் தெரிந்துகொள்ள முடிந்தது. உங்கள் இருவரின் வாழ்க்கையும் தெரிந்தோ, தெரியாமலோ என்னால் வீணாகி விட்டது. மன்னித்து விடுங்கள்.
''நான் விலகிக்கொள்கிறேன். நீங்கள் இருவரும் சேர்ந்து வாழவேண்டும். யாரைப்பற்றியும், எதைப்பற்றியும் கவலைக் கொள்ளாதீர்கள். நான் இருக்கிறேன். உங்கள் இருவரையும் இணைத்து வைப்பேன்,'' என, மனதை கல்லாக்கிக்கொண்டு, பிரிந்து வாழும் காதலர்களை சேர்த்து வைக்க, பவித்ராவிடம் பேசிக் கொண்டிருந்தாள், காயத்ரி.
''நிதினை எனக்கு ரொம்ப பிடிக்கும். சராசரியைவிட கொஞ்சம் உயரம். பல்வரிசை தெரிய சிரிப்பார். அன்பான மனசு. ரெண்டு பேரும் ஒரே காலேஜ். ஒரே பஸ்ல ஒன்றாகவே போவோம், வருவோம். கூட்டமாய் இருந்தால், பஸ்ஸில் எனக்கு அவரும், அவருக்கு நானும் இடம் போட்டு வைப்போம். பேசிக்கொண்டே வருவோம்.
''அப்ப எல்லாம் மனசுல காதல் இல்லை. காலேஜ் முடியறப்பதான் இனி ஒருத்தரை ஒருத்தர் சந்திக்க முடியாதே, பேசிக்க முடியாதே என்று நினைச்சப்ப தான் காதல் வந்திருக்கணும். அதன் பிறகு எப்போதும் போல் எங்களால் நட்பாக பேசிக்கொள்ள முடியவில்லை. இருவரின் இதயத்திலும் காதல் வந்துவிட்டது. காதலை வெளிப்படையாக சொல்லிக் கொள்ளவில்லையே தவிர, பார்வைகள் மூலம் காதலை உணர்ந்து கொண்டுதான் இருந்தோம். முன்புபோல கண் பார்த்து பேச முடியவில்லை.
''நான் அவரிடம் காதலைச் சொல்லவேயில்லை. அவரும், என்னிடம் காதலை சொல்லவேயில்லை. காதலால் ஒரு பரிசுத்தமான நட்பு கெட்டு விடுமோ என்ற தயக்கம்தான் அதற்கு காரணம்.''
பவித்ரா, தன் காதலை விவரித்துக் கொண்டு போனதை அமைதியாய் கேட்டாள், காயத்ரி.
''வீட்டில் சொல்லியிருந்தால் ஒருவேளை எங்கள் காதலை ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால், சொல்ல எங்களுக்குதான் தயக்கம். கனவுகளில் காதலித்து, கற்பனையாய் வாழ்ந்து கொண்டிருக்கையில் திடீரென ஒருநாள் 'எனக்கு திருமணம்' என, நிதினிடமிருந்து பத்திரிகை வந்தது. இடிந்து போனேன். அன்று முழுக்க அழுது தீர்த்தேன். நிதின், இனி எனக்கானவன் இல்லை என்ற நிஜம், என் நெஞ்சை சுட்டது.
''பிறகு என் கண்ணீரெல்லாம் காய்ந்தாலும், என் காயங்கள் ஆறவில்லை. உங்கள் திருமணத்திற்கும் நான் வரவில்லை. அதன்பிறகு, நிதினை நான் பார்க்கவே இல்லை. அதோடு எங்கள் காதல் முடிந்து போனது. இவ்வளவுதான் என் காதல் கதை. காதலிச்ச நாங்களே காதலை சொல்லிக்கலை. நாங்க காதலிச்சதா, நிதின் சொல்ல, உடனே நீங்க இங்கே புறப்பட்டு வந்திட்டீங்க. அப்படித்தானே?''
''இது உடனே எடுத்த முடிவு இல்லை. மூணு வருஷம் காத்திருந்து எடுத்த முடிவு.''
''இது அபத்தமாக இல்லையா? கட்டியவன் கைவிட்டா, போலீஸ், கோர்ட், கேசுன்னு போறதை விட்டுட்டு, என்கிட்ட வந்து நிற்கறீங்களே?''
''நிதினை தண்டிக்க அவர் என்ன தப்பு பண்ணினார்? நான், 'பிராக்டிக்கலா' யோசனை பண்ற பொண்ணு. இதற்கு இதுதான் தீர்வுன்னு நல்லா தெரிஞ்சுதான் வந்திருக்கேன்.''
''சரி. ஆனா, உங்க முடிவுக்கு நான் ஒத்துக்கமாட்டேன். அவர், என் காதலரா இருந்தாலும், அவர் இப்ப, உங்க கணவர். அட்சதை துாவி, அக்னி வலம் வந்து, தாலி கட்டி சேர்ந்த ஜோடி நீங்க. இறைவன் விருப்பம் உங்களை இணைக்கறதுதான். எங்களை இணைக்கறதா இருந்தா கடவுள் எப்பவோ ஜோடி சேர்த்திருப்பார்.
''நிதின், இன்னமும் என்னையே நினைச்சுக்கிட்டு இருக்கிறதும் தப்பு. நினைவு, ஒரு சுகம் தான். அவருடைய நினைவில் தான் நானும், திருமணத்தைத் தள்ளிப் போட்டுக்கிட்டே வாழ்ந்துக்கிட்டிருக்கேன். நான் பண்றதும் தப்பு தான். ஆனாலும், அந்த கற்பனையான சுகம் பிடிச்சிருக்கு. இது நிஜமில்லை. நிரந்தரமில்லைன்னு எனக்கும் தெரியும். மன்னித்துக்கொள், காயத்ரி.
''இதனால உங்க வாழ்க்கை பாதிக்குதுங்கறப்போ, நானே ஒரு தீர்வு தேடறதுதான் சரி. நான் நாளைக்கு நேர்ல வந்து, நிதின்கிட்ட பேசறேன். விருப்பமானவர்கள் சொல்லும்போது அந்த பேச்சுக்கு மதிப்பு இருக்கும். நான் சொன்னால் கேட்டுக்கொள்வார். பேசறேன்,'' என்று, தீர்க்கமாகவும், தெளிவாகவும் சொன்னாள், பவித்ரா.
ம றுநாள் -
காயத்ரி வீட்டிற்கு சென்றாள், பவித்ரா.
நிதினும், பவித்ராவும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டபோது, கண்கள் ஈரமாகி கலங்கி நின்றது இருவருக்கும்.
''பவித்ரா நீயா?'' கேட்டான், நிதின்.
காதலில் தோற்றவனுக்கான அத்தனை முகபாவமும், சோகமும் வலியும், இருளடைந்த கண்ணுமாய் இருந்தான். பவித்ராவைக் கண்டதும் ஒரு உற்சாகம், ஒரு சந்தோஷம் சுனை ஊற்று போல மனதெங்கும் பரவ சிலிர்த்தான்.
''நிதின்! நீ என்னை காதலிக்கிறாயா?'' என்று, பவித்ரா நேரடியாக கேட்க, மவுனமாக இருந்தான்.
''சொல்லு... மவுனமாய் இருந்தா என்ன அர்த்தம்? ''
''ஆமா.''
''இதை கல்லுாரியில் படிக்கையிலயே சொல்லியிருந்தா, காயத்ரியின் வாழ்க்கை வீணாகி இருக்காதே... சொல்ல வேண்டிய நேரத்தில் காதலை சொல்லாமல், இப்ப சொல்லி என்ன ஆகப்போகிறது?''
''நீயாவது சொல்லியிருக்கலாமே, பவி?''
''தப்புதான்! காதலால் நம்ம நட்பு கெட்டுடுமேன்னு பயந்தேன்.''
'' நானும் தான்.''
''சரி, போனது போகட்டும். நான் சொல்வதை கேட்பியா?''
''மனசுக்கு பிடிச்ச நீ சொன்னா கேட்காம இருப்பேனா?''
''காயத்ரி தான் நான்னு நினைச்சுக்கோ. என்கூட வாழ்ந்தா எப்படி சந்தோஷமா வாழ்வியோ, அது போல, காயத்ரி கூட வாழ முயற்சி செய். அதுதான் நம் காதலுக்கு பெருமை. நம்மால் ஒரு பெண் அழக்கூடாது.''
பேசிப்பேசி, நிதினின் அலைபாய்ந்த மனசை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்தாள், பவித்ரா.
அவள் பேச்சுக்கு மறுபேச்சு, நிதினிடம் கிடையாது. செய் என்றால், செய்து முடிக்கற மனசு அவனுக்கு.
நிதின் யோசிக்கவே இல்லை.
''உன்னை திரும்ப பார்த்ததும், உன் பேச்சைக் கேட்டதுமே போதும் எனக்கு. என்றைக்கும் என் நினைவில் நீ இருப்பாய்; உன் நினைவில் நான் இருப்பேன். அது போதும் நம் காதலுக்கு. நீ சொன்னது போலவே, காயத்ரியோடு இனி சந்தோஷமாய் வாழ்வேன். நீயும், திருமணம் செய்துகொள். காயத்ரி அப்பாவி. எந்த பாவமும் செய்யாதவள். அவளுக்கு துரோகம் இழைக்க மாட்டேன்,'' என்று உறுதியாக சொன்னான், நிதின்.
பவித்ராவுக்கு மனம் குளிர்ந்தது. கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டு புறப்பட்டாள்.
வீட்டில் வரன் பார்க்கச் சொல்லி, உடனே திருமணம் செய்து கொள்ளவும் முடிவெடுத்தாள். கணவனாக வரப்போகிறவனை, இன்னொரு, நிதினாய் காதலித்து வாழவும் ஆசைப்பட்டாள்.
@block_B@ நம்பிக்கையோடு முதலில் நீ எழு. பிறகு தான், உன்னால் நடக்க முடியும். டேவிட் ஹியூம்@@block_B@@
@block_B@ சாதனைமிக்கவர்களை மட்டுமே உலகம் என்றும் நினைவு கொள்கிறது. சிக்மண்ட் பிராய்ட்@@block_B@@
@block_B@ வல்லவன் என்றாலும் நல்லவன் இல்லை எனில் உலகம் வெறுத்து ஒதுக்கி விடும். டாக்டர் ஹில்@@block_B@@
