
''அப்பா முடிவா என்ன சொல்றீங்க?''
''என்னடி இப்படி பேசுவது நல்லாவா இருக்கு? இப்படி கேட்டு நானோ, இல்லை அவரோ என்ன பதில் சொல்வோம் என்று எதிர்பார்க்கிறே?''
''அம்மா நீ எதற்கெடுத்தாலும் அழுது விடுவாய். அப்பா உணர்ச்சிவசப்பட மாட்டார். நிதானமாக முடிவெடுப்பார். முடியும், இல்லை முடியாது என்று மட்டும் சொல்லலாம். நீங்க சொல்ற பதிலை வைத்து தான், நான் மேலே என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும்,'' என்றாள், கனகா.
''கனகா சாரிமா. எங்களால் இந்த வயதில் அந்த சுமையைத் தாங்க முடியாது.''
''ஓ.கே., அப்பா. நீங்க, 'பிராக்டிக்கலாக' உங்கள் முடிவை எடுத்து இருக்கிறீர்கள். நான் அதற்கெல்லாம் வேண்டிய ஏற்பாடு செய்து விடுகிறேன்.''
''சாரிமா. எங்களுக்கும் யார் இருக்கா? எங்கள் இருவர் மனதிலும் சுத்தி, சுத்தி நீ தான் வருவாய்,'' என்று புடவை தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டாள், அம்மா.
''சரிம்மா, ரொம்ப, 'சென்டிமென்ட்'டைக் கொட்டாதே. உன் உடம்பு தான் கெடும். நான் மாற்று ஏற்பாடு பண்ணும் வரை, இரண்டு நாட்களுக்கு எனக்கு உதவி செய்து விடு. நான் இப்போ கொஞ்சம் வெளியில் போய் வருகிறேன். அவனுக்கு ஒரு மணிக்கு பால் கொடுக்க வேண்டும்.''
''சரி ஜாக்கிரதை. வண்டியில் போகும்போது, கவனம் வேற எதிலும் வைக்க வேண்டாம்.''
அவள் போனவுடன், கணவனைப் பார்த்து, ''என்னங்க இது நல்லா இருக்கா?'' அழுகை பேச்சை தடை செய்தது.
''வாழ்வில் எல்லாரும் வேண்டுவது என்ன? வாழும் காலத்தில் மன நிறைவுடன் வாழ வேண்டும். அவள் தீர்மானங்களில் அவளுக்கு மன நிறைவு கிடைத்தால் அவளுடைய வாழ்க்கை சரியாகவே போய்க் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்,'' என்றார், கனகாவின் அப்பா.
அவர்களுடைய நினைவு பின்நோக்கி சென்றது...
ம கள் பிளஸ்2வில், மாநில அளவில், 'ரேங்க்' வாங்கியதும் எல்லாரும் அவளை மெடிக்கல் அல்லது இன்ஜினியரிங் சேருவாள் என, எதிர்பார்த்தனர்.
'அம்மா நான், ஐ.ஏ.எஸ்., படித்து கலெக்டர் மட்டும் தான் ஆவேன். ஏதோ, ஐ.டி., நிறுவனத்தில் நுழைந்து, அமெரிக்கா சென்று டாலரில் சம்பாதித்து, பணக்கார பையனை கல்யாணம் செய்து, குடும்பம் நடத்துவேன் என்று கனவு கண்டால், அதற்கு நான் ஏன் பலியாக வேண்டும்.
'எனக்கு என்று சொந்த எண்ணங்கள், எதிர்பார்ப்புகள், ஆசைகள் இருக்கும். அதனால், நீங்கள் எவ்வளவு சொன்னாலும் நான், என் முடிவில் இருந்து மாற மாட்டேன். எது நடந்தாலும் அதற்கு நானே பொறுப்பு. உங்களை எதிலும் பொறுப்பாளியாக்க மாட்டேன்...' என்றாள், கனகா.
'உன் இஷ்டம் போல் படிமா...' என, 'கிரீன் சிக்னல்' கொடுத்து விட்டார், அப்பா.
ஏதோ ஒரு புதியதாக ஆரம்பித்த கோர்ஸ்; அதில் சேர்ந்தாள். அதிலும், 'கோல்ட் மெடல்.' ஐ.ஏ.எஸ்., டிரெயினிங் என்று ஏதோ ஒரு அகாடமியில் சேர்ந்து, முதல் தடவையே பாஸ் செய்து, அகாடமிக்கு பெருமை சேர்த்தாள். ஐ.ஏ.எஸ்., பாஸ் செய்தி கேட்டு, எல்லாரும் பாரட்டினர்.
கலெக்டருக்கான, 'டிரெயினிங்' நடந்து முடிந்தது.
அவள், 'போஸ்டிங்' டில்லியில், சமூக நலத்துறைக்கே வந்தபோது, தன்னை மறந்தாள்.
டில்லியில் வேலைக்கு சேர்ந்த ஒரு ஆண்டுக்குள், அப்பாவிடம் தனக்கு திருமண ஏற்பாடு செய்ய சொன்னபோது, அப்பாவிற்கு ஒன்றுமே புரியவில்லை.
மனைவியிடம், 'ஏதாவது, 'லவ்' விஷயமா?' என, மெதுவாக கேட்கச் சொன்னார்.
அம்மா, மெதுவாக விசாரித்த போது, 'அப்படி ஏதாவது இருந்தால், நான் அப்பாவை ஏன் ஏற்பாடு செய்யச் சொல்கிறேன்...' என்று திருப்பிக் கேட்டாள்.
'ஏம்மா இப்போதான் வேலையில் சேர்ந்தே, வயதும் அப்படி ஒன்றும் ஆகிவிடவில்லை அவசரமா?' என்று கேட்டார், அப்பா.
'அப்பா, இது சரியான வயது. சரியாக சொல்லப் போனால் கொஞ்சம் ஓவர் கூட. ஒரு பெண்ணின் முக்கியமான கடமை, அடுத்த தலைமுறைக்கு நல்ல மக்களை உருவாக்குவது தான்.
'இப்போதெல்லாம், பெண்கள், 'காரியர் பிளான்,' சுதந்திரமாக இருப்பது என்று மேல்நாட்டை பார்த்து, 32 வயதிற்கு மேல் குழந்தை பெற வழி இல்லாமல், கரு மையம் போய், லட்சக்கணக்கில் பணத்தைக் கொட்டி... நான் சொல்லக்கூடாது. தகப்பன் பேர் தெரியாத குழந்தைகளுக்கு தாயாய் வேஷம் போடுகின்றனர்.
'அது கூட நல்ல குழந்தைகள் சமூகத்துக்கு கொடுக்க வேண்டும் என்ற பொறுப்போ, அக்கறையோ இல்லாமல், கார், வீடு போல், ஒரு குழந்தை வேண்டும். அவ்வளவே! பருவத்தே பயிர் செய் என்று சொல்வது பயிர்களுக்கு மட்டும் இல்லை. எல்லா உயிர்களுக்கும் தான்...'
அதற்கு மேல் பேச்சை வளர்த்தவில்லை. கனகாவின் அப்பா. டில்லியில், ஐ.ஏ.எஸ்., படித்த வரனே கிடைத்தது.
கல்யாணமும் சிறப்பாக நடந்து முடிந்தது.
மாப்பிள்ளை கூட, குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளி வைக்கலாம் என்று கேட்டதாகவும், அதற்கு மகள், 'நோ' என்று திட்டவட்டமாக சொன்னதாகவும் கேள்விப்பட்டனர். அவள் அம்மாவுக்கு பரம திருப்தி.
'ஸ் கேன், செக்-அப்' எல்லாம் முறையாகத் தான் நடந்தது. ஆனால், குழந்தை பிறந்த ஒரு மாதத்தில் ஏதோ வித்தியாசம் தெரிந்தது. குழந்தைக்கு, எட்டு மாதம் ஆன போது, வித்தியாசம் பெரிய அளவில் தெரிய ஆரம்பித்தது.
'குழந்தையை பார்த்துக் கொண்டிருந்தால், உன் வேலை கெட்டு விடும். உனக்கும், மன வருத்தம் அதிகமாகும். ஒரு ஆயாவை முழு நேரமாகப் போட்டு விடலாம். உங்க அப்பா - அம்மா வேண்டுமென்றாலும் வரலாம். உனக்கு ஆறுதலாக இருக்கும்...' என்றார், கனகாவின் கணவர்.
'காரணமின்றி வருவதும் இல்லை; காரியம் முடியாமல் போவதும் இல்லை...' என்றாள், கனகா.
'என்ன சொல்றே, கனகா?' எல்லாரும் ஏக காலத்தில் கேட்டனர்.
'நான் ராஜினாமா செய்யப் போகிறேன். எனக்கு இனிமேல் இந்த செல்லக் குழந்தை தான் எல்லாம்!'
'நாளை நான், டில்லிக்கு புறப்படுகிறேன்...' என்றார், கணவர்.
'நீங்கள் போய் வாருங்கள். நான், என் பையனுடன் இருப்பேன்...' என்றாள்.
'அதற்கு, என் சம்மதம் தேவை என்று உனக்கு தெரியுமா?'
'தெரியும். சம்மதம் கிடைக்காவிட்டால், விவாகரத்து கோருவேன் என்பதையும், கூடுதலாக தெரிந்து கொள்ளுங்கள்...' என்றாள், கனகா.
எல்லாரும் அப்படியே திகைத்து நின்றனர்.
'ஐ.ஏ.எஸ்., படித்து விட்ட கர்வம். எனக்கு, நீ எப்போதுமே வேண்டாம்...' என்று சீறினார், கனகாவின் கணவர்.
'உங்கள் விருப்பம் அது என்றால், நீங்கள் தாராளமாக செய்யலாம்...'
பழைய நினைவில் மூழ்கி போயிருந்தவர்கள், கனகாவின் குரல் கேட்டு, நினைவுலகத்துக்கு வந்தனர்.
''அ ம்மா, அம்மா நான் போனதிலிருந்து அப்படியே ஆணி அடிச்ச மாதிரி உட்கார்ந்து விட்டாயா? நான் வெளியே போய், நான்கு மணி நேரம் ஆயிடுச்சு. அம்மா, என் பிரண்ட்கிட்டே பேசினேன். அவளுடைய சொந்தக்காரருக்கு கூட இந்த மாதிரி, 'ஆட்டிசம்' பாதித்த குழந்தை இருக்காம். அவரும், இந்த பிரச்னையை சரியாக புரிந்து கொண்டார்.
''அவர் வீட்டிலேயே வாடகை எதுவுமின்றி நான் தங்க ஏற்பாடு செய்து விட்டார். அவர் குழந்தையையும் பராமரிக்கணும். தனி வீடு. மூன்று பெட்ரூம். கீழே குழந்தைகளுடன் நான் இருக்கலாம் என சொல்லி விட்டார். பெரிய பிரச்னை தீர்ந்தது. ஏரியாவும் சூப்பர். ஐ.ஏ.எஸ்., 'கோச்சிங் சென்டர்' துவங்கப் போறேன்,'' என்றாள், கனகா.
''என்னமோ போம்மா! எனக்கு என்ன சொல்றதுன்னு புரியவில்லை. நீ எங்கே இருந்தாலும், என்ன செய்தாலும் நல்லாவே இருப்ப,'' என்றார், அப்பா.
'க னகா ஐ.ஏ.எஸ்., அகாடமி' போர்டுடன் இடம் பெயர்ந்தாள், கனகா.
அலமாரியில் விசேஷக் குழந்தைகள் பற்றியும், அவர்களை பராமரிக்க வழி சொல்லும் புத்தகங்கள் நிரம்பி வழிந்தன. ஐந்து பெண்கள் அகாடமியில் சேர்ந்தனர்.
ஒரு சமையல்காரர், தன் மகளுக்கு ஐ.ஏ.எஸ்., கோச்சிங் கொடுக்க முடியுமா என்றும், அவரால், காலையில் வந்து சமையல் செய்து கொடுக்க முடியும் என்றும், அதையே கட்டணமாக வைத்துக் கொள்ளும் படியும் கூறினார்.
'இது பெரிய விஷயம். ரொம்ப நன்றி. எனக்கு பெரிய, ரிலீப்!' என்றாள்.
பிரச்னை ஏதுமின்றி தன் பணியில் முழுவதும் ஈடுபடுத்தி, முழு மூச்சில் மாற்றுத்திறன் படைத்த குழந்தைகளுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டாள், கனகா.
நாளடைவில், 50 குழந்தைகள், ஐந்து உதவியாளர்கள் என்று அவளுக்கு மூச்சு விட நேரமில்லாமல் போயிற்று.
பக்கத்து வீடுகளில் வசிக்கும் சாதாரண குழந்தைகளை வாரம் ஒருநாள் இவர்களுடன் சேர்ந்து விளையாட ஊக்கப்படுத்தினாள். அவர்களும், ஆர்வத்தோடு சேர்ந்து விளையாடினர். அவர்களுக்கு, இவர்களோடு விளையாடுவது புது அனுபவமாக இருந்தது. மற்ற குழந்தைகளுக்கு, மாற்று திறனுள்ள குழந்தைகளை அனுசரித்து விளையாடவும் அவர்களை ஊக்குவிக்கவும் பழகிக்கொண்டனர்.
பெற்றோர்கள் இதை பெரியதாக பாராட்டினர். இதனால், 'ஆட்டிசம்' பாதித்த குழந்தைகள் மனநிலையில் மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தாள், கனகா.
பக்கத்து பிளாட்காரர், அவருடைய காலி மனையை, 'குழந்தைகள் விளையாட வேலி போட்டு தருகிறேன்...' என்று முன் வந்தார். விதவிதமான பயிற்சிகள், வித்தியாசமான விளையாட்டுகள். குழந்தைகள் எப்போதும் மகிழ்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் வளர்ந்தனர்.
ஆ ண்டுகள் கடந்தன. தேசிய அளவில் நடந்த மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டிகளில் நிறைய பரிசுகளை வாங்கி குவித்தனர், கனகாவிடம் வளர்ந்த குழந்தைகள்.
கனகாவின் கணவன், விளையாட்டுத் துறைக்கு செகரட்டரி ஆகி, பரிசு அளிக்க வந்திருந்தார்; கனகாவைப் பாராட்டினார்.
கனகாவைப் பார்த்து, 'வாழ்க்கையில், ஐ.ஏ.எஸ்., படித்து, இந்த மாதிரி வாழ்க்கைக்கு மாறியதை பற்றி எதையோ பெரியதாய் இழந்து விட்டதாக எண்ணி வருத்தப்பட்டு இருக்கிறீர்களா?' என்று கேட்டனர், 'டிவி' நிருபர்கள்.
''இல்லவே இல்லை. என் அடுத்த இலக்கு, இவர்களை ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு தயார் செய்வது தான்,'' என்றாள்.
இடைமறித்து, ''நீங்கள் அந்த கேள்வியை என்னிடம் கேட்டிருக்க வேண்டும். அவர் இதற்கு மேல் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்திருக்க முடியாது. ஆனால், ஒரு பெரிய அர்த்தமுள்ள வாழ்க்கையை, நான், 'மிஸ்' பண்ணி விட்டேனோ என்ற வருத்தம் என் அடிமனதில் இருக்கத்தான் செய்கிறது,'' என்றார், கனகாவின் முன்னாள் கணவர்.
எஸ். வெங்கட்ராமன் வயது: 83. படிப்பு: ஏ.எம்.ஐ.இ., பணி ஓய்வு பெற்றவர். சொந்த ஊர்: புதுக்கோட்டை. கதைக்கரு பிறந்த விதம்: பிரபல எழுத்தாளர், கமலேஷ் படேல் எழுதிய, 'தி விஸ்டம் பிரிட்ஜ்' என்ற நுாலில், ஒவ்வொரு உயிரும் ஒரு காரணத்திற்காக இவ்வுலகிற்கு வருகிறது. அதற்கு சாதகமான சூழ்நிலை உள்ள பெற்றோரை தெரிவு செய்கிறது...' என்று எழுதியிருந்தார். அதை படித்ததிலிருந்து உருவான கதை இது. ஜாதி, இனம், மொழி, நாடு என, எல்லாவற்றையும் கடந்து, மாணவர்களுக்கு நல்ல செய்தி சொல்லும் விதத்தில், உலக தரமான புத்தகம் ஒன்று எழுதி, வெளியிட வேண்டும் என்பது இவரது லட்சியம்.